Dec 26, 2010

கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா?

இப்போதைய அவசரத்தேவை கேரளா தமிழகத்தின் நல்லுரவு. இது கேரளாவுக்கு தேவையோ இல்லையோ தமிழகத்துக்கும், தமிழ்ஈழத்துக்கு மிகமிக தேவையான ஒன்று.

இன்று கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள ஒரே பகை முல்லைபெரியாறு தான்.

உண்மையில் முல்லைபெரியாறு விடயத்தில் தமிழகம் தான் கேரளாவுக்கு துரோகம் செய்கிறது. சுண்ணாம்பு கற்கலால் கட்டப்பட்ட முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றதாக உள்ளது என்பது உலகறிந்த விடயம். இதுவரை ஆய்வு செய்த 23 நிபுணர் குழுவும் முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்பதை சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்துக்கு சாதகமாக சொன்ன உச்சநீதிமன்றம் கூட அணை பலப்படுத்தப்பட்டு உள்ளது, என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர பாதுகாப்புடன் இருக்கிறது என்பதை சொல்லவில்லை. இந்த விடயத்தில் தமிழகம் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். வீண்பிடிவாதம் பிடித்துக்கொண்டு இருப்பது நமக்கு தான் இழப்பை தரும். நாம் ஏன் வீம்பு (ஈகோவை) விட்டுவிட்டு மாற்றை யோசிக்கக்கூடாது?

நமக்கு தேவை தண்ணீர். அதை தர கேரள முழுமனதுடன் சம்மதிக்கிறது. அதை எங்கு சேமிப்பது என்பதில் தான் பிரச்சனை. முல்லைபெரியாறு அணையில் கூடுதலாக தண்ணீர் சேமிப்பது கேரளாவுக்கு ஆபத்தை தரும். என்றால் சேமிப்பிடத்தை ஏன் மாற்றக்கூடாது?

1975ல் சீனாவில் 2 அணைகள் உடைந்து ஏரத்தாள 2 லட்சம் மக்கள் இறந்தார்கள். இது நடந்தது நம் கண்முன் தான். 35 ஆண்டுகள் தான் கடந்துள்ளது. நம்மைபோல தான் அணை பலமாக உள்ளது பலமாக உள்ளது என பாட்டுப்பாடிக்கொண்டு இருந்தார்கள். இறுதியில் அந்த பாட்டு 2 லட்சம் மக்களுக்கு மரண ஓலமானது. அது கூட உள்நாட்டு பிரச்சனையாக முடிந்துவிட்டது.

ஆனால் முல்லை பெரியாறு விடயத்தில் கொஞ்சம் யோசித்து பாருங்கள். அணைக்கு எதாவது சம்பவித்தால் அப்புறம் கேரளா தமிழகம் நல்லுறவு என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க வேண்டியதில்லை. ஏற்படும் இழப்பிற்கு நம்மால் என்ன பதில் சொல்ல முடியும்.

இன்று தமிழகத்தின் வாதம் இதுதான் கல்லணை. கல்லணை. கல்லணை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கல்லணை உறுதியாக இருக்கும்போது 112 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பெரியாறு அணை உறுதியாக இருக்காதா என்பது தான் தமிழகத்தின் வாதம்.

இது தவறாதும் மடத்தனமான வாதமுமாகும்.

