Apr 17, 2016

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 5

பெரியார் கண்ட திராவிட நாடும்
அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 5

திராவிட நாடு கோரிக்கையை ஆரியர்கள் உடைத்த வரலாற்றை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

மெட்ராஸ் ஸ்டேட் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஆனாலும் ஏன் தமிழ்மொழிக்கு என தனிமாநிலம் இல்லை என்ற ஆதங்கம் கோபமாக வெடித்தது.

தெலுங்கர்கள் பிரிந்தாயிற்று, கன்னடியர் பிரிந்தாயிற்று, மிச்சமிருந்த மலையாளியரும் பிரிந்து விட்டார்கள். இனி மெட்ராஸ் ஸ்டேட் எதற்கு? அதை தமிழ்நாடக அறிவியுங்கள் என போராட்டங்கள் வலுத்தன.

போராட்டத்தை ஒடுக்க ஆரியர்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை கொண்டே காய்நகர்த்தினர். திராவிட கழக தொண்டர்கள் அடிபட்டனர், சிறைபட்டனர். இந்த சூழலில் தான் இந்தி திணிப்பும் மீண்டும் புத்துணர்வு பட்டது. 

திராவிடர்கள் பிளவு பட்டு விட்டார்கள், இந்த நேரத்தில் இந்தியையும் திணித்து விடலாம் என மத்திய காங்கிரஸ் அரசார் கங்கணம் கட்டினர். 

பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் தீக்குளித்தனர். பலர் பட்டினி போராட்டம் இருந்தனர். தமிழகமே பற்றி எரிந்தது. சங்கரலிங்கனார் என்ற மொழிப்போர் தியாகி பட்டினி போராட்டத்திலேயே மாண்டார். இன்னும் தமிழகத்தில் போராட்டம் உக்கிரம் அடைந்தது.

அப்போது தான் ஆரியர்கள் எதிர்பார்த்த அந்த வார்த்தை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இந்தியும் வேண்டாம், திராவிடமும் வேண்டாம் என்ற வார்த்தை தான் அது.

தெலுங்கு பிரிந்தாயிற்று, கன்னடம் பிரிந்தாயிற்று, மலையாளமும் பிரிந்தாயிற்று இன்னும் எதற்கு உங்களுக்கு திராவிடம் என்று ஆரியர்கள் கேலி செய்தனர். இந்த கேலியே மெட்ராஸ் ஸ்டேட் என தொடர்ந்தது.

இந்த கேலி திராவிட இயக்க இளைஞர்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்தது. ஆரியன் கேலி செய்வது நியாயம் தானே, இன்னும் எதற்கு நமக்கு திராவிடம் - என மாணவர்கள், இளைஞர்கள் பேசத் துவங்கினர். 

ஒருபுறம் ஆரியனின் கேலி, இன்னொருபுறம் ஆட்சியாளர்களிடம் அடி, நொந்து போனார்கள் திராவிட இயக்க இளைஞர்கள். 

இனியும் அடிவாங்கி சாக முடியாது. நாமும் ஆட்சி ஆதிகாரத்தை கைபற்ற வேண்டும். கொள்கைகளை விட ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். ஆட்சி அதிகாரத்தை கைபற்றி விட்டால் கொள்கைகளை எளிதாக செயல்படுத்தலாம் என அண்ணா முடிவெடுத்தார்.

உடைந்தது திராவிடக் கழகமே!

இப்போது இன்னும் குதூகலித்துக் கொண்டனர் ஆரியர்கள்.

தேர்தலில் போட்டி போட்டு ஆட்சியை கைபற்ற அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் முடிவு செய்தது. முதல் தேர்தலிலேயே கணிசமாக தொகுதிகளை வென்று ஆரியருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அண்ணா. 

இங்கே இன்னும் சாணக்கியனாக செயல்பட்ட துவங்கினர் ஆரியர்.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் திராவிடநாடு கொள்கையை கைவிட வேண்டும் என சட்டம் இயற்றினர்.

முதலில் ஆட்சியை பிடிப்போம், பின்னர் கொள்கைகளை செயல்படுத்தலாம் என்ற அண்ணாவின் கணக்கு இங்கே பிழைத்து போனது.  

