Dec 30, 2010

அடித்து நொறுக்குங்கள் போலி இந்தியாவை

இந்தியன் என்பதில் பெருமை பட்டோம் எப்போது தெரியுமா? அண்ணல் அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை படித்த போது. எவ்வளவு நேர்த்தியாக ஒரு சனநாயகத்தை வடித்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

அம்பேத்காரின் அரசியல் சாசனம் 106 முறை மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. தினம் ஒரு நாட்டுடன் பல ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். எதற்காக நாட்டின் வளர்ச்சிக்காகவா? ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் நாட்டின் ஒவ்வொரு வளத்தையும் அயல்நாடுகளுக்கு கொள்ளை கொடுக்கிறார்கள்.

அலைகற்றை விவகாரத்தில் நாடாளுமன்றம் நடக்கவில்லை என்பது தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை பயன்படுத்தி நாடாளுமன்றம் நடக்காமலே 14 மசோதாக்களை நிறைவேற்றினார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியதால் நாட்டுக்கு 150 கோடி இழப்பு என்று வாய்சவடால் விடும் போலி இந்தியர்களே அப்புறம் ஏன் இந்த மசோதாக்களை எல்லாம் நிறைவேற்றினீர்கள்.

ஒவ்வொரு பெரிய பிரச்சனைக்கு பின்னும் பல துரோக மசோதாக்கள் நிறைவேறி விடுகின்றன. இதை யாரும் கண்டுகொள்ளாதது தான் வேதனை.

பலர் இன்னும் இந்தியாவின் பழம்பெருமைகளையே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் தாற்போது இருக்கிற இந்தியா என்பது என்ன? இந்திய மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் அரசாங்கங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணைபோகும் மனிதநேயம் அற்ற அரசியல்வாதிகள், இவர்களுக்கு பாதை வகுத்துக்கொடுக்கும் ஆட்சிப்பணி அதிகாரிகள், அதை சப்பை கட்டு கட்டும் ஆணையங்கள், ஆணையங்களுக்கு துணைபோகும் நீதிமன்றங்கள், இவை அனைத்திற்கும் புரோக்கர் வேலை செய்யும் பத்திரிக்கைகள், இவைகள் தெரிந்தும் தட்டிக்கேட்க வலுவில்லாத சமூக ஆர்வலர்கள், இவை எதுவுமே தெரியாமல் அன்றாடம் பிழைப்புக்கே பிச்சை எடுக்கும் பொதுமக்கள் இது தான் இன்றைய இந்தியா.

இன்று உலகளவில் மனிஉரிமை மீரல்கள் அதிகம் உள்ள ராணுவங்கள் பட்டியலில் மூன்றாம் இடம் இந்தியாவுக்கு தான். இலங்கைக்கு கூட 5 இடம் தான். இன்று உலக அளவில் அதிக லஞ்சம் ஊழல் உள்ள நாடு இந்தியா, தினமும் ஒரு நாட்டுடன் பல ஒப்பந்தங்கள் போடுகிறார்கள். ஒவ்வொன்றும் மனிதநேயம் துளியும் இல்லாத ஒப்பந்தங்கள்.

சர்வதேசே அளவில் மனித உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புகள் இந்தியாவை ஒரு குரூரமான நாடாக தான் பார்க்கின்றன. 

இந்தியா ஒரு மனிதநேயம் அற்ற நாடு என ஏதோ தமிழன் மட்டும் கொடிபிடிக்கவில்லை, இந்தியா முழுவுதுமே ஒவ்வொரு மூலையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

காசுமீரில் இந்தியா செய்யும் அநீதியை அங்கே சென்று கேட்டுப்பாருங்கள், மேற்குவங்கம் உட்பட பகுதிகளில் இந்தியா செய்யும் அநீதிகளை அங்கே சென்று கேட்டுப்பாருங்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையாம். மனிதனின் அடிப்படை உணர்வுகளை கூட அடிமைப்படுத்துவது தான் உங்கள் வேற்றுமையில் ஒற்றுமையா?

இந்த போலி இந்தியாவை அடியோடு அடித்துநொறுக்கிவிட்டு உண்மையான மனிதநேயம் உள்ள இந்தியாவை உருவாக்குவோம் என்று குரல்கொடுங்கள் அது தான் நாட்டுபற்று. அதை விட்டுவிட்டு சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார், தமிழன் தன் சுதந்திரம் குறித்தே பேசக்கூடாது என்பது எல்லாம் போலி இந்தியர்களுக்கு வேண்டுமானால் இனிக்கலாம்.

போலிஇந்தியாவின் இறையாண்மைக்காக கொடிபிடிப்பவர்கள் இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்

இன்றைய இந்திய சனாதிபதி, நாடாளுமன்றம், ஆட்சிபணி அதிகாரிகள், நீதிமன்றம், தனி ஆணையங்கள், இவைகள் எல்லம் 100% வேண்டாம் குறைந்த பட்சம் 35% நேர்மையாக நடக்கின்றவா? இவற்றில் ஒன்றிலாவது சோனியா உட்பட நச்சு அரசியல்வாதிகளின் அதிக்கம் இல்லாமல் இருக்கிறது என்பதை உங்களால் மனசாட்சியுடன் சொல்ல முடியுமா?

நாட்டை சீரழிப்பவர்களை பற்றி பேசினால் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்றால் இந்த போலி இந்தியாவையே அடித்து நொறுக்குவதில் ஒன்றும் தவறு இல்லை.

நானும் இந்தியன் தான். எனக்கும் இந்தியாவை சீர்திருத்துவதில் சம உரிமை இருக்கிறது. என் தாய்நாட்டை குறித்து பெருமை பட எனக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே போல என் தாய்நாடு சீர்கெட்டு உலக அரங்கில் மானம் கெடும் போது அதை உடைத்தெரிந்து புதுபிக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது.

இந்தியாவின் பெருமையை மட்டும் தான் பேச வேண்டும். அதன் மீது படியும் கறைகளை பற்றி பேசினால் தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என்றால் அப்படி ஒரு நாடே தேவையில்லை என்பது தான் எனது கருத்து. 

நிறையை சொல்ல எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ அதே சுதந்திரம் கறைகளை சொல்வதற்கும் வேண்டும்.

இந்தியாவில் ஊழல் இல்லாமல் நிறைவேற்ற பட்ட ஒரு திட்டத்தை சொல்லுங்கள்?

இந்தியாவில் சுரண்டப்படாத ஒரு குடிமகனை காட்டுங்கள்

இந்த அநீதிகள் எல்லாம் எதனால் நடக்கிறது போலி இந்தியாவால் தானே. இந்த போலி இந்தியாவை இன்னும் போற்றிபபாதுகாத்தால் 2020ல் வல்லரசு அல்ல நாற்றம்பிடித்த இந்தியாவை தான் உருவாக்க முடியும்.

இந்த போலி இந்தியாவை தகர்த்து எறிய சில எளிய வழிமுறைகளை ஆய்ந்து வருகிறேன். உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.

Dec 28, 2010

கோவை: தீண்டாமை சுவரா? தீட்டு சுவரா?

கோவையில் தீண்டாமை சுவர் இடிப்பு என்ற செய்தியை இரு தினங்களுக்கு முன்பு எல்லா பத்திரிக்கைளிலும் படித்திருப்பீர்கள்

சம்பவ இடத்திற்கு சென்றோம், இரு தரப்பையும் விசாரித்தோம். உண்மையில் அது தீண்டாமை சுவர் இல்லை என்பதை நம்மால் புறிந்துகொள்ள முடிந்தது.

பரபரப்புக்காவும், பேரம் படிவதற்காகவும் கிளப்பப்பட்ட பிரச்சனையே அது. பேரம் படியாததால் அது தீண்டாமை சுவரானது. இந்த சுவர் ஒன்றும் காலகாலமாக உள்ளது அல்ல. சமீபத்தில் தான் கட்டியுள்ளார்கள். கட்டுமானத்தின்போது அவர்களுக்கு தீண்டாமை இல்லாமல் இருந்ததா? அல்லது பேரம்படிந்ததா?

தீண்டாமை சுவர் ஒழிக்க குரல்கொடுக்கும் தோழர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் அதற்கு முன்னர் நாம் செய்தாகவேண்டிய பல அடிப்படை கட்டமைப்புகள் இருக்கிறது. அதை செய்யாமல் தீண்டாமை என்று கொடிபிடிப்பதும் ஒரு தீண்டாமையே.

நாங்கள் சாதி அடிப்டையில் அந்த சுவரை கட்டவில்லை. அப்பகுதியில் இருந்து இந்த இடத்திற்குள் மக்கள் செய்யும் மனிதகழிவுகளை தடுக்கதான் காம்பவுண்டு சுவர் கட்டினோம். பலமுறை வேண்டி கேட்டோம், கெஞ்சி கேட்டோம், கண்டித்துக்கூட விட்டுவிட்டோம். அது நிறுத்தப்படவில்லை. அதனால் தான் சுவர் எழுப்பினோம். இது அந்த இடத்திற்கான உரிமையாளர்கள் சொன்னது. அது நியாயாமாகவே பட்டது.

அந்த பகுதி முழுவதும் மனிதகழிவுகளாக இருந்தது. உங்கள் இடத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தினால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

இங்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல கிராமங்களுக்கு மூக்கை பிடித்துக்கொண்டு தான் செல்லவேண்டியுள்ளது. சாலையின் இரு புறமும் பூக்கள் அல்ல பீ க்கள் தான் வரவேற்கின்றன. 

இந்த சுகாதார சீர்கேடுக்கு முடிவே இல்லையா? 

வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டிதர அரசுக்கு அப்படி என்ன நிதிபற்றாக்குறை? வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டினால் ஊழல் செய்யமுடியாது. பொதுகழிப்பிடம் கட்டினால் எளிதில் ஊழல் செய்யலாம். மனித கழிவை கூட தின்ன தயாராகும் இந்த ஊழல் பெருச்சாளிகள் திருந்துவது எப்போது?




வீட்டுக்கு ஒரு டி.வி வழங்கும் முன்னர் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் கட்டிதந்திருக்கலாமே?