கல்லணையும் பெரியாறு அணையும் ஒன்றா? நீங்களே ஒப்பிட்டுப்பாருங்கள்


  • கல்லணை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • பெரியாறு அணை 2890 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
  • கல்லணையின் உயரம் 20 அடிகள் 
  • பெரியாறு அணையின் உயரம் 177 அடிகள். 
  • கல்லணையில் இருந்து அவசர காலத்தில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீரை வெளியேற்ற முடியும். 
  • பெரியாறு அணையில் இருந்து 2000 கன அடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும் அதுவும் அவரசர கதியில் வெளியேற்ற முடியாது. 
  • கல்லணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அதிகபட்சம் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும். 
  • பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றும் நீர் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும். 
  • கல்லணையின் கீழ்பகுதி 20 டிகிரி சரிவையுமே 20 அடி ஆழமும் கொண்டுள்ளது. 
  • பெரியாறு அணையின் கீழ்பகுதி 90 டிகிரி சரிவும் 300 அடி ஆழ பள்ளத்தாக்கையும் கொண்டுள்ளது. 
  • கல்லணை பகுதியில் நிலச்சரிவு, நிலநடுக்க அபாயம் இல்லை. 
  • பெரியாற்றில் இந்த இரண்டு அபாயங்களும் உள்ளது. பலமுறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 2006 ல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆக பதிவாகியுள்ளது.
  • கல்லணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. மேட்டூர், அமராவதி, பவானிசாகர் இந்த மூன்று அணைகளை வைத்தே கல்லணையின் அவசர காலத்தை கணித்து விட முடியும்.
  • ஆனால் பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அணை கட்டுமானத்தின் போதே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கட்டுமானம் கைவிடப்பட்டிருக்கிறது. பலத்த உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் பென்னி குயிக் தன் சொத்துக்களை விற்று சொந்த செலவில் கட்டி முடித்திருக்கிறார். கட்டும்போதே 185 இடங்களில் தடுப்பணை கட்டி, பிரதான பாதையை பேபி டேம் பக்கம் திருப்பியிருக்கிறார்.  பெரியாற்றில் எதை வைத்து அவசர காலத்தை கணிப்பது. 
  • பெரியாறு அணையானது 12க்கும் மேற்பட்ட காட்டாறுகளை இணைத்து மலை உச்சியில் கட்டப்பட்ட அணை.
  • மலைசிகரத்தில் உள்ள காட்டாற்றின் அழுத்தம், வேகத்தை சமவெளி பகுதியில் ஓடும் நதியுடன் ஒப்பிடலாமா?
  • கல்லணையில் தண்ணீரை தடுத்து நிறுத்தும் மதகுகள் உள்ளன. இந்த மதகுகள் வழியாகவே நான்கு திசைகளில் தண்ணீரை பிரித்து விடக்கூடிய வசதிகள் இருக்கிறது.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீரை தடுத்து வைப்பது ஒரு பகுதி, வெள்ளம் அதிகமாகும் போது திறந்து விட வேறு ஒரு பகுதி, தண்ணீரை தமிழகத்திற்கு திருப்ப ஒரு பகுதி என மூன்றாக, மூன்றும் மூன்று திசையில் இருக்கிறது. 
  • பெரியாறு அணையில் அழுத்தம் அதிகமான பகுதியில் தண்ணீர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மதகுகள் இல்லை. அழுத்தம் கூடும்போது தண்ணீரை திறந்துவிட அணையின் இடது புறத்தில் பேபி டேம் உள்ளது. இது ஆற்றின் பிரதான பாதையைவிட மேடான இடத்தில் உள்ளது. அடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்க வடக்குப்பக்கம் சுரங்கப்பாதை உள்ளது. அணையில் 104 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே இங்கிருந்து தண்ணீர் கீழே வரும்.
  • கல்லணை என்பது தண்ணீரை பிரித்துவிடும் அணைதானே தவிர தேக்கி நிறுத்தும் அணை அல்ல. மேலும் இயற்கையான போக்கில் கட்டப்பட்ட அணை.
  • ஆனால் பெரியாறு அணையில் தண்ணீர் தடுத்து தேக்கப்பட்டு அணையின் மற்றொரு மூலையில் சுரங்கம் வழியாக கீழே கொடுவரப்படுகிறது. இது இயற்கைக்கு எதிராக கட்டப்பட்ட அணை. 
  • இரு அணைகளின் அழுத்தமும், நீர் அரிப்பும் மிகஅதிக வேறுபாடு உடையது.
  • கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணை என்பது தற்போது மதகுகளுக்கு கீழ் உள்ள அடிப்பகுதி. அதாவது ஒரு செக் டேம் போன்றது. அதன்மீது உள்ள பாலங்களும், மதகுகளும் சமீபத்தில் கட்டப்பட்டது. 
  • கல்லணை தடுப்பு சுவற்றின் அகலம் அடிப்பகுதியில் இருந்து மேல் பகுதிவரை ஒரேமாதிரியாக உள்ளது. 
  • ஆனால் பெரியாறு அணையின் தடுப்பு சுவற்றின் அடியில் அகலமான சுவரும்,மேலே வரவர கூர்மையான பகுதியாக உள்ளது. இந்த கட்டமைப்பு தான் ஆபத்தாக உள்ளதாக கேரளா கூறுகிறது.
  • கல்லணை ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
  • பெரியாறு அணை இரு அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
  • கல்லணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இல்லை.
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது. 
  • கல்லணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை. 
  • பெரியாறு அணைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிது.
  • காவிரியாற்றில் கர்நாடகாவுக்கும், நமக்கும் தேவை ஒரேமாதிரியானது. குடிநீர், விவசாயம், மின்சாரம்.
  • ஆனால் பெரியாற்று நீர் கேரளாவுக்கு ஆபத்தானது, தமிழ்நாட்டுக்கு தேவையானது.
  • தண்ணீரை பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
  • தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.
  • கேரளாவின் குடிநீர், விவசாயம், மின்சாரத் தேவைகளுக்கு பெரியாறு பயன்படுவதில்லை, தேவையும் இல்லை.
  • பெரியாற்றின் வெள்ளப்பெருக்கால் உயிர்சேதமும், கொச்சி நகர அழிவும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
  • ஆனால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் குடிநீர், விவசாயம்,மின்சார தேவைகளுக்கு பெரியாறு இன்றியமையாதது.
  • நமக்கு இது உயிர் ஆதார பிரச்சனை.
  • கேரளாவுக்கு இது உயிர் போகும் பிரச்சனை.
  • கர்நாடகாவைப் போல தண்ணீர் தரமாட்டோம் என்று கேரளா ஒரு போதும் சொல்லவில்லை.
  • காவிரி பிரச்சனையில் தீர்வை முன்வைத்து யாரும் போராடுவதில்லை.
  • ஆனால் பெரியாற்று பிரச்சனையில் போராட்டக்காரர்கள் ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள்.

