முல்லை பெரியாறு விடயத்தில் தமிழகத்தின் செயல்பாடுகள் தவறானவை. கேரளாவின் கோரிக்கையில் 100% நியாயம் இருக்கிறது. முல்லை பெரியாறு அணை மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றுவந்த என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
முல்லைபெரியாறு பிரச்சனையில் கேரளாவில் ஏதோ மலையாளிகள் எதிர்க்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். முல்லைபெரியாறு அணையால் ஆபத்து என்று சொல்பவர்கள் தமிழர்கள் தான். அதுவும் அந்த அணையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தமிழர்களின் இன்றைய தலைமுறையினர்.
முல்லை பெரியாறு அணைக்கு கீழே குடியிருப்பதும், விவசாயம் செய்வதும் தமிழர்கள் தான். 10 லட்சம் தமிழர்கள் உட்பட 40 லட்சம் மனிதர்களின் உயிர் பிரச்சனை அது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் வீணாக கலக்கும் பெரியாற்றை(பெரிய+ஆறு) மதுரை ராமநாதபுரம் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் தான் முல்லை பெரியாறு அணை திட்டம்.
முல்லை + பெரியாறு என்ற இரு ஆற்றுப்பகுதிகளை இணைத்து அணையாக நீரை தேக்கி மேற்கு திசையில் பாயும் நீரின் போக்கை கிழக்கு திசைக்கு திருப்புவது தான் அணையின் பிரதான நோக்கம்.
அணை இருக்கும் மலைபகுதி முக்கோண சரிவை உடையது. சரிவில் மேற்குநோக்கி பாயும் ஆற்றுநீரை தடுத்து தேக்கி நிரப்பி கிழக்குநோக்கி எதிர்திசையில் வழிய செய்யப்படுகிறது.
இயற்கைக்கு எதிராக மிகப்பெரிய போரட்டத்தில் கட்டப்படும் இந்த அணையின் ஆபத்தை அப்போதே உணராமல் இல்லை. அதை 999 ஆண்டு ஒப்பந்தபடிவத்தில் தெளிவாகவே சொல்லியுள்ளார்கள்.
பிரதான அணையின் மொத்த உயரம் 177. இதில் 162 அடி வரை தண்ணீரை தேக்கியிருக்கிறார்கள். 104 அடிக்கு கீழான தண்ணீரை எதிர்திசையில் திருப்பகூடாது. அந்த நீர் தேக்கடி பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு சொந்தமானது. 104 முதல் 152 அடிவரையிலான நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
115 அடியிலிருந்து தமிழகம் தேவையான அழுத்தத்தில் நீரை எடுக்க முடியும்.
அணையின் பலத்தை பொருத்தவரை 50 ஆண்டுகள் மட்டுமே முழுமையான உறுதியிருக்கும் என்பது உலகின் பொதுவிதி.
112 ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணாம்பு கலவையில் கட்டப்பட்டது அணை. இதன் மேற்பூச்சு நீர்அரிப்பு தன்மையுடையது. கற்களுக்கு இடையிலான கலைவை பகுதியில் நீர்உறிஞ்சும் தன்ம¬யும் உள்ளது. இதன் வழியாக அரிப்பும் நீர்கசிவும் உள்ளது என்பது உண்மை. நீர் கசிவின் தன்மை ஆண்டுதோறும் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது என்பதும் உண்மை.
உலகில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான 4 அணைகளில் முல்லைபெரியாறு அணையும் ஒன்று. மற்ற மூன்று அணைகளிலும் நீர்தேக்கம் பாதியாக குறைக்கப்பட்டுவிட்டது. ஆபத்தான அணைகள் பட்டியலில் முல்லைபெரியாறு அணையும் உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் முக்கிய உடல் பகுதியின் நீர்அழுத்தம் கூர்மையாக முக்கிய அணைகட்டின் அடிப்பகுதியை நோக்கி செல்கிறது. அணையிருக்கும் நிலபகுதியும் அதே சாய்வில் சரிவாகவே அழுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் அதிகப்படியான அழுத்தத்தை அணைக்கு கொடுப்பது ஆபத்தையே தரும்.
முல்லை பெரியாறு பிரதான அணையின் பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொள்வது தான் அறிவுடமை. இதற்கு இன்றுவரை தமிழகம் மாற்றை யோசிக்காதது தான் வேதனை. ஒரு அணையால் ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு மாற்றை யோசிப்பது தான் மனிதநேயம். அந்த மனிதநேயம் இன்றுவரை தமிழத்திற்கு வராதது ஏன்?
முல்லை பெரியாறு அணையில் அதிகப்படியான நீர் மேற்குநோக்கி வெளியேற்றப்பட்டால் வரும் ஆபத்தை இடுக்கி அணையை பற்றி தெரிந்துகொண்டால் புரிந்துகொள்ள முடியும்.