அதே நாகராசபுரத்தில் பாலம் உடைந்து பல மாதம் ஆகிறது. அதற்காக குரல்கொடுக்க ஏன் இந்த பொதுநலவாதிகளும் பத்திரிக்கைகளும் முன்வரவில்லை. அதே நாகராசபுரத்தில் மனிதகழிவுகளை மிதித்து தாண்டி தான் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைகின்றனர். இந்த தீட்டுகளை அகற்ற யார் முன்வருவார்கள்

நாகராசபுரம் ஒரு உதாரணம் தான். இதுபோல தமிழகத்தின் பல கிராமங்களின் சாலைகளும், கால்வாய்களும், நாரிக்கொண்டு தான் இருக்கிறது. இதில் எல்லாம் சாதியை கிளப்பினால் தான் சுத்தம் செய்வார்களா?

Dec 27, 2010

செயலலிதா + தினமணியின் முட்டாள்தனமான வாதம்

மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை.

முல்லைபெரியாரில் புதிய அணை கட்ட கேரளா திட்டமிட்டுள்ள இடம் புலிகள் பாதுகாப்பு வனத்திற்கு உட்பட்டது. சமீபத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து உலகளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் புதிய அணை கட்ட பிரதமர் அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால் கேரளாவால் புதிய அணை கட்டமுடியாது. இதை சர்வதேச புலிகள் பாதுகாப்பு அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் என்பது தான் செயலலிதாவின் புதிய அறிக்கை சுருக்கம்.

இதை தினமணி புகழ்ந்து தள்ளியுள்ளது. வாசகர்கள் நடுநிலையும் தமிழர்கள் மீது அக்கறையும் உள்ள தினமணியின் சேவை வாழ்க என்று வேறு புகழ்ந்து தள்ளுகின்றனர்.

முதலில் செயலலிதாவுக்கு விளக்கமளித்துவிட்டு தினமணிக்கு வருகிறேன்.

புலிகளை பாதுகாக்க புதிய அணை கட்டக்கூடாது என்று நீங்கள் கூறுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே கேரளா முல்¬லைபெரியாறு அணையால் புலிகளுக்கு ஆபத்து என்பதை ஒரு வாதமாக வைத்துள்ளது. அரசியல்வாதிகள் கொஞ்சம் பழைய செய்திதாள்களையும் படிப்பது நல்லது. (பத்திரிக்கை ஆசிரியர்களும் தான்) 

முல்லை பெரியாறு அணை உடைந்தால் மனிதர்களை விட புலிகள், காட்டுயானைகள் அழியும் என்பதை கேரளா ஏற்கனவே காணொளியுடன் விளக்கியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் புலிவாலை பிடித்தால் உங்களுக்கு தான் ஆபத்து. புலிகளை காப்பது இருக்கட்டும் தமிழ்ஈழ புலிகளை காக்க எதாவது குரல்கொடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

அடுத்து தினமணி

தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் வெளியிடும் தினமணியின் அதே அலுவலகத்தில் இருந்து வெளிவரும் இன்டியன் எக்சுபிரசு நாளிதழில் ஏன் கேரளவுக்கு ஆதரவாக செய்திகள் வருகின்றன. அப்படியானால் உண்மை தான் என்ன? இது தான் நடுநிலையா?

முல்லை பெரியாறு விடயத்தில் சன் டிவி செய்திக்கும் சூரியா டிவி செய்திக்கும் ஏன் வேறுபாடு ( இரு டிவிக்கும் செய்திகள் சென்னையில் ஒரே ஒளிப்பதிவு அறையில் இருந்து தானே ஒளிபரப்பப்படுகிறது ) 

தமிழக காங்கிரசும் கேரள காங்கிரசும் முல்லைபெரியாறு விடயத்தில் ஒரே கருத்தை கொண்டுள்ளதா? தமிழக இடதுசாரிகளும் கேரள இடதுசாரிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளார்களா? தமிழக அதிமுகவும் கேரள அதிமுகவும் ஒரே கொள்கைள் உடையனவா?

ஒன் மேன் ஆர்மி அதிமுக என்றால் கேரள அதிமுக தேர்தல் அறிக்கையில் எப்படி கேரளா புதிய அணை கட்டியே தீரவேண்டும் என்பது இடம்பெற்றது? இதை ஏன் செயலலிதா கண்டிக்கவில்லை? கேரளாவில் புதிய அணை கட்டவேண்டும் என்கிற கேரள திமுக யாருக்காவது தெரியுமா? இவர்களுக்கு கருணாநிதியும் கனிமொழியும் சால்வை அணிவித்து கூப்பாடுபோடுவதாவது தெரியுமா?

முல்லை பெரியாறு பற்றி வாய்கிழிய பேசும் வைகோவுக்கு குமரகத்தின்(கோட்டயம்) ரகசியங்கள் தெரியாதா? வைகோ மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் முல்லைபெரியாறு அணையால் ஆபத்து இல்லை என்று!

குமுளி இடுக்கி, வண்டிபெரியாறு பகுதிகளில் தமிழ் மலையாளம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் தினத்தந்திக்கும் மலையாளத்தின் மாத்யமம் உட்பட பத்திரிக்கைகளுக்கும் ஒரே நிருபர் தான். அவர் ஒருவரே இரு பத்திரிக்கைகளுக்கும் செய்தி அனுப்புவார். அப்படியே மொழிமாற்றம் செய்து அனுப்பினால் பத்திரிக்கைகள் செய்தியை வெளியிடுமா? அங்கு ஆதரவாக அங்கு இங்கு ஆதரவாக இங்கு இதுதான் உண்மை நிலை.

பொதுமக்களே தயவு செய்து உண்மையை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்

ஏன் ஒரே செய்தி நிருவனம் இருவேறு செய்திகளை தருகிறது? ஏன் ஒரே கட்சி இருவேறு குரல் கொடுக்கிறது? ஏன் ஒரே நிருபர் ஒரே செய்தியை இருவேறு கோணங்களில் எழுதுகிறார்?

ஒரு கனமேனும் யோசியுங்களேன்... 

சாப்பாட்டில் வென்ற ஈரோடு சங்கமம்

ஈரோடு வலைபதிவர்கள் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்கு என்னால் மதியம் தான் போய் சேர முடிந்து. நிறைய அனுபவங்கள் கிடைத்தன.

எந்த குறையும் இல்லாமல் 200% திருப்தியளித்த முதல் விசயம் விருந்து. இதற்கு முழு கவனமும் முக்கியத்துவமும் கொடுத்த ஈரோட்டு சங்கமத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

தலைவாழை இலையில் தலைசிறந்த விருந்தை தந்தார்கள்

படங்களை இணைத்துள்ளேன்.






அன்னமிட்ட கரங்களில் ஒன்று

சின்ன சின்ன அனுபங்களை சொல்வதன் மூலம் விருந்துக்கு எப்படியெல்லாம் முக்கியத்துவம் தந்தார்கள் என்பதற்கு எழுத்துவடிவம் கொடுக்க முயற்சித்திருக்கிறேன்.

விருந்துக்கு எந்த காத்திருப்பும் இல்லாமல் மிக கச்சிதமாக அனைவரும் ஒருசேர அமர்ந்து சாப்பிட வழிசெய்திருந்தார்கள்.

சைவம் தனியாக அசைவம் தனியாக இருந்தது. இங்கு மிகமிக பாராட்டகூடிய விடயம் அசைவத்துக்கு இணையாக சைவ விருந்து இருந்தது. பொதுவாக அசைவ விருந்து அளிக்கப்படும் இடங்களில் சைவத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இங்கு அந்த குறை இல்லை.

சுற்றி சுற்றி புகைப்படம் எடுத்த எனக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. சைவம் சாப்பிடலாமா? அசைவம் சாப்பிடலாமா என்று?

ஒவ்வொருவருக்கும் அனைத்து வகைகளும் ஒன்றுவிடாமல் பரிமாற கதிர் உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட கவனம் உண்மையில் விருந்தோம்பலுக்கான இலக்கணம். கடைசி நபர் சாப்பிட்டு செல்லும் வரை அவர் முன்னின்று செலுத்திய பொறுப்புணர்ச்சி என்னை வியக்க வைத்தது. 

விருந்து ஏற்பாடு செய்வதை விட அதை பரிமாறும் விதம் மிக முக்கியம். அதை மிகமிக நேர்த்தியாக செய்தார்கள்.

நான் அசைவம் தான். நான் எப்பவும் காரம் குறைவாக சாப்பிடுபவன். நான் இதுவரை சென்ற பெரும்பாலான அசைவ விருந்துகளில் காரம் அதிகம் இருக்கும். ஆனால் இங்கு அந்த குறை துளியும் இல்லை, சுவைகள் அனைத்தும் கச்சிதமாக இருந்தது. சமையல்காரருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

உண்டவர்களின் முழு திருப்திக்கு உணவில் சுவையின் பங்கு கூடுதாலா, பரிமாறிய பங்கு கூடுதலா என்று பிரித்துபார்க்கமுடியாத அளவுக்கு இரண்டும் கச்சிதமாக இருந்தது.

அடுத்த பதிவில் சுரேசின் கேமரா கையாளல், ஓசை செல்லாவின் நகைச்சுவை சரவெடிகள், வினோதின் புகைபட நளினம், அப்புறம் சேர்தளத்தின் செமரகளை ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

Dec 26, 2010

கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா?

இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று.

இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான்.

உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம் செய்கிறது. சுண்ணாம்பு கற்கலால் கட்டப்பட்ட முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பது உலகறிந்த விடயம். இதுவரை ஆய்வு செய்த 23 நிபுணர் குழுவும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்பதை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு சாதகமாக சொன்ன உச்சநீதிமன்றம் கூட அணை பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை சொல்லவில்லை. இந்த விடயத்தில் தமிழகம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வீண்பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருப்பது நமக்கு தான் இழப்பை தரும். நாம் ஏன் வீம்பு (ஈகோவை) விட்டுவிட்டு மாற்றை யோசிக்கக்கூடாது?

நமக்கு தேவை தண்ணீர். அதை தர கேரள முழுமனதுடன் சம்மதிக்கிறது. அதை எங்கு சேமிப்பது என்பதில் தான் பிரச்சனை. முல்லைபெரியாறு அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிப்பது கேரளாவுக்கு ஆபத்தை தரும். என்றால் சேமிப்பிடத்தை ஏன் மாற்றக்கூடாது?

1975ல் சீனாவில் 2 அணைகள் உடைந்து ஏரத்தாள 2 லட்சம் மக்கள் இறந்தார்கள். இது நடந்தது நம் கண்முன் தான். 35 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. நம்மைபோல தான் அணை பலமாக உள்ளது பலமாக உள்ளது என பாட்டுப்பாடிக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் அந்த பாட்டு 2 லட்சம் மக்களுக்கு மரண ஓலமானது. அது கூட உள்நாட்டு பிரச்சனையாக முடிந்துவிட்டது.

