Dec 17, 2011

முதுகெலும்பு இல்லாத சில தமிழர்கள்


மிகவும் கேவலத்துடன் இந்த பதிவை எழுதுகிறேன். சில தமிழக தமிழர்கள் இந்த அளவுக்கு கீழ்தரமாக போனது தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும் என்பதில் ஐயமில்லை.

வீரம் பற்றி பேசும் தமிழர்களில் இப்படியும் சில கோழைகள் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.

1. முல்லைப்பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளின் கடைகளையும், பத்திரிக்கை அலுவலகங்களையும் அடித்து நொறுக்குபவர்களுக்கு சென்னையில் உள்ள சூரியா டிவி அலுவலகத்தின் மீது ஒரு கல் வீசும் தைரியம் இருக்கிறதா?

2. மலையாளிகளின் கடை விளம்பர பேனர்களை கிளித்து எறியும் வீராசூரர்களுக்கு தினமலர், தினகரன், தினத்தந்தி உட்பட பத்திரிக்கைகளில் வெளிவரும் மலையாளிகள் விளம்பரங்களை கிழித்து எறியும் தைரியம் உண்டா?, தொலைகாட்சிகளில் ஆலுகாசு, கல்யாண், முத்தூட் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என்று சொல்லவாவாது தைரியம் இருக்கிறதா?

3. முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய கேரள அதிமுக மற்றும் திமுகவை கலைக்க சொல்லும் தைரியம் இருக்கிறதா?

4.ஒன்றும் அறியாத அப்பாவிகள் பயணிக்கும் பேருந்துகள் மீது கல்வீசுபவர்களுக்கு பெரும் பணக்காரர்கள் செல்லும் சொகுசு கார்கள், விமானங்களை தடுத்து நிறுத்தும் தைரியம் இருக்கிறதா?

5. கேப்டன் டி.வி நிருபர் ஒருவர் சொல்கிறார் மலையாளிகளை எல்லாம் அடித்து விரட்டிவிட்டால் முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்ந்து விடுமாம்.  அட அடி முட்டாள்களே இதை தானே கர்நாடகாவில் செய்கிறார்கள். காவிரிப்பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களை அடிக்கும்போது மட்டும் உங்களுக்கு வலிக்கிறதோ?

6. தினகரன் தினமலர் தினத்தந்தி உட்பட பத்திரிக்கைகளுக்கு கேரளாவில் 1 லட்சம் பிரதிகள் விற்பனை ஆகிறது. இந்த பத்திரிக்கைகள் கேரளாவுக்கு அனுப்பக்கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா? கேரளாவில் இருந்து விளம்பரங்கள் வாங்கக்கூடாது என்று சொல்ல தைரியம் இருக்கிறதா?

அன்பர்களே கேரளாவுக்கும் தமிழகத்துக்குமான உறவு முல்லைப்பெரியாறு மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் 34,500 ஒப்பந்தங்கள் உள்ளன. இதில் 34499 ஒப்பந்தங்கள் சுமூகமாக உள்ளன. இது உலகில் வேறு எந்த இரு அரசாங்கத்திற்கும் இடையேயும் இல்லாத மிகப்பெரிய ஒற்றுமை.

கேரளாவில் 2 தமிழ் எம்.எல்.ஏக்கள் உள்ளார்கள். பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 5015 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.

கேரளாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சட்டசபை வரை தமிழில் பெயர்பலகை வைத்துள்ளார்கள். தமிழில் அரசு ஆவணங்கள் உள்ளன. பத்திரப்பதிவு முதல் பிறப்பு&இறப்பு சான்றிதழ் வரை தமிழில் உள்ளது. தமிழ் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. 

தமிழகத்துக்கு வெளியே அதிக தமிழர்கள் வாழும் பகுதியாக கேரளா உள்ளது. எனவே சில முட்டாள் தமிழர்களே!, கேரளா என்றால் மலையாளிகள் மட்டும் தான் என்ற உங்கள் குருட்டு புத்தியை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். 

முல்லைப்பெரியாறு பிரச்சனையை ஒரு வியாபாரமாக ஊடகங்கள் கையில் எடுத்துள்ளன. அதற்கு கூழைகும்பிடு போடும் பேடி தமிழர்களே எதார்த்தத்தை கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள். 

புதிய அணை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி சுமூக தீர்வை வலியுறுத்தி வரும் சம்மந்தப்பட்ட இடுக்கி, தேனி மாவட்ட விவசாயிகள் சொல்வதை கொஞ்சமாவது காதுகொடுத்து கேளுங்கள்.

மீடியாக்கள் அடுத்த பெரிய பிரச்சனை வந்தால் அங்கே போய்விடும். இப்போது கல் எரியும் தியாகிகள் எல்லாம் அப்போது மீடியாக்களுக்கு தமிழ்தீவிரவாதிகளாக தெரிவீர்கள் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

1 comment:

  1. சற்று முன்பு கைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். நீங்கள் எடுக்கவில்லை.

    ReplyDelete

Popular Posts