Jan 3, 2011

முல்லை பெரியாறு: அடிமைதனம் தான் தமிழகத்தின் நோக்கமா?

முல்லை பெரியாறு அணை பகுதியை ஒட்டி வரும் முல்லையாற்றில் இருந்து தமிழக எல்லை ஆரம்பிக்கிறது. அணையின் பாதுகாப்பு குறித்து கேரளா அச்சப்படும்போது தமிழக எல்லைக்குள் ஏன் புதிய அணையைகட்டிக்கொள்ள கூடாது? 

வருமானம் குறைந்த ஒரு சிறு மாநிலமே அணை கட்ட துணியும் போது, 7 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாயத்தின் முக்கிய பிரச்சனையாக உள்ளது முல்லை பெரியாறு. அப்படி இருக்க நாம் ஏன் புதிய அணை கட்டக்கூடாது? நமக்கு தேவை தண்ணீர். கேரளாவுடன் அரசியல் சண்டை அல்ல. 

பலமுறை தமிழக எல்லைக்குள் அணைகட்டும் திட்டம் பொறியாளர்களால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில் அதை முன்னெடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்?

அப்படி என்ன தமிழகத்தில் நிதி பற்றாக்குறை?

கேரளா ஒரு சிறு மாநிலம். அங்கு விவசாயம் இல்லை, குடிநீர் தட்டுப்பாடு இல்லை, அவ்வளவு மக்கள் தொகையும் இல்லை, ஆனாலும் இன்றும் கூட 8 புதிய அணைகளை கட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் பெரிய விவசாய மாநிலம் தமிழகம். பாராம்பரியமாக விவசாயத்தை தொழிலாக கொண்ட இங்கு மேம்பாலங்களை தான் கட்டிக்கொண்டு இருக்கிறோம். ஒரு சிற்றணை கட்ட கூட இவர்களுக்கு புத்தி வரவில்லை என்றால் என்னவென்று சொல்வது?

விவசாய பூமியான தமிழகத்தில் இன்று அணைகளோ, ஏரிகளோ அமைக்கப்படுவதில்லை. மேம்பாலங்களும் ரீயல் எசுடேட் வியாபாரமும் தான் கோலோச்சுகிறது.

நமக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதும், அங்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் இடம், தண்ணீர், தங்குதடையற்ற மின்சாரம் கொடுப்பது தான் முக்கியமாக படுகிறது. கேட்டால் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். 

தமிழக அரசின் நோக்கம் என்ன? ஒட்டுமொத்த விவசாய நிலங்களை காயப்போட்டு விவசாயிகளை கூலிகளாக்குவது, தரிசான விவசாய பூமியை அடிமாட்டு விலைக்கும் கீழ் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று ஊழல் செய்வது. வே¬வாய்ப்பற்ற ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்குவது. இது தானே நடக்கிறது. பிழைப்பை கெடுத்து வேலைவாய்ப்பு என்ற பெயரில் தமிழர்களை கொத்தடிமையாக்குவது தான் அரசின் நோக்கமா?


கேரள முல்லை பெரியாறு அணையில் இருந்து ஒரு துளி தண்ணீர் கூட வேண்டாம் என்கிறது. அணையின் பாதுகாப்பு மட்டும் தான் அவர்களது பிரச்சனை. அதற்காவே கடன்வாங்கியேனும் புதிய அணையை கட்டிதீருவோம் என்று முழு மூச்சில் வேலை செய்கிறார்கள். உச்சநீதிமன்றத்தையே எதிர்த்து அவர்கள் உத்வேகமாக இருக்கிறார்கள். 

ஆனால் தண்ணீர் உயிர்பிரச்சனையாக உள்ள நாம் வெற்று அறிக்கைகளை மட்டுமே விட்டு, வாய்சவடால் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கேரளா அணை கட்டியே தீருவேன் என்றால் தமிழகமும் அணைகட்டும் வாதத்தை முன்வைக்க வேண்டும். இதனால் ஒரு சமரசபோக்கு வர வாய்ப்புள்ளது.

தமிழக எல்லைக்குள் புதிய அணை கட்டுவதால் கேரளாவுக்கு பணம் தரவேண்டியது இல்லை. தமிழகம் எவ்வளவு தண்ணீரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். மின்சாரமும் தயாரித்துக்கொள்ளலாம். அணையின் ஒட்டுமொத்த அதிகாரம் பாதுகாப்பும் தமிழகத்தின் கையில் இருக்கும். கேரளாவுடன் சண்டையும் வேண்டாம். வழக்கு என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகள் செய்த செலவில் ஒரு சிற்றணையே கட்டியிருக்கலாம்.

தமிழக மக்களே மேம்பாலங்கள் கட்டியது போதும். அணைகளை கட்ட யோசிக்கவாவது செய்யுகள். 

No comments:

Post a Comment

Popular Posts