Jan 6, 2011

தமிழ்மணத்திடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்

தமிழ்மணத்தின் கட்டண சேவை குறித்து சில பதிவுகளை எழுதியிருந்தேன். முதல் பதிவையே தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். அதற்கு பதில் வராததால் அடுத்தடுத்த பதிவுகளை காட்டமாக எழுதியிருந்தேன்.

நான் கையாண்ட முறை தவறு என்பது எனக்கு அப்போதே புரியாமல் இல்லை. ஆனால் சில நேரங்களில் அவ்வாறான வழிமுறைகள் தேவைப்படுகிறது. அதையே தமிழ்மணம் விடயத்திலும் கையாண்டேன்.

தமிழ்மணத்திடம் இருந்து தற்போது பதில்வந்துள்ளது. பதில்கடிதம் திருப்தி அளிப்பதாக உள்ளது. கட்டண சேவை குறித்து உரிய நேரத்தில் பரிசீலிப்பதாக சொல்லியுள்ளார்கள். நல்லது. 

தமிழ்மணம் குறித்து அவதூறு பரப்பும் நோக்கில் எழுதவில்லை. ஆனால் பதிவுகளில் கையாண்ட சில வார்த்தைகள் காட்டமாக இருந்தது. ஒரு பத்திரிக்கையாளன் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் தான். இதை வலைப்பதிவர்கள் மட்டுள்ள சக பத்திரிக்கையாளர்களே சுட்டிக்காட்டினார்கள்

நாகரீகம் அற்றுபோன, தொடைநடுங்கி, கேவலம் இதுஎல்லாம் தமிழ்மணத்திற்கு எதிராக கையாளக்கூடாத வார்த்தைகள்.

இந்த வார்த்தைகளுக்காக வருத்தப்படுகிறேன். இதற்காக தமிழ்மணம் குறித்த பதிவுகளை நீங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அது கருத்து மோசடி. எனவே தமிழ்மணம் கட்டணசேவைக்கு எதிரான பதிவுகளில் குறிப்பிட்ட வார்த்தைகளை நீங்கி உள்ளேன்.

பதிவர்கள் இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். பதிவுகளில் உள்ள சில வார்த்தைகளை தான் திரும்ப பெறுகிறேன். கருத்துக்களை அல்ல. தமிழ்மணம் கட்டணசேவையை மறுபரிசீலணை செய்ய வேண்டும் என்பதே எனது தொடர் வலியுறுத்தல்.

அதற்கான காரணங்களாக தமிழ்மணத்திடம் நான் தெரிவித்தவை: 

மக்கள் இதழியல் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான ஊடகமாக எதிர்பார்க்கப்படுவது வலைபூக்கள். இந்த வலைபபூக்கள் கூகிள் போன்ற நிறுவனங்களால் இலவசமாக கொடுக்கப்படுவதால் தான் இவ்வளவு பயனாளர்கள் இருக்கிறார்கள்.

பணத்தை வைத்து தரம்பிரிப்பதும் முன்னுரிமை அளிப்பதும் மக்கள் இதழியலை கெடுக்கும் செயல். பதிவை விளம்பரமாக வாங்குவதன் ஆபாயம் இப்போது உங்களுக்கு தெரியாது. நாளடைவில் புரிந்துகொள்வீர்கள்.

பத்திரிக்கை துறை பணத்தின் பிடியில் சிக்கியது செய்திக்கு கட்டண சேவை அளித்ததால் தான். அதனால் தான் பத்திரிக்கைக்கு மாற்று ஊடகமாக வலைபதிவுகளை மக்கள் கருதுகிறார்கள். இந்நிலையில் இங்கும் அதே போன்ற சூழ்நிலை உருவானால் கருத்துக்கள் இருட்டடிப்புக்கு உள்ளாகும்.

உதாரணத்திற்கு 10 பதிவர்கள் பணம் கொடுத்து தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தை அபகரித்தால் என்ன செய்வீர்கள்?

முடியாது என்பீர்களா, அல்லது முகப்பு பக்கத்தின் விலையை கூட்டுவீர்களா? விலையும் கட்டண சேவையும் அதிகரிக்கும் தோறும் பதிவர்களிடம் தமிழ்மணத்தின் மீது வெறுப்பு தான் கூடும். மதிப்பு குறையும். நாளடைவில் இதே போன்ற கொள்கையை பிற திரட்டிகளும் பின்பற்றும் சூழல் உருவாகும்.