ஆனால் முல்லை பெரியாறு விடயத்தில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அணைக்கு எதாவது சம்பவித்தால் அப்புறம் கேரளா தமிழகம் நல்லுறவு என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க வேண்டியதில்லை. ஏற்படும் இழப்பிற்கு நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்.

இன்று தமிழகத்தின் வாதம் இதுதான் கல்லணை. கல்லணை. கல்லணை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கும்போது 112 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரியாறு அணை உறுதியாக இருக்காதா என்பது தான் தமிழகத்தின் வாதம்.

இது தவறாதும் மடத்தனமான வாதமுமாகும்.

கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா? நீங்களே ஒப்பிட்டுப்பாருங்கள்


  • கல்லணை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • பெரியாறு அணை 2890 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • கல்லணையின் உயரம் 20 அடிகள் 
  • பெரியாறு அணையின் உயரம் 177 அடிகள். 
  • கல்லணையில் இருந்து அவசர காலத்தில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரை வெளியேற்ற முடியும். 
  • பெரியாறு அணையில் இருந்து 2000 கன அடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும் அதுவும் அவரசர கதியில் வெளியேற்ற முடியாது. 
  • கல்லணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அதிகபட்சம் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும். 
  • பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றும் நீர் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும். 
  • கல்லணையின் கீழ்பகுதி 20 டிகிரி சரிவையுமே 20 அடி ஆழமும் கொண்டுள்ளது. 
  • பெரியாறு அணையின் கீழ்பகுதி 90 டிகிரி சரிவும் 300 அடி ஆழ பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. 
  • கல்லணை பகுதியில் நிலச்சரிவு, நிலநடுக்க அபாயம் இல்லை. 
  • பெரியாற்றில் இந்த இரண்டு அபாயங்களும் உள்ளது. பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 2006 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது.
  • கல்லணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேட்டூர், அமராவதி, பவானிசாகர் இந்த மூன்று அணைகளை வைத்தே கல்லணையின் அவசர காலத்தை கணித்து விட முடியும்.
  • ஆனால் பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அணை கட்டுமானத்தின் போதே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டுமானம் கைவிடப்பட்டிருக்கிறது. பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் பென்னி குயிக் தன் சொத்துக்களை விற்று சொந்த செலவில் கட்டி முடித்திருக்கிறார். கட்டும்போதே 185 இடங்களில் தடுப்பணை கட்டி, பிரதான பாதையை பேபி டேம் பக்கம் திருப்பியிருக்கிறார்.  பெரியாற்றில் எதை வைத்து அவசர காலத்தை கணிப்பது. 
  • பெரியாறு அணையானது 12க்கும் மேற்பட்ட காட்டாறுகளை இணைத்து மலை உச்சியில் கட்டப்பட்ட அணை.
  • மலைசிகரத்தில் உள்ள காட்டாற்றின் அழுத்தம், வேகத்தை சமவெளி பகுதியில் ஓடும் நதியுடன் ஒப்பிடலாமா?
  • கல்லணையில் தண்ணீரை தடுத்து நிறுத்தும் மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாகவே நான்கு திசைகளில் தண்ணீரை பிரித்து விடக்கூடிய வசதிகள் இருக்கிறது.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீரை தடுத்து வைப்பது ஒரு பகுதி, வெள்ளம் அதிகமாகும் போது திறந்து விட வேறு ஒரு பகுதி, தண்ணீரை தமிழகத்திற்கு திருப்ப ஒரு பகுதி என மூன்றாக, மூன்றும் மூன்று திசையில் இருக்கிறது. 
  • பெரியாறு அணையில் அழுத்தம் அதிகமான பகுதியில் தண்ணீர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மதகுகள் இல்லை. அழுத்தம் கூடும்போது தண்ணீரை திறந்துவிட அணையின் இடது புறத்தில் பேபி டேம் உள்ளது. இது ஆற்றின் பிரதான பாதையைவிட மேடான இடத்தில் உள்ளது. அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க வடக்குப்பக்கம் சுரங்கப்பாதை உள்ளது. அணையில் 104 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தண்ணீர் கீழே வரும்.
  • கல்லணை என்பது தண்ணீரை பிரித்துவிடும் அணைதானே தவிர தேக்கி நிறுத்தும் அணை அல்ல. மேலும் இயற்கையான போக்கில் கட்டப்பட்ட அணை.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீர் தடுத்து தேக்கப்பட்டு அணையின் மற்றொரு மூலையில் சுரங்கம் வழியாக கீழே கொடுவரப்படுகிறது. இது இயற்கைக்கு எதிராக கட்டப்பட்ட அணை. 
  • இரு அணைகளின் அழுத்தமும், நீர் அரிப்பும் மிகஅதிக வேறுபாடு உடையது.
  • கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை என்பது தற்போது மதகுகளுக்கு கீழ் உள்ள அடிப்பகுதி. அதாவது ஒரு செக் டேம் போன்றது. அதன்மீது உள்ள பாலங்களும், மதகுகளும் சமீபத்தில் கட்டப்பட்டது. 
  • கல்லணை தடுப்பு சுவற்றின் அகலம் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதிவரை ஒரேமாதிரியாக உள்ளது. 
  • ஆனால் பெரியாறு அணையின் தடுப்பு சுவற்றின் அடியில் அகலமான சுவரும்,மேலே வரவர கூர்மையான பகுதியாக உள்ளது. இந்த கட்டமைப்பு தான் ஆபத்தாக உள்ளதாக கேரளா கூறுகிறது.
  • கல்லணை ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • பெரியாறு அணை இரு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • கல்லணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை.
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது. 
  • கல்லணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. 
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிது.
  • காவிரியாற்றில் கர்நாடகாவுக்கும், நமக்கும் தேவை ஒரேமாதிரியானது. குடிநீர், விவசாயம், மின்சாரம்.
  • ஆனால் பெரியாற்று நீர் கேரளாவுக்கு ஆபத்தானது, தமிழ்நாட்டுக்கு தேவையானது.
  • தண்ணீரை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
  • கேரளாவின் குடிநீர், விவசாயம், மின்சாரத் தேவைகளுக்கு பெரியாறு பயன்படுவதில்லை, தேவையும் இல்லை.
  • பெரியாற்றின் வெள்ளப்பெருக்கால் உயிர்சேதமும், கொச்சி நகர அழிவும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
  • ஆனால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் குடிநீர், விவசாயம்,மின்சார தேவைகளுக்கு பெரியாறு இன்றியமையாதது.
  • நமக்கு இது உயிர் ஆதார பிரச்சனை.
  • கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.
  • கர்நாடகாவைப் போல தண்ணீர் தரமாட்டோம் என்று கேரளா ஒரு போதும் சொல்லவில்லை.
  • காவிரி பிரச்சனையில் தீர்வை முன்வைத்து யாரும் போராடுவதில்லை.
  • ஆனால் பெரியாற்று பிரச்சனையில் போராட்டக்காரர்கள் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள்.

அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள். 

இதைப்பற்றி நாம் ஏன் யோசிக்க கூடாது.
இந்த தீர்வால் தமிழகத்திற்கு செலவு குறைவும், பிரச்சனைக்கு தீர்வும், அதிக தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளது.


இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப
காய் கவர்ந் தற்று 
அல்லவா..

முல்லைப்பெரியாறு பிரச்சனையோடு, காவிரியையும், பாலாற்றையும், ஈழத்தையும் சேர்த்து முடிச்சு போட்டு, எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு தொல்லை என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. நமது கண்ணோட்டத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கடந்த பதிவிற்கான பதில்களுக்கு முன் இந்த பதிவை எழுதுகிறேன்.

காய்ச்சலுக்கு காய்ச்சல் மாத்திரைதான் சாப்பிட வேண்டுமே தவிர வயிற்றுவலி மாத்திரையை தின்னக்கூடாது.

இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ ஈகோ பிரச்சனையோ அல்ல.

இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்  

இந்த பதிவை வாசிப்பவர்கள் ஒரு முறை கூகிள் இணையத்தில் உள்ள மேப் பகுதி வழியாக அணையை பார்வையிடுங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். 

Dec 24, 2010

தமிழ்மணத்தின் தவறை பதிவர்கள் தட்டிகேட்க வேண்டும்

பதிவுக்கு தமிழ்மணத்தின் கட்டண சேவை தவறானது என்பது பதிவர்களுக்கு புரியாமல் போனது வேதனையே.

தமிழ்மணத்தின் முதல்பக்கம் முழுவதும் கட்டணசேவையில் அலங்கரித்து நிற்கும்போது அதை பதிவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

தவறுகளுக்கு பத்திரிக்கைகளுக்கு ஒரு நியாயம் தமிழ்மணத்துக்கு ஒரு நியாயம் கற்பிப்பது பதிவர்களின் சுயநலத்தையே காண்பிக்கிறது.

ஏன் தமிழ்மணத்தின் தவறை சுட்டிக்காட்டும் தைரியம் பதிவர்களுக்கு இல்லை? அப்படியானால் சமுதாயத்தை விமர்சிக்க பதிவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? பதிவு என்றால் மொக்கையும் கும்மியும் மட்டுமே என்றால் நான் பதிவுலகில் இருந்து விடைவாங்கி கொள்கிறேன்.

பத்திரிக்கை தர்மம் சீர்கெட்டுபோனது எப்படி தெரியுமா? இதே கட்டண சேவையால் தான். செய்திக்கு பணம் வசூலித்தார்கள். பணம் செலுத்தினால் எந்த செய்தியையும் முதல்பக்கத்தில் வரவைக்க முடியும். செய்தி முடிவில் ADVT என்று போட்டிருப்பார்கள். கவனிக்காதவர்கள் நாளை செய்திதாள் படிக்கும்போது கவனியுங்கள். காரணம் கட்டண சேவை. இது செய்தியை நம்பி படிக்கும் வாசகர்களுக்கு செய்யும் தூரோகம் அல்லவா?

கோயிலில் சாமி தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் உண்மையான பக்தர் கூட்டம். பணக்காரர்கள் கோயில் நுழைவுவாயுலுக்கே காரில் வந்து இறங்குவார்கள். நேரடியாக சாமியை சென்று தரிசிப்பார்கள். காரணம் கட்டண சேவை. அவர்களால் தான் கோயிலுக்கு நிதி அளிக்கிறார்களாம்.

