மாவட்டம் தோறும் இணையதளங்கள் துவங்கப்படும் என்று திமுக அறிவித்தது. வலைதளங்களில் திமுக குறித்த விமர்சனங்களை சமாளிக்கவே இந்த ஏற்பாடு. திமுக குறித்த கொள்கைகளை பரப்புவார்கள் என நினைத்தால் அது தவறு. எங்கு, யார் திமுகவுக்கு எதிராக பதிவு எழுதினாலும் அனானியாக பின்னுட்டம் இடுவதையே இவர்கள் செய்கிறார்கள். இதனால் எப்படி திமுக மீது நன்மதிப்பு வரும் என்று தெரியவில்லை.
ஈழப்போரின் இறுதி கட்டத்தில் திமுகவின் செயல்பாடு தமிழர்கள் மத்தியில் வெறுப்பை ஊட்டியது. அந்த வெறுப்பின் காரணமாக திமுகவுக்கு எதிராக உலகம் முழுவதும் பல வலைப்பதிவுகள் வந்தன. இதனால் வலைப்பதிவில் திமுகவுக்கு எதிரான கருத்துக்கள் இன்று வரை விரவி கிடக்கின்றன. இதை எதிர்கொள்ளத் தான் திமுக தற்போது மாவட்டம் தோறும் வலைதளங்களை துவங்கி உள்ளது. இது நல்ல முயற்சி தான். நேரடியாக திமுகவின் விமர்சனங்களை எதிர்கொண்டால் வரவேற்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு, அனானிகளாக நாகரீகமற்ற பின்னூட்டங்களை பரப்புவதால் என்ன பயன்? இதை திமுக ஆதரவாளர்கள் புறிந்து கொள்வார்களா?
திமுக இப்படி இருக்க அதிமுகவோ அதைவிட மோசம். வலைதளமாவது எலிவலையாவது, அதிமுகவுக்கு எதிராக எவன் எழுதினாலும் அவனை தூக்கி குண்டர் சட்டதில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த குண்டர் சட்டத்தின் காரணமாக பல வலைப்பதிவர்கள் காணாமல் போனார்கள். பலரும் அடக்கி வாசிக்கிறார்கள். பலர் நமக்கு ஏன் வம்பு என கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என எழுதத் துவங்கி விட்டார்கள்.
இன்று செயலலிதா சிறையில் அடைபட்டதும். அவருக்கு ஆதரவாக பலர் குரல்கொடுக்க முடியாமல் போனதற்கு வலைப்பதிவை குண்டர் சட்டத்தில் கொண்டு வந்ததும் ஒரு காரணம்.
இந்த இரு கட்சிகளின் வருகையால் வலைப்பதிவில் அனானிகளின் சித்து விளையாட்டுகள் தான் அதிகமாகி இருக்கிறது. மக்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள அப்பழுக்கற்ற சிறந்த ஊடகம் வலைப்பதிவு. அதை இந்த இரு கட்சியனரும் புறிந்து கொள்ள வேண்டும்.
பத்திரிக்கை, தொலைக்காட்சி போல வலைப்பதிவிலும் அரசியல் அநாகரீகத்தை திணிக்க கூடாது. இது பொதுமக்களின் ஊடகம். இங்கு தான் புதிய சிந்தனைகள் பரவலாக ஊற்றெடுக்கும். இதை சனநாயக அரசாங்கங்கள் உயரிய வரமாக தான் நினைக்க வேண்டும்.
No comments:
Post a Comment