ஒன்று திராவிடநாடு கொள்கைக்காக ஆட்சியை புறக்கணிக்க வேண்டும். அல்லது ஆட்சிக்காக திராவிடநாடு கொள்கையை கைவிட வேண்டும். இரண்டும் முக்கியமானவை. ஆனால் இரண்டையும் கொண்டு இனி பயணிக்க முடியாது. 

கொள்கையா? ஆட்சியா?  - அண்ணா என்ன முடிவு எடுப்பார்? - என திராவிட தலைவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்தது. உலக அரங்கில் கூட விவாதிக்கப்பட்டது.

இறுதியில் அண்ணா அந்த அதிரடி முடிவை அறிவித்தார்.

நாங்கள் திராவிடநாடு கொள்கையை கைவிடுகிறோம்!

அத்தனை திராவிட தலைவர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். தந்தை பெரியாரும் துடித்துப்போனார். 

திராவிடம் வீழ்ந்தது என ஆரியர்கள் கேலிக்கூத்தாடினர்.

பொறுமையாக தேர்தலை சந்தித்தார் அண்ணா. தேர்தல் வெற்றிக்கு பின்னர் எல்லோருக்கும் மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

சென்னை மாகாணத்தின் இறுதி தீர்மானமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் தீர்மானமாகவும் அது அமைந்தது.

ஆம். தமிழ்நாடு உதயமானது. 

ஆரியர்கள் அதிர்ந்து உறைந்தனர். மாறாக துவண்டு இருந்த திராவிடத் தலைவர்கள் திரண்டெழுந்து கொண்டாடினர்.  

இது திராவிடத்தின் முதல் வெற்றி என தந்தை பெரியார் வானுயர மகிழ்ந்தார். தமிழ்நாடு இது திராவிட நாட்டிற்கான அடித்தளம் என மார்தட்டி சொன்னார். 

திராவிட நாட்டை எதிர்த்த ஆரியருக்கு தமிழ்நாடு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அன்று வரை ஆரியரின் ஆட்சி அடக்குமுறையும், கேலிகிண்டலும் மட்டுமே அனுபவித்த திராவிட இளைஞர்கள் நாங்கள் தமிழ்நாட்டினர், நாங்கள் தமிழர்கள் என உற்சாக கூக்குரல் இட்டனர்.

‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’, ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என கொண்டாடினர். 

ஆட்சிக்காக திராவிடநாடு கொள்கையை கைவிட்டு பிழைத்த (தவறு செய்த) அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர்மாற்றத்தின் மூலம் பிழைத்துக் (மீண்டும்  சரிசெய்து) கொண்டார். 

இந்த நிகழ்வுக்காக தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழர்க்கே என முழங்கினார். அதற்காக திராவிட நாடு கொள்கையை எந்த இடத்திலும் தந்தை பெரியார் கைவிடவில்லை. தந்தை பெரியார் மட்டுமல்ல அறிஞர் அண்ணாவும் கைவிடவில்லை. 

இதை திரும்ப திரும்ப இருவருமே பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளனர்.
முற்றும்.

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4

பெரியார் கண்ட திராவிட நாடும்
அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 4

இந்திய சுதந்திர விடயத்தில் ஆரியர்களிடம் அம்பேத்கர் ஏமாந்தார். இதனால் பெரியாரின் திராவிட நாடு கொள்கை தனிமைப் படுத்தப்பட்டது. ஆனாலும் அது வலுவாக இருந்தது. பெரியாரை ஆரியரால் மயக்க முடியவில்லை. 

திராவிடர்களை மொழி ரீதியாக எளிதில் பிரித்துவிடலாம் என ஆரியர்கள் திட்டம் தீட்டினர். தென்னிந்தியாவில் மொழிப் பிரிவினையை தூண்டி விட்டனர். 

முதல் போராட்டமாக தனித்தெலுங்கான போராட்டம் வெடித்தது. திராவிடம் உடைய ஆரம்பித்தது. இரண்டாம் போராட்டமாக ஐக்கிய கேரளம் கோரப்பட்டது. மூன்றாம் போராட்டமாக கன்னடர் & மராட்டியர் தமக்குள் அடித்துக் கொண்டனர். 