கட்டணத்துக்கும் சேவைக்கும் உள்ள வேறுபாடு பதிவர்களுக்கும் புரியாமல் போனது வேதனையே

விளம்பரம் வேறு, சேவை வேறு இந்த இரண்டுக்கும் முடிச்சுபோடக்கூடாது.

பதிவுகளை திரட்டுவதற்கு என்று ஒரு களம் உள்ளது. அதில் விளம்பரத்தை காண்பிக்கலாம். ஆனால் கட்டணம் தரும் பதிவுகளுக்கு அதே சாயலில் பின்வண்ணம் தருவது தவறு. இது அந்த களத்தின் தரத்தையும் நம்பிக்கையையும் குறைக்கிறது. செய்தியை காட்டி பணம் சம்பாதிக்கும் பத்திரிக்கைகளுக்கும் பதிவை காட்டி பணம் சம்பாதிக்கும் தமிழ்மணத்திற்கும் என்ன வேறுபாடு?

பதிவர்கள் எல்லாம் கட்டணம் செலுத்தினால் தமிழ்மணத்தில் முகப்பு பக்கத்தில் கட்டணசேவைகள் தான் இருக்குமே தவிர சேவை எதுவும் இருக்காது.

நான்கு நண்பர்கள் இணைந்து சொந்த நிதியில் தமிழ்மணம் சேவையை தருவதை மனமார பாரட்ட வேண்டும். இதற்கு நிச்சயம் மதிப்பளிக்க வேண்டும். ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

சென்ற வாரம் எனது பதிவுகள் அனைத்தும் சூடான பதிகளில் இருந்தன. எனக்கே வியப்பாக இருந்தது. உண்மையில் இதற்கு தகுதியானது தானா இந்த பதிவுகள் என்ற சந்தேகம் கூட வந்தது. 


திங்கள் முதல் சனி வரை சூடான பதிவில் காட்டிவிட்டு ஞாயிற்று கிழமை சுட்டியையே துண்டித்துவிட்டார்கள். என்ன காரணம் என்பது தெரியாமல் குழம்பி இருந்தேன். என்னால் புதிய பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. உங்கள் பதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற பதில் வந்தது. 


அட இதற்கு தான ஒரு வாரம் சூடான பதிவில் வைத்து சூடேற்றியுள்ளார்கள் என்பது அப்போது தான் புறிந்தது. 


இது மிகமிக தவறான செயல். தமிழ்மணத்தின் இந்தபோக்கை பதிவர்கள் அனுமதித்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. 

கொதித்துபோயிருந்த எனக்கு தமிழ்மணத்தில் இருந்து வந்த மின்னஞ்சல் இன்னும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

என் பதிவை துண்டிப்பதற்கு முன்னர் இந்த மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்கள் என்றால் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால் துண்டித்துவிட்டு விளக்கம் கேட்பது அநீதியே.

விளம்பரத்தை விளம்பரமாக வாங்குங்கள். பதிவை பதிவாக திரட்டுங்கள். அதுதான் உண்மையான சேவை. பதிவுக்கு இடையில் விளம்பரத்தை விளம்பரமாக காட்டுங்கள். பதிவையே கட்டணசேவை எனபிரித்து காட்டுவது தவறான போக்கு. நாளடைவில் இது தளத்தின்மீதனான நம்பிக்கையை குறைத்துவிடும். 

எது சரி எது தவறு என்பதை படமாக காண்பித்திருக்கிறேன்.


தமிழ்மணம் நிச்சயம் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சேவை என்ற பெருமையை தார்மீகமாக இழக்க நேரிடும். 

பத்திரிக்கைகளை, அரசியல்வாதிகளை குற்றம் சொல்லும் பதிவர்கள் தமிழ்மணத்தின் தவறையும் சுட்டிகாட்ட  வேண்டும். காரணம் தமிழ்மணம் என்பது முழுக்க முழுக்க பதிவர்களை மட்டுமே சார்ந்துள்ள இணையதளம். இதன் ஆசிரியர்களும் வாசகர்களும் பதிவர்கள் மட்டும் தான்.

பின்குறிப்பு : தமிழ்மணத்தில் எனது பதிவின் இணைப்பை துண்டித்துவிட்டுதான் எனக்கு கட்டணசேவை குறித்து மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பதை பதிவர்கள் கருத்தில்கொள்ள வேண்டும். 


இது ஒரு நாள் உங்களுக்கும் சம்பவிக்கும்போது தான் புரியும். காரணம் சொல்லாமல் செல்பேசி இணைப்பை, இணைய இணைப்பை துண்டித்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

தமிழ்மணம் + கட்டணம்

தமிழ்மணம் வலைபதிவுகளை இணைக்க கட்டணம் கேட்பதை ஏற்க முடியாது.

தமிழ்மணம் நிதிசேகரிப்பது தவறு இல்லை. அதற்கு விளம்பர யுக்தியை கையாளலாம். அதற்காக பதிவுக்கே கட்டணசேவை என்பது மிகத்தவறானது.  

என் பதிவை முன் அறிவிப்பு இன்றி கட்டணசேவைக்கு மாற்றியதை தான் கண்டிக்கிறேன். இது ஏதோ ஆதிக்க போக்குபோல உள்ளது. 

பதிவர்கள் எழுதாவிட்டால் தமிழமணம் என்ற இணையமே இல்லை என்பதை தமிழ்மணம் நிர்வகத்தார் புரிந்துகொள்ள வேண்டும்.

இணையம் நிர்வகிக்க நிதி தேவைதான். அதை விளம்பரம் மூலமாக எடுக்கலாம். அதற்காக பதிவையே விளம்பரமாக தரவேண்டும் என்று கோருவதை ஏற்க முடியாது. 

இன்று கூகுள் பிளாக்கை இலவசமாக தருவதால் தான் நம்மால் விரும்பிய நேரத்தில் விரும்பியதை எழுதமுடிகிறது. இதற்கும் கட்டணம் என்றால் யோசித்துபாருங்கள்.

நான் தனிப்பட்ட ரீதியில் எனது பத்திரிக்கை குறித்து தமிழ்மணத்தில் விளம்பரம் செய்ய தயார். அதே போல தமிழ்மணம் சேவையை தொடர நிதிஉதவி அளிக்கவும் தயார். ஆனால் அதற்காக என் பதிவுக்கே கட்டணம் கேட்பது பகல்கொள்ளை போலவே தோன்றுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் தமிழ்மணம் மூலம் எனது பதிவை படித்தவர்கள் 20 ஆயிரம் பேர். எனது பத்திரிக்கையை படித்தவர்கள் 0. என் மூலம் தமிழ்மணத்தின் சேவையை அறிந்தவர்கள் பயன்படுத்தியவர்கள் 20 பேர்.

தமிழ்மணம் சேவையை நான் பயன்படுத்துவதால் எனக்கு எந்தவித வருமானமும் கிடைப்பது இல்லை. 

அரசியல்வாதிகள் தான் தங்களை குறித்து தாங்களே செய்தியாக எழுதி அதை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்வார்கள். மக்களுக்கு அது செய்தியா விளம்பரமா என்றுகூட தெரியாது. 

500 ரூபாய்க்கு விளம்பரம் செய்தால் அந்த 500 ரூபாயை விளம்பரம் மூலம் வரும் வாடிக்கையாளரிடம் இருந்த எடுக்கும் யுக்தி தான் விளம்பரம். 

என் எழுத்துக்களை ஒன்றும் நான் விற்பனை செய்யவில்லை. விளம்பரம் செய்வதற்கு. மாதம் மாதம் 700 ரூபாய் கொடுத்து தான் என் எழுத்துக்களை விளம்பரப்படுத்த வேண்டுமா? 

ரூ.500 கொடுத்தால் நேர கட்டுப்பாடு இல்லாத இணைய தொடர்பு கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ. 500 கொடுத்தால் நமக்கு சொந்தமான டொமைனில் இணையம் வைத்துக்கொள்ளலாம். இப்படி இருக்க கூகிள் இலவசமாக தரும் பிளாக்கில் என் எழுத்துக்களை வாசகர்களிடம் கொண்டுசெல்ல மாத மாதம் ரூ.700 கேட்பது எந்தவிதத்தில் நியாயம்?

சென்ற வாரம் முல்லைபெரியாறு சென்றிருந்தேன். உயிரை பணையம் வைத்து என் சொந்த முயற்சியில் சொந்த செலவில் முல்லைபெரியாறு சென்று அங்குள்ள உண்மை நிலவரத்தை சேகரித்து வந்தேன். எதற்காக அதை வைத்து வியாபாரம் செய்யவா? என் உழைப்பை வலைபதிவில் எழுதி ஆறுதல் பட்டேன். ஆனால் அதை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

பல மொழிகளில் பல திரட்டிகள் செயல்படுகின்றன. யாரும் பதிவையே விளம்பரமாக தரசொல்லி கேட்பது இல்லை.

தமிழ்மணம் நிச்சயமாக இந்த போக்கை மாற்றியே ஆகவேண்டும். இல்லை என்றால் தமிழின் முதன்மை பதிவுதிரட்டி என்ற பெருமையை தார்மீகமாக இழக்க நேரிடும்.

நான் கேட்பது இது தான். குறைந்பட்சம் எனக்கு ஒரு முன் அறிவிப்பை தந்திருக்கலாமே. 

கூகிள் இலவசமாக வலைபதிவை தருகிறது. அதை வாசகரிடம் கொண்டு சேர்க்க தமிழ்மணம் பணம் கேட்கிறது. என்ன கொடுமை.  

Dec 23, 2010

தமிழ்மணம் செய்தது சரியா? பதிவர்களே நியாயம் சொல்லுங்கள்

தமிழ்மணத்தில் இருந்து திடீர் என எனக்கு மின்னஞ்சல் வந்தது. உங்களது வலைபதிவு கட்டணசேவைக்கு மாற்றப்பட்டு விட்டது. மாதம் 500, 700 செலுத்தினால் கட்டணசேவை அடிப்படையில் உங்கள் இடுகைகள் காட்டப்படும். இதுகுறித்து புகார்கள் இருந்தால் தமிழ்மணத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்பது தான் மின்னஞ்சலின் சுருக்கம்.

என்ன கொடுமை இது. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் என் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றியிருக்கிறார்கள்.

பத்திரிக்கைகளில் எழுத முடியாததை வலைபதிவில் எழுதுகிறோம். இந்த எழுத்தை வைத்து நாங்கள் ஒன்றும் பணம் சம்பாதிப்பதில்லை. விளம்பரம் செய்துகொள்வதில்லை. தமிழ்மலர் என்ற எனது இணையதளத்துக்கு கூட இணைப்பு கொடுக்கவில்லை.

