Dec 27, 2011

கேரள போராட்டக்குழு தலைவர் வெளியேற்றப்பட்டார்.

முல்லைப்பெரியாற்றில் புதிய அணை தேவை இல்லை, இருமாநில மக்களுக்கும் பயன்தரும் எளிமையான தீர்வுகள் இருக்கிறது. அதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

கடந்த சனிக்கிழமை (24.12.2011) கொச்சியில் நடந்த கேரள எழுத்தாளர்கள் மாநாட்டில் இந்த தீர்வை விளக்கினோம். பலத்த கர ஒலியுடன் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். 

பிரபல எழுத்தாளர்கள் திரு. சிவிசந்திரன், திரு. சி.ஆர் நீலகண்டன், முனைவர் லதா, உட்பட பலரும் திட்டத்தை வரவேற்றுப் பேசினார்கள். புதிய அணை வேண்டாம் என்பதை முல்லைப்பெரியாறு பேராட்டக்குழு தனது 6ம் ஆண்டு துவக்க நாளில் அறிவிக்க வேண்டும் என்று திர்மானம் நிறைவேறியது.

இடுக்கி சப்பாத்துவில் போராட்டத்தின் 6ம் ஆண்டு துவக்க நாளில் எங்களை பேச அழைத்தார்கள்.

25.12.2011 கிறித்துமசு தினத்தன்று 5ம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. 

// ஒரு போராட்டம் தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும். பிரச்சனையே பிரச்சனைக்கு தீர்வாகாது. புதிய அணை கட்ட வேண்டும் என்ற உங்கள் கோரிக்கைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒரு கதவு அடைக்கப்பட்டதும், 9 கதவுகள் திறந்துள்ளன. புதிய அணை தேவை இல்லை. அதே நேரத்தில் தற்போதைய அணையின் பயன்பாட்டை குறைக்க தமிழகம் முன்வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் போராட்ட வெற்றியை உறுதி செய்யுங்கள். ஒரு போராட்டத்தின் வீரியத்துக்கு அதன் முழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய டேம்(அணை) புதிய கரார்(ஒப்பந்தம்) என்ற உங்கள் முழக்கத்தை மாற்றுங்கள். பிரச்சனை ஒரு வாரத்தில் தீரும் என்பதை வலியுறுத்தி பேசினேன்.//

 தொடர்ந்து இதை பலரும் வலிறுத்தினார்கள். ஆனால் அங்கிருந்த சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  புதிய அணை ஒன்று தான் தீர்வு, 999 ஒப்பந்தத்தை மாற்றியே தீரவேண்டும் என முழக்கங்கள் எழுப்ப ஆரம்பித்தார்கள். இதனால் பதட்டம் ஏற்பட துவங்கியது. சிலர் செருப்புகளை எறிந்தார்கள். 

உடனடியாக போராட்ட குழு தலைவர் சி.பி ரோய், எழுத்தாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் எங்களை மீட்டு பத்திரமாக கோவைக்கு அனுப்பி வைத்தார்கள். 

தொடர்ந்து அப்போதே இந்தியாவிசன் செய்தி சேனலில் இந்த நிகழ்வு ஒளிபரப்பானது. புதிய அணை வேண்டாம் என்று போராட்டக்குழு தலைவர் உறுதிபட தெரிவித்தார். இதை கேட்டதும் சிலர் ரோய் அவர்களை தாக்கினார்கள். 
ஆனாலும் திரு. ரோய் தனது முடிவில் மாற்றம் இல்லை. இலக்கு இல்லாத போராட்டத்திற்கு தலைமை தாங்க நான் தயாரில்லை என்பதை கூறினார். இதை அங்குள்ள மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஒருசிலர் மட்டும் கலவரத்தை தூண்டிக்கொண்டிருந்தனர். வேறு வழியில்லாமல் அங்குள்ள மக்களின் நியாயமான குரலின் சத்தம் அடங்கிப்போனது.

திரு.ரோய் அவர்கள் தமிழகத்துடன் சேர்ந்து கேரளாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு தனிமனிதனாக போராட்டத்தை துவங்கிய திரு.ரோய் நேற்று தனிமனிதனாகவே வெளியேற்றப்பட்டார். 

போராட்டக்குழுவில் இருந்து துரோகி பட்டம் கட்டி வெளியேற்றப்பட்டது குறித்து ரோயிடம் மீடியாக்கள் கேட்டன.

அவரின் பதில் உண்மையில் கண்கலங்க வைத்தது.

// 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த போராட்டத்தை நான் தான் துவங்கி வைத்தேன். இன்று வரை தலைவர் பொறுப்பில் இருந்து போராட்டத்தை அமைதி வழியில் நேர்வழியில் நடத்தி வந்துள்ளேன். மக்களின் உயிர்பாதுகாப்பு ஒன்று தான் முக்கியம். அதை தமிழகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும்போது நாமும் அதை ஏற்க வேண்டும். 

உயிர்பாதுகாப்பு என்ற போர்வையில் அரசியல் விளையாட்டுகளுக்கும் வியாபாரத்துக்கும் இடம் கொடுக்க கூடாது. புதிய அணை தேவை இல்லை என்பதை நான் இன்று உணர்ந்துகொண்டேன். இந்த உணர்வு இடுக்கியில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் படிப்படியாக வரும். அப்போது ஒட்டுமொத்த கேரள மக்களும் புதிய அணை வேண்டாம் என்று முழங்குவார்கள். அன்று அதை அரசியல்வாதிகள் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.//
இவ்வாறு திரு ரோய் கூறினார்.

திரு ரோய், மற்றும் திரு கம்பம் அப்பாசு ஆகியோர் பேசிய சிடியை முழுமையாக ஒளிபரப்பி சுமூகதீர்வை தொடர்ந்து வலியுறுத்திவரும் இந்தியாவிசன் செய்தி சேனலுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சுமூக தீர்வு வரும் வரை எங்கள் முயற்சி தொடரும்.

No comments:

Post a Comment

Popular Posts