பதிவை பதிவாக திரட்டுங்கள், விளம்பரத்தை விளம்பரமாக திரட்டுங்கள். 

அச்சு மற்றும் தொலைகாட்சி செய்தி ஊடகங்கள் வலைப்பூக்களை திரும்பிபார்த்தது ஈழப்போரின் போது தான். பத்திரிக்கைக்கு இல்லாத தைரியம் மக்களுக்கு இருக்கிறது. இது ஒரு வளர்ந்துவரும் மாற்று ஊடகம் என்பதை பெரிய ஊடகங்களே ஒப்புகொள்கின்றன. இந்நிலையில் முளையிலேயே இங்கும் அரசியலும் பணமும் விளையாண்டால் அதன் விளைவு ?

ஒரு திரட்டியை நிர்வகிக்க நிச்சயம் பணம் தேவை. அதை விளம்பரமாக திரட்டுங்கள். அதற்காக பதிவையே விளம்பரமாக திரட்டினால் உண்மையான கருத்துக்களுக்கு விலையில்லாமல் போய்விடும்.? தளத்தின் நம்பகதன்மையை குறைக்கும். சூடான பதிவுகளிலும் வாசகர் பரித்துரை களத்திலும் கட்டணசேவையில் உள்ள பதிவுகள் அதிகம் வர வாய்ப்பிருக்கிறது. அப்படியானால் அந்த களத்தில் எவ்வளவு தூரம் நம்பகதன்மை இருக்கும்?

3 comments:

  1. குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறீர்கள். பரவாயில்லை. தொடச்சிக்குங்க.

    பத்திரிகைகளுக்கும், தமிழ்மணம் தளத்துக்குமான வேறுபாடு. இன்றைய வணிகப் பத்திரிகைகள் (குமுதம், விகடன், தந்தி, தினமலர், நக்கீரன் ஆகியவை) பெரு முதலாளிகளால் லாபத்திற்காக நடத்தப்படுபவை. தமிழ்மணம் தளம், அதன் மூலம் பணம் சேர்ப்பதற்காக அதன் உரிமையாளர்களால் நடத்தப்படவில்லை (இதுவரையாகிலும்).

    இனிமேலும் அந்த நோக்கத்துடனே தளத்தை நடத்துவார்கள் என நம்புகிறேன்.

    Their primary job is not running the site as well. அதனால் தான் தளத்தை நடத்துவதற்கான செலவைத் தங்கள் கைக்காசிலிருந்து செய்தார்கள்.

    தானமும் தர்மமும் தனக்கு மிஞ்சித்தான் என்பதை அறிவீர்களல்லவா? செலவுத்தொகை கையைக் கடிக்கும்போது என்ன செய்வார்கள்?

    விக்கிபீடியாவின் சேவையைப் போன்றே தமிழ்மணத்தின் சேவையையும் நான் பார்க்கிறேன்.

    இது உங்களுக்குப் புரியாவிட்டால் இனிமேலும் ஊளையிடாமல் உங்கள் பதிவை வேறு வழங்கிகளில் இணைத்துக் கொள்ளலாமே?

    ReplyDelete
  2. //இனிமேலும் ஊளையிடாமல் உங்கள் பதிவை வேறு வழங்கிகளில் இணைத்துக் கொள்ளலாமே? //

    அருமையான கருத்து


    இந்த தளத்தில் எப்போதும் ஊளையிடுவது இவருடைய வேலையா போச்சி.

    ReplyDelete
  3. உங்கள் எண்ணம் உங்களுக்கு நல்லதாக இருக்க துணிந்து
    செயல் படுங்கள் . மற்றவர் உரிமைதனை பாதிக்காமல்
    இருந்தால் சரி .தமிழ்மணம் உங்களை வெளிச்சம்
    போட வழி வைக்கலாம் அதற்காக உங்கள் எண்ணத்திற்கு தடை போடாதீர்கள் .அப்படி செய்தால்
    எழுதவே தோன்றாது .மன நிறைவும் உண்டாகாது .
    தமிழ்மணம் வார்த்தையில்தான் உண்மை மனம் உங்கள்
    உள்ளத்தில் உள்ளது .

    ReplyDelete

Popular Posts