பதிவர்களிடம் இருந்தே பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற தமிழ்மணத்தின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.

உங்கள் வலைபதிவை கட்டணசேவைக்கு மாற்றப்போகிறோம். இதுகுறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள் என எனக்கு முன்அறிவிப்பு செய்திருக்கலாம். அதை செய்யாமல் திடீர் என என் வலைபதிவை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தமிழ்மணத்தின் மீது இருந்த மரியாதையே போய்விட்டது. இனிமேல் நான் தமிழ்மணத்தில் இணைக்கபோவதில்லை.

தமிழ்மணத்திற்கு ஒரு வேண்டுகோள்.

இனியாவது வேறு யாருக்காவது இதை செய்யும் முன்னர் தயவு செய்து ஒரு முன் அறிவிப்பை கொடுங்கள். அதுதான் பண்பாடு நாகரீகம்.

முல்லைபெரியாறு:தமிழரிடம் மனசாட்சி இருக்கிறதா?

முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவந்த என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரளாவில் ஏதோ மலையாளிகள் எதிர்க்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். முல்லைபெரியாறு அணையால் ஆபத்து என்று சொல்பவர்கள் தமிழர்கள் தான். அதுவும் அந்த அணையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர்.

முல்லை பெரியாறு அணைக்கு கீழே குடியிருப்பதும், விவசாயம் செய்வதும் தமிழர்கள் தான். 10 லட்சம் தமிழர்கள் உட்பட 40 லட்சம் மனிதர்களின் உயிர் பிரச்சனை அது. 

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் வீணாக கலக்கும் பெரியாற்றை(பெரிய+ஆறு) மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் தான் முல்லை பெரியாறு அணை திட்டம்.

முல்லை + பெரியாறு என்ற இரு ஆற்றுப்பகுதிகளை இணைத்து அணையாக நீரை தேக்கி மேற்கு திசையில் பாயும் நீரின் போக்கை கிழக்கு திசைக்கு திருப்புவது தான் அணையின் பிரதான நோக்கம்.

அணை இருக்கும் மலைபகுதி முக்கோண சரிவை உடையது. சரிவில் மேற்குநோக்கி பாயும் ஆற்றுநீரை தடுத்து தேக்கி நிரப்பி கிழக்குநோக்கி எதிர்திசையில் வழிய செய்யப்படுகிறது.

இயற்கைக்கு எதிராக மிகப்பெரிய போரட்டத்தில் கட்டப்படும் இந்த அணையின் ஆபத்தை அப்போதே உணராமல் இல்லை. அதை 999 ஆண்டு ஒப்பந்தபடிவத்தில் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.

பிரதான அணையின் மொத்த உயரம் 177. இதில் 162 அடி வரை தண்ணீரை தேக்கியிருக்கிறார்கள். 104 அடிக்கு கீழான தண்ணீரை எதிர்திசையில் திருப்பகூடாது. அந்த நீர் தேக்கடி பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு சொந்தமானது. 104 முதல் 152 அடிவரையிலான நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

115 அடியிலிருந்து தமிழகம் தேவையான அழுத்தத்தில் நீரை எடுக்க முடியும்.

அணையின் பலத்தை பொருத்தவரை 50 ஆண்டுகள் மட்டுமே முழுமையான உறுதியிருக்கும் என்பது உலகின் பொதுவிதி.

112 ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது அணை. இதன் மேற்பூச்சு நீர்அரிப்பு தன்மையுடையது. கற்களுக்கு இடையிலான கலைவை பகுதியில் நீர்உறிஞ்சும் தன்ம¬யும் உள்ளது. இதன் வழியாக அரிப்பும் நீர்கசிவும் உள்ளது என்பது உண்மை. நீர் கசிவின் தன்மை ஆண்டுதோறும் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை. 

உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான 4 அணைகளில் முல்லைபெரியாறு அணையும் ஒன்று. மற்ற மூன்று அணைகளிலும் நீர்தேக்கம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆபத்தான அணைகள் பட்டியலில் முல்லைபெரியாறு அணையும் உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் முக்கிய உடல் பகுதியின் நீர்அழுத்தம் கூர்மையாக முக்கிய அணைகட்டின் அடிப்பகுதியை நோக்கி செல்கிறது. அணையிருக்கும் நிலபகுதியும் அதே சாய்வில் சரிவாகவே அழுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகப்படியான அழுத்தத்தை அணைக்கு கொடுப்பது ஆபத்தையே தரும்.

முல்லை பெரியாறு பிரதான அணையின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்வது தான் அறிவுடமை. இதற்கு இன்றுவரை தமிழகம் மாற்றை யோசிக்காதது தான் வேதனை. ஒரு அணையால் ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு மாற்றை யோசிப்பது தான் மனிதநேயம். அந்த மனிதநேயம் இன்றுவரை தமிழத்திற்கு வராதது ஏன்?

முல்லை பெரியாறு அணையில் அதிகப்படியான நீர் மேற்குநோக்கி வெளியேற்றப்பட்டால் வரும் ஆபத்தை இடுக்கி அணையை பற்றி தெரிந்துகொண்டால் புரிந்துகொள்ள முடியும்.



பெரியாற்றின் குறுக்கே மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது முல்லைபெரியாறு அணை. இங்கிருந்து கசியும் நீர் வல்லகடவு, வண்டிப்பெரியார் நகரங்களை கடந்து இடுக்கி அணையை அடைகிறது. பெரியாறு அல்லாமல் பல காட்டாறுகளும் இடுக்கி அணையின் பிரதான நீர்ஆதாரங்கள். எப்போதும் நிரம்பிவழியும் இடுக்கி அணையும் மிகவும் ஆபாத்தான அணைகளில் ஒன்று தான்.
 உலகில் வளைவு (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட நவீன அணை இடுக்கி அணை. மூன்று மலை இடுக்குகளில் தடுப்பணை ஏற்படுத்தி செங்குத்தாக நீர் தேக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதால் அழுத்தம் கொடுத்தால் இடுக்கி சிறுதோணி அணை உடையும் என்பது நிபுணத்துவம்.

முல்லைபெரியாறு அணையின் வெள்ளப்பெறுக்கால் இடுக்கி அணை உடையுமானால் 40 லட்சம் மனிதர்கள் நீரில் அடித்துசெல்லப்படுவார்கள். கொச்சி என்ற அழகிய துறைமுகமே சுவடற்று போகும். ஏராளமான வனவிலங்குள் கடலில் செத்துமிதக்கும்.

இதெல்லாம் சம்பவிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது தான் நிதர்சன உண்மை.

சரி அடுத்து தமிழகம் பக்கம் பார்வையை திருப்புவோம்.

முல்லை பெரியாறு அணையின் உதவியால் தேனி, மதுரை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்கள் செழிப்படைகிறது. இந்த உதவி நிறுத்தப்பட்டால் இந்த பூமி பாலைவனமாகிவிடும் என்பதும் நிதர்சன உண்மை.

இந்த பகுதிகளின் குடிநீர் உயிர் ஆதாரம் முல்லை பெரியாறு என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

கேரள மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும். இது தான் முல்லைபெரியார் பிரச்சனைக்கான முழுமையான தீர்வு.

115 அடி முதல் 136 அடி வரை நீரை தேக்குவதால் நிச்சயமாக தமிழகம் போதிய நீரை பெறமுடியும். ஆனால் அதை நீண்டநாட்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. 

மேலும் தமிழகத்தின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்களில் ஒன்றான கூடலூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு 152 அடி வரை நீரை தேக்கினால் மட்டுமே போதிய மின்உற்பத்தி செய்ய முடியும். இங்கு தான் பிரச்சனையே இருக்கிறது.

நமக்கு தண்ணீரா? மின் உற்பத்தியா? எது பிரதானம் என்பதை பார்க்க வேண்டும். 

இதே அணை புவியல் ரிதியாக நேர் எதிர் திசையில் திரும்பி இருந்தால் நாம் ஒத்துக்கொள்வோமா?

நிச்சயம் தமிழகம் மாற்றை யோசித்தேயாகவேண்டும். இல்லாவிட்டால் கேரளாவின் துயரத்தின் மிகப்பெரிய சாபம் தமிழகத்தின் மீது நீங்கா வடுவை ஏற்படுத்தி விடும்.

அரசியலை தாண்டி கேரள மக்களின் கோரிக்கை இதுதான். அணைக்கு மாற்று அணை கட்டவேண்டும். அல்லது அணையின் அழுத்தத்தை குறைத்து நீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும்.

எதிர்பகுதியில் சில கால் வாய்களை வெட்டுவதன் மூலம் எளிதாக இந்த பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அவ்வளவே. எதிர்திசையில் கால்வாய் வெட்டுவது முல்லைபெரியாறு அணை பிரச்சனைக்கு மிகஎளிதான தீர்வாக இருக்கும். இதற்கு அதிககால அவகாசமோ, நிதியோ தேவைப்படாது. மேலும் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களும் நிம்மதியாக உறங்க முடியும். இப்படி ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதை அரசியல்வாதிகள் யோசிப்பார்களா?

கர்நாடகா, ஆந்திராவை ஒப்பிடும்போது கேரளா தமிழகத்துக்கு மிகப்பெரிய தண்ணீர் கொடையளிக்கிறது. ஆந்திரா, கர்நாடகாவுக்கு தமிழகம் ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு 3 கோடி ரூபாய் தருகிறது. ஆனால் கேரளாவுக்கு 70 டிஎம்சி தண்ணீருக்குநிலகுத்தகையாக 40 ஆயிரம் மடடுமே தருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா நோக்கி பாயும் 36 ஆறுகளை தடுத்து தமிழகம் நோக்கி திருப்பியிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடகூடாது.

கேரளா நமது நண்பன். அவர்கள் கோரிக்கையை மனிதநேயத்தோடு பார்ப்போம். நிச்சயம் தீர்வு உள்ளது. 

குமரிக்காக மேற்கு தொடர்ச்சி மலையின் அத்தணை அணைகளையும் ஆறுகளையும் கேரளாவுக்கு விற்றுவிட்டு இன்று மீண்டும் உரிமைகொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

வரலாற்றை கொஞ்சம் திருப்பி பாருங்கள் 
காமராசரால் அனாதையாக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கேரள தமிழர்களின் குரலை ஒருநாளாவது தமிழர்கள் கேட்டதுண்டா?