அணையின் பகுதியில், தமிழகத்தின் பக்கம், தற்போது உள்ளதைவிட தாழ்வாக சில கால்வாய்களை வெட்டவேண்டும். அதனால் அணை இல்லாமலும் தண்ணீரை கீழே கொண்டுசெல்ல முடியும். இல்லாவிட்டால் ஒரே அணையாக வைத்து தண்ணீர் எடுப்பதை தவிர்த்து, கூஃபர் எனப்படும் சிற்றணைகளாக பிரித்து கூட தண்ணீரை எடுத்துச்செல்ல முடியும். தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தார்மீக கடமை எங்களுக்கு இருக்கிறது. அதே சமயம் தண்ணீரை பாதுகாப்பாக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு இருக்கிறது. மேற்கூறிய தீர்வுகளுக்கு தற்போதைய ஒப்பந்தத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் கூட இல்லை என்ற தீர்வை அவர்கள் முன்வைக்கிறார்கள். 

இதைப்பற்றி நாம் ஏன் யோசிக்க கூடாது.
இந்த தீர்வால் தமிழகத்திற்கு செலவு குறைவும், பிரச்சனைக்கு தீர்வும், அதிக தண்ணீரும் கிடைக்க வாய்ப்புள்ளது.


இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப
காய் கவர்ந் தற்று 
அல்லவா..

முல்லைப்பெரியாறு பிரச்சனையோடு, காவிரியையும், பாலாற்றையும், ஈழத்தையும் சேர்த்து முடிச்சு போட்டு, எங்கு பார்த்தாலும் தமிழர்களுக்கு தொல்லை என்று ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. நமது கண்ணோட்டத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கடந்த பதிவிற்கான பதில்களுக்கு முன் இந்த பதிவை எழுதுகிறேன்.

காய்ச்சலுக்கு காய்ச்சல் மாத்திரைதான் சாப்பிட வேண்டுமே தவிர வயிற்றுவலி மாத்திரையை தின்னக்கூடாது.

இது அரசியல்வாதிகளுக்கு இடையேயான பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையில் போராடும் அட்டைக்கத்தி சண்டையோ அல்ல. தமிழனுக்கும் மலையாளிக்கும் உள்ள இனப்போராட்டமோ ஈகோ பிரச்சனையோ அல்ல.

இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான போராட்டம். இயற்கையோடு அளவோடுதான் எதிர்த்து நிற்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆற்றலோடு வரும் இயற்கையிடம் வளைந்து கொடுத்துத்தான் போகவேண்டும். இல்லாவிட்டால் அழிவு மனிதனுக்குத்தான்.

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்  

இந்த பதிவை வாசிப்பவர்கள் ஒரு முறை கூகிள் இணையத்தில் உள்ள மேப் பகுதி வழியாக அணையை பார்வையிடுங்கள். நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். 

3 comments:

  1. HELLO

    R U GO AND SURVIVE THE DAM IS WEAK.THE ENGINEERS & ARCHITECT CHECK THE DAM WITH MECHANICALLY PROVE STRONG.SO DON'T GIVE THE WRONG INFORMATION TO THE PEOPLE.CAN U PROVE THE DAM IS WEAK.

    S.VENKAT

    MADURAI

    ReplyDelete
  2. திரு வெங்கெட்

    அணை பலமாக உள்ளது இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அணை பாதுகாப்பு அற்றதாக உள்ளது. இயற்கையாகவும் செயற்கையாகவும் அணை மிக மிக பாதுகாப்பற்றதாக உள்ளது. இது தான் இங்கு பிரச்சனையே.

    தண்ணீரை முழுமையாக எடுத்துக்கொள்ள தமிழகம் தயங்குவது ஏன்? அதன் பின்னால் உள்ள அரசியல் விளையாட்டு என்ன? அதை ஏன் யோசிக்கவே மறுக்கிறீர்கள்?

    ReplyDelete
  3. The truth behind this issue is not a dam week or strong. The Kerala govt trying to take a control over MullaiPeriyar dam and which is not possible since 999 years aggreement.

    The only way is, making the MullaiPeriyar dam non-operated. Please check the wikipedia on the topic of MullaPeriyar dam. They are saying TN pays many crores for getting water from Andhra but few thousands for Kerala.

    Acctually TN should explain to our people on Kerala's real motivation behind this.

    -SK

    ReplyDelete

Popular Posts