Dec 12, 2010

ரசினிகாந்தின் அரசியல் வருகை ரகசியம்

ரசினியின் மீது படியப்பட்டுள்ள ஒரு கறை அரசியலுக்கு வருவேன் வரமாட்டேன் என்று மக்களை குழப்பியது.

பாபா திரைபடத்தின் இறுதி காட்சியில் ஆன்மீகத்துக்கு செல்ல முயன்று பின்னர் அரசியலுக்கு திரும்பும் திருப்புமுனை. குசேலனில் அரசியலுக்கு வருவேன் என்று நான் சொல்லவே இல்லை. திரைப்படத்தில் இயக்குனர்கள் எழுதும் வசனத்தை பேசுகிறேன் அவ்வளவு தான் என்ற மலுப்பல். சிவாசியில் மீண்டும் அரசியல்வாதிகளை சுளுக்கெடுக்கும் காட்சிகள். எந்திரனில் எதுவுமே இல்லாத புதுமுகம்.

உண்மையில் ரசினிக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அவரது பல பொது பேச்சுகளிலேயே தெளிவாக தெரிகிறது.

எம்.சி.ஆருக்கு பிறகு மிகப்பெரிய அரசியல் தலைவராக ரசினியை மக்கள் எதிர்பார்த்தார்கள் என்பது நிதர்சன உண்மை.

எம்.சி.ஆருக்கு முன்னர் இருந்த தமிழக அரசியல் வேறு. எம்.சி.ஆருக்கு பின்னர் இருக்கும் தமிழக அரசியல் வேறு.

எம்.சி.ஆருக்கு பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட இரு பெரும் கட்சிகளின் சரிசம போட்டியில் உதிரி கட்சிகள் எல்லாம் உதிர்ந்துபோயின.

எம்.சி.ஆருக்கு பின்னர் கருணாநிதியை எதிர்க்கும் போட்டியில் செயலலிதா செயித்துக்காட்டினார். அதற்கு பின்னர் கருணாநிதியும் செயலலிதாவும் இருபெரும் எதிரெதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.

தமிழகத்தில் ஒன்று செயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். அல்லது கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்யவேண்டும். அது அல்லாமல் இந்த இருவரையுமே ஒருசேர எதிர்த்து அரசியல் செய்யவது கடினம்


வைகோ, மூப்பனார், விசயகாந்த் இவர்கள் தோற்றதும் இதனால் தான்.


அதிமுக, திமுக என்பதை தான்டி செயலலிதா கருணாநிதி இவர்களை ஒருசேர எதிர்க்கும் மூன்றாம் சக்திக்கு கடைசிவரைக்கும் வாய்ப்பே இல்லை.

செயலலிதாவுக்கு பணம், எம்.சி.ஆர்(கருணாநிதி எதிர்ப்பு அலை) இதை வைத்து மட்டும் தான் அரசியல் செய்ய தெரியும். ஆனால் கருணாநிதிக்கு சாதி, மொழி, இனம், மதம், பணம், சட்டம், நட்பு, அழுகை, கண்ணீர், வயது, எழுத்து என எதைவைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்ய தெரியும்.

13 ஆண்டுகள் எம்.சி.ஆரை எதிர்த்து அரசியல் செய்ததில் கருணாநிதிக்கு கிடைத்த மனபலம் சாதாரணமானது அல்ல. அது மிகப்பெரிய மனோசக்தி. அதனால் தான் இன்றளவும் கருணாநிதியால் இன்றும் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது. 

சரி ரசினி விடயத்துக்கு வருவோம்.

ரசினியின் குழப்பம் மவுனத்திற்கும் அது தான் காரணம்.

தமிழகத்தின் அந்த மூத்த அரசியல் தலைவரின் ஓய்வு தான் ரசனியின் அரசியல் ஆரம்பம்.

கருணாநிதிக்கு பின்னர் செயலலிதாவை எதிர்க்க சரியான நபர் ரசினியாக தான் இருக்க முடியும்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டால் வைகோவை போல விசயகாந்தும் நீர்த்துப்போவது உண்மை. கூட்டணிக்கு பின்னர் வெளியே வந்து செயலலிதாவை எதிர்த்தால் அதை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதே நேரத்தில் இந்த முறை ஏதாவது ஒரு கூட்டணியை அமைக்காவிட்டால் தேமுதிக கூடம் காலியாகிவிடும் என்பது விசயகாந்தின் அச்சம்.

கருணாநிதிக்கு பின்னர் திமுகவை சிதறாமல் கட்டுக்குள் வைக்கும் தலைவர்கள் இல்லை. 45 வருடங்கள் ஒரு தலைவரின் கட்டுக்குள் இருக்கும் கட்சி அந்த தலைவருக்கு பின்னர் சிதறிப்போகும் என்பது நிதர்சனம். அதை விட குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சி உடையமால் இருந்தால் அது உலகமாக அதிசயமே. அப்படி ஒரு அதிசயம் நடக்காது என்பது சதாரண குடிமகனுக்கு கூட தெரியும்.

கருணாநிதிக்கு பின்னர் தமிழக அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சிதறல்களை சிந்தாமல் சேர்த்துக்கொள்ளும் சாணக்கியம் இருந்தால் ரசினி அரசியலில் செயிப்பது நிச்சயம்.


அந்த தருணத்திற்காக தான் ரசினி காத்திருக்கிறார் என யூகிப்பது சரியானதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

Popular Posts