50 ஆண்டுகால வரலாற்றில் ஒரு தலைவராவறு வண்டிபெரியாறு உட்பட பகுதிகளுக்கு சென்று தமிழர்கள் குறைகளை கேட்டிருக்கிறார்களா?

தமிழகம் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு தரும் நாடு என்றால் தயவு செய்து தமிழ் என்ற பெயரை தூக்கிவிட்டு சென்னை மாகாணம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். உலக தமிழர்களுக்கு ஒரு நாடாக இருக்குமானல் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கட்டும்.

வண்டிபெரியார், இடுக்கி இந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு ஒரு துரும்பை கிள்ளியிருக்குமா?

தமிழகம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கொடுமை யாருக்காவது தெரியுமா? ஆழியாறு நீர் கிடைக்காமல் பாலக்காடு மாவட்டத்தில் கருகிபோகும் நெற்கதிர்களின் மரணக்குரலை எப்போதாவது தமிழகம் காதுகொடுத்து கேட்டதுண்டா?

கோவை அருகே அட்டப்பாடி என்ற ஒரு பகுதி இருக்கிறது. உலகின் தலைசிறந்த சுற்றுலா தளமாகவும் விவசாய பூமியாகவும் இருந்த மண் இன்று வீணாக போனது.

காரணம் ஒரு மேம்பாட்டு முயற்சிக்கும் தமிழகம் சம்மதிப்பதில்லை.

புவியியல் மற்றும் கலாச்சர அமைப்பில் தமிழகமாக இருந்த பகுதிகளை காமராசர் தன் சுயநலனுக்காக கேரளாவிடம் அடகுவைத்துவிட்ட கொடுமை யாருக்காவது தெரியுமா?

தமிழக அரசின் உதவி கிடைக்கும் என காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துபோன தமிழர்கள் தான் இன்று கேரளாவின் ஆதரவு கரத்தை பிடித்துள்ளனர்.

காமராசரால் அநாதையாக்கப்பட்ட இந்த தமிழர்களை இன்றும் கவுரவமாக வைத்துள்ளது கேரளா. இவர்களுக்கு தமிழ்பள்ளிகள், தமிழில் அரசு ஆவணங்கள், தமிழில் குடும்ப அட்டை, தமிழில் வாக்காளர் அடையாள அட்டை, தமிழில் பெயர்பலகைகள்  என தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தள்ளது.

ஆனால் கேரள மக்களின் உயிர் பயத்திற்கு நாம் என்ன மதிப்பளித்துள்ளோம். குறைந்தபட்சம் அவர்களின் கருத்து என்ன என்றாவது காது கொடுத்து கேட்டுள்ளோமா? 

மதுரை உட்பட தென்மாவட்ட விவசாயிகளே தயவு செய்து தமிழக அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். நமது தொப்புள்கொடி உறவுகளின் கையில் உள்ளது முல்லைபெரியாறு தீர்ப்பு.

அவர்களை சென்று சந்தியுங்கள். அவர்கள் நிலையை பாருங்கள். அவர்களது அச்சத்தை போக்குங்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அவர்கள் மனது வைத்தால் முல்லைபெரியாறு என்றும் உங்களுடையது தான்.

Dec 18, 2010

கருணாநிதியின் துணைவி வீட்டில் ரத்தன் டாட்டா. ஆதாரத்துடன் த.பாண்டியன் (காணொளி)

தாயநிதிமாறன் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக வரக்கூடாது என்பதற்காக ரத்தன்டாடா, ராசாத்தியம்மாளுக்கு செய்த கைமாறை த.பாண்டியன் விளக்கியுள்ளார்.  

 சென்னையில் ராசாத்தியம்மாள் வீட்டுக்கு நேரடியாக வந்த  ரத்தன் டாடா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். சென்னையில் தனக்காக வாங்கப்பட்ட இடத்தை ரத்தன் டாட்டா ராசாத்தியம்மாளுக்கு வழங்கியுள்ளார். இதுகுறித்து ஆதாரபூர்வமாக இந்திய கம்யூனிச தோழர் த.பாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார்.
  

Dec 17, 2010

கோவை பத்திரிக்கையாளர்களை குலுக்கிய குலுக்கல் லாட்டரி

கொஞ்சம் வேதனையான விடயம் தான். சக பத்திரிக்கை நண்பர்களை பற்றி வெளிப்படையாக எழுதுவது அநாகரீகம் தான். ஆனாலும் கம்பீரமாக இருக்கவேண்டிய பத்திரிக்கையாளர்கள் கூட்டுகளவானிகளாகும்போது அதை வெளிப்படுத்தாமல் இருக்க முடியுமா?

நான் எழுத தயங்கியதை நண்பர் ரா.வேலுசாமி எழுதிவிட்டார். அந்த நிகழ்வை நானும் கொஞ்சம் படம்பிடித்து காட்டிவிடுகிறேன்.

கோவையில் பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை ஒதுக்கும் அரசு உத்தரவுக்கான அடிதடி தான் அது.

விண்ணப்பித்ததில் 162 பத்தரிக்கையாளர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 130 பேருக்கு தான் இடமாம். இந்த 130 பேரை தேர்ந்தெடுக்க குலுக்கல் நடத்தினர். எதற்காக இந்த குலுக்கல்?

தகுதியான 162 பேருக்கும் இடம் தருவது தான் சரியான வழிமுறை. ஆனால் திடீர் என 130 பேருக்கு என ஒரு வட்டம் போட்டார்கள். இதற்கான காரணம் கேட்ட போது அவ்வளவு தான் இடம் இருக்கிறதாம். ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.



162 பேரில் இருந்து 130 பேரை தேர்ந்தெடுக்க தகுதிமுதிர்ச்சி அடிப்படையை கையாளலாம் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வேடிக்கையான குலுக்கல் நடந்தது. 

குலுக்கல் முடிவில் குலுக்கல் நடத்திய மாவட்ட வருவாய் அதிகாரியிடம் ஒரு கேள்வியை கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் தான் எல்லோரையும் தூக்கிவாரி போட்டது.

இன்னும் இடமே தேர்வு செய்யவில்லையாம்!

இடமே தேர்வு செய்யாமல் எப்படி 130 பேருக்கு தான் இடம் என்றார்கள்? எதற்காக இந்த குலுக்கலை நடத்தினார்கள்? இதன் பின்னால் இருக்கும் உந்து சக்தி என்ன?

இதில் இன்னொரு வேதனை என்னவென்றால் ஒரு நபருக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் நில அளவை கூடுதலாக கேட்கும் பத்திரிக்கையாளர்கள், இருக்கும் இடத்தை தகுதியான அனைத்து சக பத்திரிக்கையாளர்களுக்கும் பகிர்ந்துஎடுக்க மறுக்கிறார்கள். 

இருக்கும் இடத்தை தகுதியானவர்களுக்கு பகிர்ந்துகொடுத்தால் எதற்கு இந்த குலுக்கல் அசிங்கம்? 

குலுக்கல் நடத்தியது தவறு. இடமே தெரிவுசெய்யாமல் குலுக்கல் நடத்தியது மிகப்பெரிய தவறு. மாவட்ட வருவாய் அதிகாரி முன்பு குலுக்கலுக்கு பத்திரிக்கையளார்கள் கைதட்டி ஆர்ப்பரித்தது உண்மையில் கேவலமாக இருந்தது. 

எடிசனே இன்னும் வெளிவராத டைம்சு ஆப் இந்தியா, கோவையில் நிருபராக ஒரு நாள் கூட பணிபுரியாத பத்திரிக்கை ஆசிரியர்கள், பத்திரிக்கையாளர்களே அல்லாத வடிவமைப்பு துறையாளர்கள், பெயருக்கு கூட வெளிவராத பத்திரிக்கையில் பணிபுரிவதாக சொல்வோர். பத்திரிக்கை முதலாளிகள். மாதம் ஒரு முறை வெளிவரும் இதழ்கள். இவர்கள் எல்லாம் எப்படி கோவையில் உழைக்கும் பத்திரிக்கையாளர்களானார்கள்?  

இன்னும் ஏராளம் இருக்கிறது. அரசு அதிகாரிகளுக்கு டாசுமார்க் பார் நண்பர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்கள் என்றால் உண்மையாக உழைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு என்ன விலைஇருக்கப்போகிறது?

பத்திரிக்கையாளர்களுக்கு சமுதாயம் உச்ச கவுரவத்தை தந்துள்ளது. இதை இப்படி கேவலப்படுத்திக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதுவும் கோவை பத்திரிக்கையாளர்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டுள்ளோம். வரட்டும் அப்புறம் இருக்கிறது வேடிக்கை.

உண்மையில் பெரிய தமிழ் பத்திரிக்கைகளில் பணிபுரியும் நிருபர்களுக்கு குறைந்த சம்பளம் தான் கிடைக்கிறது. அன்பளிப்பு வாங்காத நேர்மையான நிருபர்கள் இன்றைய விலைவாசியில் எவ்வளவு கடினப்படுகிறார்கள் என்பது சக பத்திரிக்கையாளர்களு தெரியமால் இல்லை.

ஊருக்கெல்லாம் போனசு கிடைக்க குரல்கொடுக்கும் பத்திரக்கையாளர்கள், தங்களுக்கு போனசு கேட்டால் பணியே இல்லை. தங்கள் நிர்வாகத்தை எதிர்த்து எதற்குமே போராட முடியாத நிலையில் தான் உள்ளனர் பத்திரிக்கையாளர்கள். கிடைக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு நேர்மையாக பணியாற்றும் நிருபர்கள் உண்மையில் நாட்டின் தலைசிறந்த சமூக சேவகர்கள். இவர்களுக்கு அரசு தரும் சலுகையை கூட சிலர் தட்டிப்பறிப்பதை எப்படி வேடிக்கை பார்க்க முடியும்? 

தனக்கு கிடைத்தால் போதும் மற்றவை எப்படியோ நடந்துவிட்டு போகட்டும் என்று இருப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் ஒன்றும் சாதாரண பொதுமக்கள் அல்ல.

தங்களுக்கு கிடைப்பது நேர்மையாக கிடைக்கவேண்டும். இன்னொருவனுக்கு கிடைக்கவேண்டியதை தட்டி பறிக்ககூடாது. அதே நேரத்தில் நேர்மையற்ற முறையில் கிடைப்பதை ஏற்க கூடாது. அதை நேர்மையாக தரும்படி போராட வேண்டும் இது தான் உண்மையான பத்திரிக்கையாளனுக்கு அழகு.