உண்மையில் தனித்தெலுங்கான போராட்டம் என்பது தனிமாநிலம் கேட்ட போராட்டம் அல்ல. தனிநாடு கோரிய போராட்டம். இது சக்திவாய்ந்த போராட்டமாக இருந்தது. இந்தியாவை அசைத்து பார்க்கும் போராட்டமாக இருந்தது. ஏன் வெற்றிபெரும் நிலையை கூட எட்டியது. 

விடுவார்களா ஆரியர்கள்?

தெலுங்கான அமைத்து தர நாங்கள் தயார் என பகிரங்கமாக அறிவித்தனர். ஒவ்வொரு தேசிய கட்சியும் போட்டி போட்டு ஆதரித்தன. அப்போதும் அதை மாயவலை என அறிவித்தார் தந்தை பெரியார்.

தெலுங்கான அமைய திராவிட நாடு கோரிக்கை தான் தடையாக உள்ளது என ஆரியர்கள் பரப்புரை செய்தனர். தெலுங்கானாவின் தெற்கு பகுதிகள் சென்னை மாகாணத்தில்(மெட்ராஸ் ஸ்டேட்) உள்ளன. முதலில் அதை பிரிக்க வேண்டும் என ஆலோசனை கூறினர்.

வெடித்தது மொழிப்போர் - திராவிடத்துக்கு எதிராக!, 

நாங்கள் திராவிடர் அல்லர் என தெலுங்கானா தலைவர்கள் அறிவித்தனர். அதே பாணியில் கர்நாடகா, கேரள தலைவர்களும் முழக்கம் இட்டனர். 

எல்லாவற்றையும் பார்த்து இரசித்த ஆரியர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தனர்.

இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் என்பது தான் அந்த கல். தெலுங்கானா, திராவிட நாடு கோரிக்கைகளை ஒரே தீர்வில் ஒடுக்குவது தான் அதன் நோக்கம்.

மெட்ராஸ் ஸ்டேட் உடைக்கப்பட்டது. 

மெட்ராஸ் ஸ்டேட் உடைந்தால் தெலுங்கானா அமையும், திராவிடநாடு அமையும் என இருநாட்டு திராவிட தலைவர்களும் காத்திருந்தனர்.

விளைவு எல்லோரும் ஏமாற்றப்பட்டனர். 

ஐக்கிய கேரளம் உருவானது  என்ற ஒன்றை தவிர  - இதில் எந்த திராவிட போராட்டமும் வெற்றி பெற வில்லை.

தெலுங்கானா அமையவில்லை, மாறாக ஐக்கிய ஆந்திராவை ஏற்படுத்தி தெலுங்கர்களுக்குள்ளேயே பிரிவினையை தூண்டி குளிர்காய்ந்தனர். 

மலபார் மாவட்டங்களை பிரித்து கர்நாடகத்தை உருவாக்கினர். அங்கேயும் ஆரியர் சூழ்ச்சியே வென்றது. குடகு மாவட்டத்தை மெட்ராஸ் ஸ்டேட்டில் நிலைநிறுத்தாமல் கர்நாடகமாக மாற்றினார்கள். இதனால் இன்று வரை காவிரி என்ற ஒற்றை சொல்லில் கன்னடியர் திராவிடத்தை எதிர்த்து வருகின்றனர்.

மெட்ராஸ் ஸ்டேட் உடைக்கப்பட்டு 
ஆந்திரா உருவானது, 
கர்நாடகா உருவானது, 
கேரளா உருவானது, 
ஆனால் தமிழ்நாடு உருவானதா என்றால் 
இல்லை என்பது தான் பதில்!

தமிழ்நாடு என அறிவிக்க முடியாது. அது மெட்ராஸ் ஸ்டேட்டாகவே இருக்கும் என தீர்க்கமாக கூறிவிட்டனர் இந்திய ஆட்சியாளர்கள்.

