Dec 27, 2010

செயலலிதா + தினமணியின் முட்டாள்தனமான வாதம்

மாப்பிளை தலைசீவும் சிப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல உள்ளது செயலிதாவின் அறிக்கை.

முல்லைபெரியாரில் புதிய அணை கட்ட கேரளா திட்டமிட்டுள்ள இடம் புலிகள் பாதுகாப்பு வனத்திற்கு உட்பட்டது. சமீபத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து உலகளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் புதிய அணை கட்ட பிரதமர் அனுமதி அளிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால் கேரளாவால் புதிய அணை கட்டமுடியாது. இதை சர்வதேச புலிகள் பாதுகாப்பு அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் என்பது தான் செயலலிதாவின் புதிய அறிக்கை சுருக்கம்.

இதை தினமணி புகழ்ந்து தள்ளியுள்ளது. வாசகர்கள் நடுநிலையும் தமிழர்கள் மீது அக்கறையும் உள்ள தினமணியின் சேவை வாழ்க என்று வேறு புகழ்ந்து தள்ளுகின்றனர்.

முதலில் செயலலிதாவுக்கு விளக்கமளித்துவிட்டு தினமணிக்கு வருகிறேன்.

புலிகளை பாதுகாக்க புதிய அணை கட்டக்கூடாது என்று நீங்கள் கூறுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே கேரளா முல்¬லைபெரியாறு அணையால் புலிகளுக்கு ஆபத்து என்பதை ஒரு வாதமாக வைத்துள்ளது. அரசியல்வாதிகள் கொஞ்சம் பழைய செய்திதாள்களையும் படிப்பது நல்லது. (பத்திரிக்கை ஆசிரியர்களும் தான்) 

முல்லை பெரியாறு அணை உடைந்தால் மனிதர்களை விட புலிகள், காட்டுயானைகள் அழியும் என்பதை கேரளா ஏற்கனவே காணொளியுடன் விளக்கியுள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் புலிவாலை பிடித்தால் உங்களுக்கு தான் ஆபத்து. புலிகளை காப்பது இருக்கட்டும் தமிழ்ஈழ புலிகளை காக்க எதாவது குரல்கொடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

அடுத்து தினமணி

தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக கட்டுரைகள் வெளியிடும் தினமணியின் அதே அலுவலகத்தில் இருந்து வெளிவரும் இன்டியன் எக்சுபிரசு நாளிதழில் ஏன் கேரளவுக்கு ஆதரவாக செய்திகள் வருகின்றன. அப்படியானால் உண்மை தான் என்ன? இது தான் நடுநிலையா?

முல்லை பெரியாறு விடயத்தில் சன் டிவி செய்திக்கும் சூரியா டிவி செய்திக்கும் ஏன் வேறுபாடு ( இரு டிவிக்கும் செய்திகள் சென்னையில் ஒரே ஒளிப்பதிவு அறையில் இருந்து தானே ஒளிபரப்பப்படுகிறது ) 

தமிழக காங்கிரசும் கேரள காங்கிரசும் முல்லைபெரியாறு விடயத்தில் ஒரே கருத்தை கொண்டுள்ளதா? தமிழக இடதுசாரிகளும் கேரள இடதுசாரிகளும் ஒரே கருத்தை கொண்டுள்ளார்களா? தமிழக அதிமுகவும் கேரள அதிமுகவும் ஒரே கொள்கைள் உடையனவா?

ஒன் மேன் ஆர்மி அதிமுக என்றால் கேரள அதிமுக தேர்தல் அறிக்கையில் எப்படி கேரளா புதிய அணை கட்டியே தீரவேண்டும் என்பது இடம்பெற்றது? இதை ஏன் செயலலிதா கண்டிக்கவில்லை? கேரளாவில் புதிய அணை கட்டவேண்டும் என்கிற கேரள திமுக யாருக்காவது தெரியுமா? இவர்களுக்கு கருணாநிதியும் கனிமொழியும் சால்வை அணிவித்து கூப்பாடுபோடுவதாவது தெரியுமா?

முல்லை பெரியாறு பற்றி வாய்கிழிய பேசும் வைகோவுக்கு குமரகத்தின்(கோட்டயம்) ரகசியங்கள் தெரியாதா? வைகோ மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் முல்லைபெரியாறு அணையால் ஆபத்து இல்லை என்று!

குமுளி இடுக்கி, வண்டிபெரியாறு பகுதிகளில் தமிழ் மலையாளம் தெரிந்த பத்திரிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இதில் தினத்தந்திக்கும் மலையாளத்தின் மாத்யமம் உட்பட பத்திரிக்கைகளுக்கும் ஒரே நிருபர் தான். அவர் ஒருவரே இரு பத்திரிக்கைகளுக்கும் செய்தி அனுப்புவார். அப்படியே மொழிமாற்றம் செய்து அனுப்பினால் பத்திரிக்கைகள் செய்தியை வெளியிடுமா? அங்கு ஆதரவாக அங்கு இங்கு ஆதரவாக இங்கு இதுதான் உண்மை நிலை.

பொதுமக்களே தயவு செய்து உண்மையை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்

ஏன் ஒரே செய்தி நிருவனம் இருவேறு செய்திகளை தருகிறது? ஏன் ஒரே கட்சி இருவேறு குரல் கொடுக்கிறது? ஏன் ஒரே நிருபர் ஒரே செய்தியை இருவேறு கோணங்களில் எழுதுகிறார்?

ஒரு கனமேனும் யோசியுங்களேன்... 

No comments:

Post a Comment

Popular Posts