அரசும், அதிகாரிகளும் செய்யும் ஊழலுக்கு சுயநலனுக்காக பத்திரிக்கையாளர்களே துணை போனால் பத்திரிக்கை தர்மத்தை மூட்டைகட்டி வைக்கவேண்டியது தான். 

அதிமுக காங்கிரசு கூட்டணி பேச்சு முறிந்தது

2006ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு போட்ட அதே கூட்டணியை அமைத்து 2011 சட்டசபை தேர்தலை சந்திக்க திமுக தயாராகி வருகிறது. அதற்கான முயற்சிகளை கருணாநிதி முழு வீச்சாக செய்து வருகிறார். ஆனால் எந்த முயற்சியும் முழுமையான பலனை தருவதில்லை.

காங்கிரசை வெளியேற்றினால் மட்டுமே கூட்டணிக்குள் வருவோம் என இடதுசாரிகள் திட்டவட்டமாக சொல்லிவிட்டன. அதே நேரத்தில் பாமக ஒரே ஒரு நிபர்ந்தனையுடன் அணிசேர தயாராகிவிட்டது. தேர்தலுக்கு பின் மத்தியில் அன்புமணி ராமதாசை மேலவை உறுப்பினராக்கி அமைச்சர் பதவியை பெற்றுதரவேண்டும்.

விசயகாந்த் முழுமையாக அதிமுக கூட்டணிக்குள் வந்துவிட்டார். இதனால் காங்கிரசு வந்தாலும் வராவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு அதிமுக வந்துவிட்டது. காங்கிரசு வராவிட்டால் மதிமுக, இடதுசாரிகள், கூடவே கொங்கு முன்னேற்ற கழகத்தையும் சேர்த்துக்கொள்வது என அதிமுக முடிவுசெய்துள்ளது.

அதிமுகவுக்கு சீமான் மற்றும் சனவரியில் கட்சி துவங்க இருக்கும் நடிகர் விசய் ஆகியோர் அதரவு தெரிவிக்ககூடும்.

தற்போதைய நிலவரப்படி

திமுக - காங்கிரசு - பாமக - விடுதலைசிறுத்தைகள் - சில இசுலாமிய கட்சிகள்

அதிமுக - தேமுதிக - மதிமுக - இடதுசாரிகள் - கொ.மு.க - புதிய தமிழகம் - சில இசுலாமிய கட்சிகள்

என்ற நிலையில் கூட்டணி நிலவரம் உள்ளது.

சமக பாரதியசனதா போன்றவையும் அதிமுக பக்கம் சாய தாயாராகியுள்ளன.

காலங்கள் மாற கட்சிகளின் கோலங்கலும் மாறலாம்.

Dec 16, 2010

ஆங்கில ஊடகங்களுக்கு கருணாநிதி போட்ட நாய்பிசுகெட்

அலைகற்றை ஊழல் விவகாரத்தில் தன்னையும் தன்குடும்பத்தையும் ஊடகங்கள் கடித்துக் குதறுவதில் இருந்து தப்பிக்க நல்லவே திட்டம் போட்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழகம் முழுவதும் சி.பி.ஐ 27 இடங்களில் சோதனையிட்டது. இதில் முக்கியமாக கனிமொழியின் தாயும் கருணாநிதியின் துணைவியுமான ராசாத்தியம்மாளின் தணிக்கையாளர் வீட்டில் நடந்த சோதனை தான் உச்சம்.

இதை ஊடகங்கள் ஊதிபெரிதுபடுத்திவிடும் என்ற பயம் திமுக தலைமையை கிடுகிடுக்க வைத்துவிட்டது. அதை எதிர்கொள்ள எடுத்த ஆயுதம் தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அறிக்கையின் பின்னனி.

ராசாத்தியம்மாள் வீடு வேறு கருணாநிதி வீடு வேறு அல்ல. அப்படியிருக்கும்போது கருணாநிதியின் தணிக்கையாளர் வீட்டில்தான் இந்த சோதனை நடந்துள்ளது.

இந்த கேவலத்தை எப்படி சமாளிப்பது? இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் இருக்க என்ன செய்வது?

நீண்ட யோசனையின் விளைவாக விடுதலைபுலிகள் நினைவு பொறிதட்டியிருக்கிறது.

பிரதமர், சோனியா, அப்புறம் நம்ம முத்தமிழ் வி.... களை விடுதலைபுலிகள் கொல்ல திட்டம் போட்டுள்ளனர் என்ற அறிக்கையை தமிழக காவல்துறை வெளியிட்டது. ஊடகங்கள் இந்த நாய்பிசுகெட்டை கவ்விக்கொண்டு சி.பி.ஐ சோதனையை விட்டுவிடுவார்கள் என்பது தான் திமுக தலைமையின் எதிர்பார்ப்பு

ஆனால் ஊடகங்கள் சும்மாவா?

அதையும் கவ்விக்கொண்டது. அப்புறம் இதையும் விடவில்லை. இப்போதும் விடுதலைபுலிகள் ஊடுருவல் என்பதை விட கருணாநிதியின் வீட்டில் சோதனை என்ற பிசுகெட்தான் அதிக சுவையாக உள்ளது என்கிறன ஊடகங்கள்.

பாவம் தாத்தா தான் ஏமாந்துவிட்டார்.

காங்கிரசு சி.பி.ஐயை வைத்து திமுகவை மிரட்டுகிறது. திமுக விடுதலைப்புலிகளை காட்டி காங்கிரசை மிரட்டுகிறது.

இவர்கள் பங்கு பிரச்சனைக்கு சி.பி.ஐயும் விடுதலைப்புலிகளையும் பகடைகாயக்கியது தான் காலத்தின் கொடுமை.

குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம் - கனிமொழி பேட்டி

அலைகற்றை முறைகேடு வழக்கில் குற்றம் அற்றவர்கள் என நிரூபிப்போம் என கனிமொழி கூறியுள்ளார். 

இது குறித்து கனிமொழி கூறியதாவது :  அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ., தனது பணியை செய்கிறது. இதற்கு நாங்கள் எதிராக இருக்க மாட்டோம். இந்த விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும். குற்றமற்றவர்கள் என நிரூபிப்போம். இந்த சோதனை மூலம் நாங்கள் திறந்த மனதாக இருக்கிறோம் என்பது புலப்படுகிறது.  சி.பி.ஐ சோதனை காரணமாக எங்கள் கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்றுள்ளார்.

கனிமொழி வீட்டில் இன்னமும் சி.பி.ஐ சோதனை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மிகுந்த மூளைசலவைக்கு பின் கனிமொழி சி.பி.ஐ சோதனைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்தே இந்த பேட்டி. விரைவில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடக்கலாம்.

மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள் : ந‌ற்ற‌மிழ‌ன்

உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.
புலிகள்  இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும்,  இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர்.  
இல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்).   மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)
இது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)

ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, 
ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.  அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை. 
 இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது,  அப்படி கேட்டாலும் கிடைக்காது.   ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது,  சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும்,  ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.
படைப்பு : ந‌ற்ற‌மிழ‌ன்

Dec 15, 2010

நீராராடியா வீட்டில் சி.பி.ஐ சோதனை-கனிமொழிக்கு திக்திக்

அலைகற்றை ஊழல் தொடர்பாக நீரா ராடியாவின் வீட்டில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.  டெல்லி பாரகம்பாவில் உள்ள நீரா ராடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்திவருகின்றது.

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் வீட்டிலும் சோதனை நடக்கிறது. டெல்லியில் 7 இடங்கள் உட்பட 34 இடங்களில் சிபிஐ சோதனை நடக்கிறது.

ராசாவி வீட்டில் நடந்த சோதனையை அடுத்து கிடைத்த முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கனிமொழி வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கு திமுக தலைமையில் இருந்து வந்த கடும் எதிர்ப்பால் காங்கிரசு நிலைகுலைந்தது. அதனால் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐக்கு காங்கிரசு மறைமுக தடைவிதித்தது.

காங்கிரசின் இந்த செயலுக்கு பிரதமர் தன் மவுன கண்டனத்தை தெரிவித்தார். சி.பி.ஐ கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவதில் குறுக்கிடக்கூடாது என்பதை தெரிவித்துள்ளார். தனது அதிருப்தியை நேற்று தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்த பேச்சில் குறிப்பிட்டார்.

இதை தொடர்ந்தே கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ புது திட்டம் போட்டுள்ளது.

ராசா வீட்டில் சோதனை நடந்த கையோடு கனிமொழி வீட்டில் சோதனை நடத்தும் செயலுக்கே திமுக கடும்எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதற்கு மாற்றாக நீராராடியாவின் வீட்டில் நடந்த சோதனைக்கு பின், அதன் அடிப்படையில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்த சி.பி.ஐ திட்டமிட்டுள்ளது. இது ஓரளவு கவுரவம் காக்கும் என திமுக எதிர்பார்க்கிறது. அதற்கு அதிக எதிர்ப்பு இருக்காது என்றும் சி.பி.ஐ நம்புகிறது. 

நடக்கட்டும் சி.பி.ஐ சோதனைநாடகங்கள். இவர்களின் நாடகத்தை வேடிக்கை பார்ப்பதை தவிர இந்திய குடிமகன் வேறு என் செய்ய முடியும்?

Dec 13, 2010

கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினால் நடப்பதே வேறு

அலைகற்றை விவகாரத்தில் சி.பி.ஐ சோதனை திமுகவை கதிகலங்க வைத்துள்ளது. ராசாவீட்டில் சோதனை வழக்கமானதாக தான் கருதப்பட்டது. அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சி.பி.ஐ யின் அடுத்த திட்டம் தான் திமுகவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

அலைகற்றை விவகாரத்தில் மேலும் சில ஆவணங்களை சேகரிக்க கனிமொழி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தும் சி.பி.ஐயின் திட்டம் தான் அடுத்த பரபரப்பு பொறி.

கனிமொழி வீட்டில் சோதனை நடத்துவது வேறு என் வீட்டில் சோதனை நடத்துவது வேறு அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தால் நடப்பதே வேறு என தலைமை கடுமையாகவே டெல்லியை எச்சரித்துவிட்டது.

ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் தன் நண்பர்கள் என்று கருணாநிதி டெல்லிக்கு போட்ட குண்டு காங்கிரசை மூச்சடைக்க வைத்துள்ளது. அந்த 50எம்.பிக்கள் பட்டியலில் காங்கிரசை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான் சோனியாவுக்கு திக்திக்.