மெட்ராஸ் ஸ்டேட்டை உடைத்து, திராவிட மாநிலங்கள் காலத்துக்கும் அடித்துக்கொள்ள தக்க ரீதியில் எல்லைகளை பிரித்தார்கள். இதனால் என்றுமே திராவிட நாடு உதயமாக சாத்தியம் இல்லை என தீர்மானித்தார்கள்.

ஆனாலும் தந்தை பெரியார் விடவில்லை. அவரது திராவிடநாடு பேராட்டம் தொடர்ந்தது. ஆனால் அண்ணாவின் அவசர முடிவால் வீழ்ந்தது தந்தை பெரியாரின் திராவிட போராட்டம்.
- தொடரும். 

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3

பெரியார் கண்ட திராவிட நாடும்
அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 3

திராவிடர்கள் யார் என்பது சென்ற கட்டுரை மூலம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்தியா சுதந்திரம் பெற்றதை இரண்டு தலைவர்கள் எதிர்த்தார்கள். இந்திய சுதந்திரம் வேண்டாம் என முழக்கம் இட்டார்கள். 

1. தந்தை பெரியார்
2. அண்ணல் அம்பேத்கர்

இவர்கள் இருவரும் இந்திய சுந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்தார்கள்.

மாபெரும் தலைவர்கள் இருவரும் இந்த நிலைபாட்டை எடுக்க காரணம் என்ன?

ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலைப்பெற்று, ஆரியனிடம் அடிமையாக நாங்கள் தயாரில்லை என பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள்.

இவர்களின் குரல் பட்டிதொட்டி எல்லாம் பரவியது. இவர்களின் குரலில் நியாயம் இருக்கிறது என ஆங்கிலேயர்களே உணரத் துவங்கினர்.  வடக்கே அம்பேத்கரும், தெற்கே பெரியாரும் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக மபெரும் மக்கள் புரட்சியை ஏற்படுத்தினார்கள். 

அப்போது தான் காந்தி, நேரு, பட்டேல் போன்றவர்கள் இந்த இரு தலைவருக்கும் இடையே முதலில் பிரிவினையை விதைக்க முடிவு செய்தனர். அந்த முயற்சியின் எதிர்வினை தான் முகமது அலி ஜின்னாவால் பாகிஸ்தான் பிரிந்து போனது.(அது தனிக் கதை.) 

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை நீங்களே தலைமை தாங்கி எழுதுங்கள் என்ற ஆசை வார்த்தையை அம்பேத்கரிடம் கூறினார் காந்தி. அந்த வார்த்தையில் ஏமாந்த அம்பேத்கர் பின்னாளில் வருத்தப்பட்டார். தன் வாழ்நாள் தவறு என அதை ஒத்துக்கொண்டார்.

ஆனால் தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையில் உறுதியாக இருந்தார். அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு என்ற தாரக மந்திரத்தை தன் தோழர்களிடம் விதைத்தார். 

அம்பேத்கார் தலைமையில் எழுதப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தை பகிரங்கமாக எதிர்த்தார் தந்தை பெரியார். இது ஆரியர்களின் மாயவலை என குற்றம் சாட்டினார். இதை பின்னாளில் அம்பேத்கரும் ஒப்புக்கொண்டார்.

திராவிட கழகம் இந்திய தேர்தல் அரசியலில் ஈடுபடாது. திராவிடநாடு அமையும் வரை இந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என அறிவித்தார் பெரியார்.

காந்தியின் ஆசை வார்த்தையில் அம்பேத்கர் ஏமாந்தது போல, நேருவின் ஆசை வார்த்தையில் அறிஞர் அண்ணா  ஏமாந்தார்.   

தேர்தல் அரசியலில் திரவிட கழகத்தினர் ஈடுபட வேண்டும். ஆட்சி அதிகாரத்தை கைபற்ற வேண்டும். அதன் மூலம் திராவிட நாட்டை அடைந்துவிட முடியும் என நம்பினார் அறிஞர் அண்ணா.

