Oct 9, 2014

ரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது

செயலலிதாவுக்கு எதிரான சட்ட தீவீரவாதம் குறித்து இந்தியாவே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் ‘‘அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்’’ என்று அடித்துக்கொள்கின்றனர்.

4 வருடம் சிறை, 6 வருடம் தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வளவு தான்! செயலலிதாவால் 10 வருடத்திற்கு திரும்பி வர முடியாது.

கருப்பு எம்.சி.ஆர் நாம் தான் அடுத்த முதல்வர் என விசயகாந்த் கனவு காண்கிறார்

எப்படியாவது 2016ல் ஆட்சியை பிடித்தால் போதும், மெரினாவில் இடம் பிடித்துவிடலாம் என திமுக கனவு காண்கிறது.

பாமக ராமதாசின் பயம் தான் ரொம்ப சிரிக்க வைக்கிறது. செயலலிதா தேர்தல் பரப்புரை செய்வதை தடுக்க வேண்டுமாம். 2004ல் செயலலிதா தேர்தலில் போட்டியிடவில்லை. அந்த அனுதாப அலையிலேயே அதிமுக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல 2016ல் செயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் மக்கள் அனுதாபம் பெருகுமே என ராமதாசு பயப்படுகிறார். (தனித்தமிழ் கொள்கையில் உறுதியாக இருக்கும் ராமதாசு மீது எனக்கு தனி மரியாதை உண்டு)

இவர்கள் திண்ணையை எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் பாசகவும், காங்கிரசும் எதற்காக இப்போது துள்ளுகின்றன.

ரசினிகாந்தை வைத்து தமிழக பாரதிய சனதா ஆட்சியை பிடிக்க கனவு கண்டால் அது கனவாகவே தான் இருக்கும். ரசினி மட்டுமல்ல செயலலிதாவே பாரதிய சனதாவில் சேர்ந்தாலும் பாசகவால் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது.
  
தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை தவிர வேறு கட்சியின் ஆட்சியை கனவிலும் நினைக்காதீர்கள். அவ்வளவு சீக்கிரம் இந்த மண்ணில் பெரியாரை வீழ்த்திவிட முடியாது.

செயலலிதாவை இந்த நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓரங்கட்டி விடலாம் என்று தமிழக அரசியல் கட்சிகள் மனக்கணக்கு போடுவது தவறு.

உச்சநீதிமன்றமே தண்டித்தாலும், தமிழக சட்டசபைக்கு செயலலிதாவின் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

செயலலிதாவை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதை விட, மக்கள் மன்றத்தில் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராக வேண்டும். அது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். 

No comments:

Post a Comment

Popular Posts