50 எம்.பிக்கள் பட்டியலை தொலைபேசியிலேயே கடகடவென வாசித்து ஒரு காட்டம் காட்டிவிட்டது திமுக. உசாரான சோனியா காங்கிரசின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கலைஞரின் பேச்சில் உண்மை இருக்கலாம் என்ற கருத்து சோனியாவைவின் படபடப்பை கூட்டிவிட்டது. அதை தொடர்ந்தே இன்று அவசர அவசரமாக காங்கிரசு எம்.பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார் சோனியா.

திமுக எதிராளியாக மாறிவிட்டால் காங்கிரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதை தமிழக காங்கிரசு தலைவர்களோடு பலரும் சோனியாவை மூளை சலவை செய்து வருகின்றனர்.

திமுகவை கழட்டி விடாவிட்டால் பிரதமர் பதவியில் தொடரமாட்டடேன் என்று காட்டமாகவே சொல்லிவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார் மன்மோகன்சிங்.

தேசிய அரசியலை பொருத்தவரை அதிமுகவுக்கு மட்டுமே திமுக எதிரி. ஆனால் பாரதிய சனதா, இடதுசாரிகளுக்கு காங்கிரசு தான் குறி. திமுகவை கழட்டிவிட்டால் அலைகற்றை ஊழலின் முழு கல்லடியும் காங்கிரசு மீதே விழும் என்பதையும் சோனியா கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளர்.

மொத்தத்தில் அலைகற்றை ஊழலால் காங்கிரசு திமுக என்ற புலிவாலை பிடித்துவிட்டது. விட்டால் காங்கிரசுக்கு தான் அதிக ஆபத்து.

ஆமாம். ஊழல் நடந்தது. பிரதமரும் சோனியாவும் தான் ஊழலுக்கு தூண்டினர். ஊழலில் பெரும் பங்கு காங்கிரசுக்கு சென்றுள்ளது என திமுக அறிக்வை விட தயங்காது என்பது காங்கிரசுக்கு தெரியாமல் இல்லை.

இப்பாதைக்கு செயலலிதா என்ற நரிவாலை பிடிப்பதைவிட, திமுக என்ற புலிவாலை விடாமல் இருப்பது தான் காங்கிரசுக்கு நல்லது.

தற்போது வெளியில் நடமாடுவது போல பவ்லா செய்தாலும், நேற்று முதல் கைது செய்யப்படாத குறையாக சி.பி.ஐ விசாரனை பிடியில் இறுகியுள்ளார் ராசா.

அந்த நாடகம் ஒரு பக்கம் நடக்கட்டும். அதில் அவ்வளவு சுவாரசியம் இருப்பதாக தெரியவில்லை.

கனிமொழி வீட்டில் சோதனை நடக்குமா நடக்காதா? அங்கே இருக்கிறது அரசியல் சூடும் பரபரப்பு பொறியும்.

Dec 12, 2010

ரசினிகாந்தின் அரசியல் வருகை ரகசியம்

ரசினியின் மீது படியப்பட்டுள்ள ஒரு கறை அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்று மக்களை குழப்பியது.

பாபா திரைபடத்தின் இறுதி காட்சியில் ஆன்மீகத்துக்கு செல்ல முயன்று பின்னர் அரசியலுக்கு திரும்பும் திருப்புமுனை. குசேலனில் அரசியலுக்கு வருவேன் என்று நான் சொல்லவே இல்லை. திரைப்படத்தில் இயக்குனர்கள் எழுதும் வசனத்தை பேசுகிறேன் அவ்வளவு தான் என்ற மலுப்பல். சிவாசியில் மீண்டும் அரசியல்வாதிகளை சுளுக்கெடுக்கும் காட்சிகள். எந்திரனில் எதுவுமே இல்லாத புதுமுகம்.

உண்மையில் ரசினிக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அவரது பல பொது பேச்சுகளிலேயே தெளிவாக தெரிகிறது.

எம்.சி.ஆருக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் தலைவராக ரசினியை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பது நிதர்சன உண்மை.

எம்.சி.ஆருக்கு முன்னர் இருந்த தமிழக அரசியல் வேறு. எம்.சி.ஆருக்கு பின்னர் இருக்கும் தமிழக அரசியல் வேறு.

எம்.சி.ஆருக்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட இரு பெரும் கட்சிகளின் சரிசம போட்டியில் உதிரி கட்சிகள் எல்லாம் உதிர்ந்துபோயின.

எம்.சி.ஆருக்கு பின்னர் கருணாநிதியை எதிர்க்கும் போட்டியில் செயலலிதா செயித்துக்காட்டினார். அதற்கு பின்னர் கருணாநிதியும் செயலலிதாவும் இருபெரும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.

தமிழகத்தில் ஒன்று செயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். அல்லது கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். அது அல்லாமல் இந்த இருவரையுமே ஒருசேர எதிர்த்து அரசியல் செய்யவது கடினம்


வைகோ, மூப்பனார், விசயகாந்த் இவர்கள் தோற்றதும் இதனால் தான்.


அதிமுக, திமுக என்பதை தான்டி செயலலிதா கருணாநிதி இவர்களை ஒருசேர எதிர்க்கும் மூன்றாம் சக்திக்கு கடைசிவரைக்கும் வாய்ப்பே இல்லை.

செயலலிதாவுக்கு பணம், எம்.சி.ஆர்(கருணாநிதி எதிர்ப்பு அலை) இதை வைத்து மட்டும் தான் அரசியல் செய்ய தெரியும். ஆனால் கருணாநிதிக்கு சாதி, மொழி, இனம், மதம், பணம், சட்டம், நட்பு, அழுகை, கண்ணீர், வயது, எழுத்து என எதைவைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்ய தெரியும்.

13 ஆண்டுகள் எம்.சி.ஆரை எதிர்த்து அரசியல் செய்ததில் கருணாநிதிக்கு கிடைத்த மனபலம் சாதாரணமானது அல்ல. அது மிகப்பெரிய மனோசக்தி. அதனால் தான் இன்றளவும் கருணாநிதியால் இன்றும் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. 

சரி ரசினி விடயத்துக்கு வருவோம்.

ரசினியின் குழப்பம் மவுனத்திற்கும் அது தான் காரணம்.

தமிழகத்தின் அந்த மூத்த அரசியல் தலைவரின் ஓய்வு தான் ரசனியின் அரசியல் ஆரம்பம்.

கருணாநிதிக்கு பின்னர் செயலலிதாவை எதிர்க்க சரியான நபர் ரசினியாக தான் இருக்க முடியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டால் வைகோவை போல விசயகாந்தும் நீர்த்துப்போவது உண்மை. கூட்டணிக்கு பின்னர் வெளியே வந்து செயலலிதாவை எதிர்த்தால் அதை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதே நேரத்தில் இந்த முறை ஏதாவது ஒரு கூட்டணியை அமைக்காவிட்டால் தேமுதிக கூடம் காலியாகிவிடும் என்பது விசயகாந்தின் அச்சம்.

கருணாநிதிக்கு பின்னர் திமுகவை சிதறாமல் கட்டுக்குள் வைக்கும் தலைவர்கள் இல்லை. 45 வருடங்கள் ஒரு தலைவரின் கட்டுக்குள் இருக்கும் கட்சி அந்த தலைவருக்கு பின்னர் சிதறிப்போகும் என்பது நிதர்சனம். அதை விட குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி உடையமால் இருந்தால் அது உலகமாக அதிசயமே. அப்படி ஒரு அதிசயம் நடக்காது என்பது சதாரண குடிமகனுக்கு கூட தெரியும்.

கருணாநிதிக்கு பின்னர் தமிழக அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சிதறல்களை சிந்தாமல் சேர்த்துக்கொள்ளும் சாணக்கியம் இருந்தால் ரசினி அரசியலில் செயிப்பது நிச்சயம்.


அந்த தருணத்திற்காக தான் ரசினி காத்திருக்கிறார் என யூகிப்பது சரியானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இன்று இரவு ராசா கைது ? : மத்திய அரசு கவிழும் சூழல்



ராசா இன்று கைது செய்யப்பட்டுள்ளார் 

செய்தி படிக்க இங்கு க்ளிக் ...

அழகரியை திருப்திப்படுத்த ராசா கைது



இன்று இரவு முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்படலாம். அடுத்த கனமே மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பபெற திமுக தயாராகிவருகிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் - உளவுதுறை அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டுவரும் செய்தியின் அடிப்படையிலேயே அமைகிறது இந்த செய்தி.

இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் கருணாநிதி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் திடீர் என நேற்று மாலையே முதல்வர் வருகை ரத்துசெய்யப்பட்டது. இதற்கு முதல்வரின் உடல்நிலை சரியில்லை என்பது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் உண்மையில் மனநிலை தான் காரணம் என்பது இலைமறை செய்தி.

ராசா கைது குறித்து நேற்று காலையே முதல்வருக்கு பிரணாப் முகர்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த கருணாநிதி, ராசா கைது செய்யப்பட்டால் உடனடியாக மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திமுக திரும்ப பெரும். அதே போல நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், திமுகவுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணியில் உள்ள 50 எம்.பிக்கள் விபரத்தையும் கருணாநிதி கூறியுள்ளதாக தெரிகிறது.

கருணாநிதியின் இந்த அதிரடி காங்கிரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் என்பதை போட்டு உடைத்துள்ளார் பிரணாப் முகர்சி.

கனிமொழி தற்கொலை செய்துகொள்வதாக சொன்ன நீராராடியாவின் தொலைபேசி பேச்சால் கனிமொழி தற்போது மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். அதையும் மீறி கனிமொழி வீட்டிலும் அலுவலகத்திலும் சி.பி.ஐ சோதனை நடத்த திட்டமிட்டிருப்பது தான் திமுக வை உச்ச கோபத்திற்கு கொண்டுபோயுள்ளது.

இந்த பிரச்சனையை தன்மான பிரச்சனையாக கருதி மத்திய அரசை கவிழ்க்கும் முயற்சியில் தீவீரமாகியுள்ளார். அதே நேரத்தில் செயலலிதாவின் ஆதரவை நம்பவும் காங்கிரசு தயங்குகிறது. அதை தொடர்ந்தே நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவுக்கு காங்கிரசு வந்துள்ளதாக தெரிகிறது.

இன்று நள்ளிரவு முதல் மத்திய மாநில அரசியல் சூடு அனல்பறக்கபோகிறது.

Popular Posts