தேர்தலை சந்தியுங்கள், உங்கள் திராவிட கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்தால், நாங்களும் ஏற்றுகொள்கிறோம் என்றார் நேரு. இந்த ஆசை வார்த்தையில் வீழ்ந்தார் அறிஞர் அண்ணா. அன்று முதல் பெரியாரின் அத்தனை போராட்டங்களும் பாழாக துவங்கியது.

    - தொடரும்.

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 2

தந்தை பெரியார் ஏன் கம்யூனிசத்தில் இருந்து வேறுபட்டார் என சென்ற கட்டுரையில் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஒடுக்கப்பட்டவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஆரியர் அல்லாத அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள் என தந்தை பெரியார் அடையாளம் காட்டினார். அந்த அடையாளத்திற்கு திராவிடம் என பெயரிட்டார்.

ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் என்ற தவறான புரிதல் தான் இன்றைய தலைமுறைக்கு உள்ளது. பி.சி என்பது ஏதோ உயர்சாதி என தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர். பி.சி என்றால் பிற்படுத்தப்பட்டவர் என்று அர்த்தம். அதாவது ஒடுக்கப்பட்டவர் என பொருள்.

ஆக பி.சி. எம்.பி.சி, எஸ்.சி, எஸ்.டி என எல்லோருமே ஒடுக்கப்பட்டவர்கள் தான்.

இப்படி ஒடுக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பெயராக தலித் என கம்யூனிசம் பெயர்சூட்டி உள்ளது. இன்று பி.சி பட்டியலில் உள்ள கவுண்டர், தேவர், வன்னியர், செட்டியார் என எல்லோருமே தலித் தான்.

தலித் என்ற சொல்லின் இன்னொரு வடிவம் தான் திராவிடம். கருத்தியல் அடிப்படையில் இரண்டுமே ஒன்று தான்.

தலித் என்கிறது கம்யூனிசம், திராவிடம் என்கிற பெரியாரியம் அவ்வளவு தான் வேறுபாடு.

தலித் என்றால் அதற்கு எதிர்பதம் இல்லை. ஆனால் திராவிடம் என்றால் அதற்கு ஆரியம் என்ற எதிர்பதம் இருக்கிறது.

ஆரியத்திற்கு எதிரானது தான் திராவிடம். ஆரியத்தால் ஒடுக்கப்பட்ட திராவிடத்தை கொண்டு ஆரியத்தை ஒடுக்குவது தான் பெரியாரியம்.

திராவிடர் என்றால் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் மட்டும் அல்ல. திராவிடர் என்றால் உலகம் முழுவதும் ஆரியத்தால் ஒடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மக்களின் அடையாளம்.

இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நாற்திசையிலும் திராவிட மக்கள் பரவி கிடக்கிறார்கள். இந்தியாவுக்கு வெளியே பாகிசுத்தான், இலங்கை, பர்மா, தாய்லாந்து, சீனா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா என உலகெங்கும் திராவிட மக்கள் உள்ளனர். ஆப்பிரிக்க அமெரிக்க கண்டங்களில் பெரும் பகுதியினர் திராவிட மக்களே.

உலகம் முழுவதும் 3000த்திற்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் உள்ளன. உலகில் 70% பேர் திராவிட மக்களே. 500 கோடிக்கும் மேற்பட்ட திராவிடர்களை மலையாளி, தெலுங்கர், கன்னடர் என சிறிய வட்டத்திற்குள் பூட்டிய முட்டாள்கள் யார்?

அங்கே தான் ஆரியரின் சதி அடக்கி இருக்கிறது. அதை அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.
 - தொடரும்...

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும்

தந்தை பெரியார் திராவிட நாடு கொள்கையை கைவிட்டார் என்ற தவறான பரப்புரைக்கு விளக்கம் அளிக்கவே இந்த குறுக்கட்டுரையை பதிவு செய்கிறேன்.

நவீன உலக வரலாற்றில் இரண்டு கொள்கைகள் உலகை புரட்டி போட்டன.

