Jan 25, 2012

தினமலரில் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகியுள்ளது.


முழு பூசணிக்காயை எவ்வளவு நாள் தான் சோற்றில் மறைக்க முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப தினமலரில் தமிழ்மலரின் முல்லைப்பெரியாறு தீர்வு வெளியாகி உள்ளது.  

புதிய அணைக்கு மாற்றாக புதிய காழ்வாய்கள் வெட்டி தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை தமிழ்மலரில் தொடர்ந்து எழுதிவருகிறோம்.

தமிழகத்தின் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் அப்பாசு மற்றும் கேரள முல்லைப்பெரியாறு போராட்டக்குழு தலைவர் சி.பி.ரோய் ஆகியோர் இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் பேட்டி அடங்கிய சி.டியை வெளியிட்டிருந்தோம். 

கேரள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. தமிழக ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. தினத்தந்தியில் மட்டும் சிறு செய்தி வந்திருந்தது. தி இந்து ஆங்கில பத்திரிக்கை இரண்டுமுறை விரிவான செய்திகளை வெளியிட்டிருந்தது. 

தினமலர் பத்திரிக்கைக்கு இப்போது ஏனொ சிறு நல்ல புத்தி வந்துள்ளது. புதிய அணை வேண்டாம் என்ற செய்தியை வெளியிட்டுள்ளது.

தினமலர் செய்தி :-
புதிய அணை தேவையில்லை
 போராட்டக் குழு முன்னாள் தலைவர் அறிவிப்பு

கோட்டயம்: "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை விட, அங்கு புதிய சுரங்கக் கால்வாய் அமைத்து, அணை நீர்மட்டத்தைக் குறைக்கலாம்' என, முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவின் முன்னாள் தலைவர் சி.பி.ராய் தெரிவித்தார். 

முல்லைப் பெரியாறு பிரச்னையில் தற்போதுள்ள அணைக்குப் பதிலாக, அங்கு புதிய அணை அமைப்போம் என, கேரள அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இப்பிரச்னையை எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்து, முல்லைப் பெரியாறு போராட்டக் குழு முன்னாள் தலைவர் சி.பி.ராய் கூறியதாவது: 

முல்லைப் பெரியாறு அணையை இடிப்பது அல்லது தற்போதுள்ள அணையில் இருந்து 1,300 அடி தூரத்தில் புதிய அணை கட்டுவது எல்லாம் தேவையற்றது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தாலே, அணைக்கு பாதுகாப்பு கிடைத்து விடும். அதற்காக, தற்போதுள்ள அணையில் 104 அடி சுரங்கக் கால்வாய்க்குப் பதிலாக, 50 அடி உயரத்தில், புதிய சுரங்க கால்வாய் அமைத்து, அதன் மூலம் நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். இதனால், அணையின் நீர்மட்டம் 100 அடியாகவே இருக்கும். அதற்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தாலும், தானாகவே சுரங்க கால்வாய் வழியாக வெளியேறி விடும்.

அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க, ஏற்கனவே தமிழக அரசு ஒப்புக் கொண்டு உயர்மட்ட குழுவிடம் தெரிவித்துள்ளது. எனவே, புதிய சுரங்க கால்வாய் அமைக்க தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை. மேலும், இது தமிழக விவசாயிகளுக்கு மகிழ்ச்சியையும் தரும். 

இவ்விஷயத்தில் கேரள அரசு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். பின்னர், இவ்விஷயத்தை நீதிபதி கே.டி.தாமசிடம் அளிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையை கேரள அரசு ஆயுதமாக கருதக் கூடாது. அதற்கு பதிலாக, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முயல வேண்டும். இவ்வாறு, சி.பி.ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இவர், இதே கருத்தை தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தான், அவரை போராட்டக் குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் செய்தி :-  http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_2967.html

கேரள அரசுக்கு விரிவான திட்ட அறிக்கையை கொடுத்துள்ளோம். தமிழக அரசும் இப்போது இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

1 comment:

Popular Posts