Jan 3, 2012

முல்லைப்பெரியாறு தமிழகம் தோற்றுவிடுமா?


முல்லைப்பெரியாறு பிரச்சனையில் நேற்றைய தினம் தமிழகத்துக்கு ஒரு எச்சரிக்கை தினமாக அமைந்துள்ளது. கேரளாவுக்கு ஒரு படி முன்னேற்றத்தின் தெம்பு கிடைத்துள்ளது.

புதிய அணை கட்டி அதை இருமாநில அரசுகளும் பராமரித்துக்கொள்ளுமா? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி தான் இப்போது தமிழகத்தை முள்முனையில் நிறுத்தியுள்ளது.

இந்த தருணத்தில் தமிழகம் தனது உரிமையை எந்தவிதத்திலும் இழந்துவிடக்கூடாது. புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என்ற சம்மதம் தெரிவித்தாலே தமிழகத்தின் முழு உரிமையும் ஒட்டுமொத்தமாக பரிக்கப்பட்டுவிடும்.

இப்போது இன்னும் 884 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு தமிழகத்தின் முழு பராமரிப்பில் இருக்கிறது. தண்ணீர் திறந்துவிடும் சாவியும் தமிழகத்திடம் தான் இருக்கிறது. புதிய அணையில் இது தமிழகத்துக்கு சாத்தியப்படாது. மேலும் ஒரு காவிரிப்பிரச்சனைக்கு தமிழகம் தள்ளப்படும்.

கம்பம் அப்பாசு
காவிரிப்பிரச்சனையில் தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அதிகாரம் கர்நாடகா கையில் உள்ளது, அணையும் கர்நாடகா கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் தமிழகத்தால் ஏமாந்து நிற்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் முல்லைப்பெரியாற்றில் அணை கட்டுப்பாடு தற்போது நமது கையில் உள்ளது. இதை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது.

சுண்ணாம்புகல்லால் கட்டப்பட்ட அணை பலவீனமாக உள்ளது. இதனால் அணைக்கு கீழ்பகுதியில் உள்ள மக்கள் பயப்பீதியில் உள்ளனர் என்ற கேரளாவின் வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு கேரளா கூறுவது போல அணையை டீகமிசன் செய்யவேண்டும் என்பதை மனிதாபிமான அடிப்படையில் தமிழகம் செவிசாய்க்கலாம். ஆனால் அதற்காக புதிய அணை கட்டி புதிய ஒப்பந்தம் போடவேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ஏற்றுக்கொண்டால் மிகப்பெரிய இழப்பு தமிழகத்துக்கு தான்.

ஒரு அணையை டீகமிசன் செய்வது என்றால் கேரளாவின் கனவு போல அணையை உடைப்பது அல்ல. அணையின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துக்கொள்வது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை தமிழகம் 5 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. 

வைகை அருகே ராயப்பட்டி என்ற இடத்தில் 4 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட புதிய அணையை தமிழகம் தயார்படுத்தி உள்ளது.  மலை உச்சியில் முல்லைப்பெரியாறு அணையில் தேக்க வேண்டிய கூடுதல் தண்ணீரை நேரடியாக கீழே கொண்டுவந்து ராயப்பட்டியில் தமிழகம் தேக்கிக்கொள்ளும். இதனால் முல்லைப்பெரியாறு அணையில் 110 அடிக்கும் குறைவாக தண்ணீரை நிலைநிறுத்தலாம். எவ்வளவு தண்ணீரை நிலைநிறுத்தலாம் என்பதை தாராளமாக கேரளாவே முடிவு செய்யலாம். அணையே இல்லாமலும் பெரியாற்றை தமிழகத்துக்கு திருப்பிக்கொண்டுவரும் வழிமுறைகளையும் தமிழகம் தயார்நிலையில் வைத்துள்ளது.

இதற்கு தற்போது உள்ள 104 அடி சுரங்கத்தை வெறும் 34, அல்லது 50 அடியாக தாழ்த்தினால் போதுமானதாகும்.

இந்த திட்டத்தை கேரளாவில் பலரும் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தியாவிசன், ரிப்போர்ட்டர், மாத்ருபூமி, மாத்யமம் போன்ற பத்திரிக்கைகளும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளன. கேரள படைப்பாளிகள் சங்கமும் ஆதரவளித்துள்ளது. 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். தமிழகத்தில் 5 மாவட்ட பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.

மக்களிடையே மட்டும் எட்டியுள்ள இந்த திட்டத்தை தமிழக ஊடகங்களிடமும், கேரள தமிழக அரசிடமும் கொண்டு சேர்க்கும் எங்கள் முயற்சி தொடர்கிறது.

புதிய அணையை விட புதிய காழ்வாய் என்ற எளிமையான திட்டத்துக்கு கேரள தமிழக அரசுகள் முன்வர வேண்டும். இன்றல்ல என்றானாலும் அது தான் நிரந்தர தீர்வு.

No comments:

Post a Comment

Popular Posts