1. காரல்மார்க்சின் கம்யூனிச கொள்கை 
2. தந்தை பெரியாரின் திராவிடக் கொள்கை

இதில் கம்யூனிச கொள்கைகளை உலகின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்க்க தொடர்ந்து கம்யூனிச தலைவர்கள் முயன்று வருகிறார்கள். ஆனால் தந்தை பெரியாரின் திராவிடக் கொள்கைகளை தமிழகத்துக்குள்ளேயே முடக்க திராவிட தலைவர்கள் முயல்கிறார்கள்.

புரிந்து கொள்ள சுருக்கமாக சொல்கிறேன்

பொருளாதார சமத்துவம் கம்யூனிச கொள்கை
சமூக சமத்துவம் திராவிடக் கொள்கை

சமூக சமத்துவத்தையும் உள்ளடக்கிய பொருளாதார சமத்துவம் கம்யூனிசம் - என கம்யூனிச தலைவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

அது சரியே. 

ஆனால் இதில் எங்கோ ஒரு பிழை இருப்பதை தந்தை பெரியார் கண்டறிந்தார். அந்த பிழையை சரி செய்யத் தான் திராவிடக் கொள்கைகளை முன்மொழிந்தார்.

கம்யூனிசத்துக்கும் & திராவிடத்துக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஆனால் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கிறது. 

சுரண்டியவனிடம் இருந்து சுரண்ட பட்டவனுக்கு பொருளாதாரத்தை பிடிங்கி தர வேண்டும் என்கிறது கம்யூனிசம்.

அதாவது பணக்காரன் ஏழையின் நிலைக்கு இறங்க வேண்டும் என்கிறது கம்யூனிசம்.

அதற்கு நேர்எதிர்மாறாக அதே நேரத்தில் அதே இலக்கை அடைய சொல்கிறது திராவிடம்.

ஏழை பணக்காரன் நிலைக்கு உயர வேண்டும் என்கிறது திராவிடம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை அளித்து, உயர்நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது திராவிட கொள்கை. 

எளிமையாக புரியும்படி சொன்னால்

பசித்தவனுக்கு உடனடியாக மீனை கொடு என்கிறது கம்யூனிசம். பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன்பிடிக்கும் ‘உரிமையைக்’ கொடு என்கிறது திராவிடம்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிப்பதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் சமநிலைக்கு வரமுடியும் என்றார் பெரியார்.

இதையும் கம்யூனிசம் வலியுறுத்துகிறது என்கின்றனர் கம்யூனிச தோழர்கள்.

உண்மை தான். ஆனால் பெரியார் சொல்லும் நுட்பம் இன்னும் ஆழமானது.

அந்த ஆழமான கேள்வி இது தான்

யார் ஒடுக்கப்பட்டவர்கள்?

இங்கே தான் கம்யூனிசமும் பெரியாரியமும்(திராவிடம்) வேறுபடுகிறது.

ஆரியார் அல்லாத அனைவரும் ஒடுக்கப்பட்டவர்கள் என அடையாளம் காட்டுகிறார் பெரியார். அந்த அடையாளத்திற்கு பெயர் தான் திராவிடம்.

ஆரியம் & திராவிடம் என்ற பிரிவினை பேச்சே தேவையற்றது என்கிறது கம்யூனிசம்.

ஆரியன் அனுபவித்த சுகபோகத்தை திராவிடனும் அனுபவிக்க வேண்டும், அதுவரை திராவிடம் தேவை என்கிறது பெரியாரியம்.

எல்லோரும் எளிமையாக வாழலாம் என்கிறது கம்யூனிசம்
எல்லோரும் ஆடம்பரமாக வாழலாம் என்கிறது பெரியாரியம்.

ஆரியன் ஆடம்பரமாக வாழ்ந்து விட்டான். அவன் எளிமையாக வாழட்டும். திராவிடன் எளிமையாக வாழ்ந்துவிட்டான். அவன் ஆடம்பரமாக வாழவே வேண்டாமா? இது தான் பெரியாரின் கேள்வி!

நீ நேற்றுவரை அனுபவித்த சுகத்தை நானும் அனுபவித்துக்கொள்கிறேன். பின்னர் இருவரும் ஒரு சமநிலைக்கு வருவோம் என்கிறார் பெரியார்.
 - தொடரும்.

Popular Posts