பெரியாற்றின் குறுக்கே மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது முல்லைபெரியாறு அணை. இங்கிருந்து கசியும் நீர் வல்லகடவு, வண்டிப்பெரியார் நகரங்களை கடந்து இடுக்கி அணையை அடைகிறது. பெரியாறு அல்லாமல் பல காட்டாறுகளும் இடுக்கி அணையின் பிரதான நீர்ஆதாரங்கள். எப்போதும் நிரம்பிவழியும் இடுக்கி அணையும் மிகவும் ஆபாத்தான அணைகளில் ஒன்று தான்.
உலகில் வளைவு (ஆர்ச்) வடிவில் கட்டப்பட்ட நவீன அணை இடுக்கி அணை. மூன்று மலை இடுக்குகளில் தடுப்பணை ஏற்படுத்தி செங்குத்தாக நீர் தேக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட கூடுதால் அழுத்தம் கொடுத்தால் இடுக்கி சிறுதோணி அணை உடையும் என்பது நிபுணத்துவம்.
முல்லைபெரியாறு அணையின் வெள்ளப்பெறுக்கால் இடுக்கி அணை உடையுமானால் 40 லட்சம் மனிதர்கள் நீரில் அடித்துசெல்லப்படுவார்கள். கொச்சி என்ற அழகிய துறைமுகமே சுவடற்று போகும். ஏராளமான வனவிலங்குள் கடலில் செத்துமிதக்கும்.
இதெல்லாம் சம்பவிக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அது தான் நிதர்சன உண்மை.
சரி அடுத்து தமிழகம் பக்கம் பார்வையை திருப்புவோம்.
முல்லை பெரியாறு அணையின் உதவியால் தேனி, மதுரை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்டங்கள் செழிப்படைகிறது. இந்த உதவி நிறுத்தப்பட்டால் இந்த பூமி பாலைவனமாகிவிடும் என்பதும் நிதர்சன உண்மை.
இந்த பகுதிகளின் குடிநீர் உயிர் ஆதாரம் முல்லை பெரியாறு என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை.
கேரள மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழக மக்களுக்கு தண்ணீர் வேண்டும். இது தான் முல்லைபெரியார் பிரச்சனைக்கான முழுமையான தீர்வு.
115 அடி முதல் 136 அடி வரை நீரை தேக்குவதால் நிச்சயமாக தமிழகம் போதிய நீரை பெறமுடியும். ஆனால் அதை நீண்டநாட்களுக்கு தேவைக்கு ஏற்ப பிரித்து பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கிறது.
மேலும் தமிழகத்தின் முக்கிய மின்உற்பத்தி நிலையங்களில் ஒன்றான கூடலூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு 152 அடி வரை நீரை தேக்கினால் மட்டுமே போதிய மின்உற்பத்தி செய்ய முடியும். இங்கு தான் பிரச்சனையே இருக்கிறது.
நமக்கு தண்ணீரா? மின் உற்பத்தியா? எது பிரதானம் என்பதை பார்க்க வேண்டும்.
இதே அணை புவியல் ரிதியாக நேர் எதிர் திசையில் திரும்பி இருந்தால் நாம் ஒத்துக்கொள்வோமா?
நிச்சயம் தமிழகம் மாற்றை யோசித்தேயாகவேண்டும். இல்லாவிட்டால் கேரளாவின் துயரத்தின் மிகப்பெரிய சாபம் தமிழகத்தின் மீது நீங்கா வடுவை ஏற்படுத்தி விடும்.
அரசியலை தாண்டி கேரள மக்களின் கோரிக்கை இதுதான். அணைக்கு மாற்று அணை கட்டவேண்டும். அல்லது அணையின் அழுத்தத்தை குறைத்து நீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும்.
எதிர்பகுதியில் சில கால் வாய்களை வெட்டுவதன் மூலம் எளிதாக இந்த பிரச்சனையை தீர்க்கலாம். ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அவ்வளவே. எதிர்திசையில் கால்வாய் வெட்டுவது முல்லைபெரியாறு அணை பிரச்சனைக்கு மிகஎளிதான தீர்வாக இருக்கும். இதற்கு அதிககால அவகாசமோ, நிதியோ தேவைப்படாது. மேலும் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். கேரள மக்களும் நிம்மதியாக உறங்க முடியும். இப்படி ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இதை அரசியல்வாதிகள் யோசிப்பார்களா?
கர்நாடகா, ஆந்திராவை ஒப்பிடும்போது கேரளா தமிழகத்துக்கு மிகப்பெரிய தண்ணீர் கொடையளிக்கிறது. ஆந்திரா, கர்நாடகாவுக்கு தமிழகம் ஒரு டி.எம்.சி தண்ணீருக்கு 3 கோடி ரூபாய் தருகிறது. ஆனால் கேரளாவுக்கு 70 டிஎம்சி தண்ணீருக்குநிலகுத்தகையாக 40 ஆயிரம் மடடுமே தருகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்கு தொடர்ச்சி மலையில் கேரளா நோக்கி பாயும் 36 ஆறுகளை தடுத்து தமிழகம் நோக்கி திருப்பியிருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடகூடாது.
கேரளா நமது நண்பன். அவர்கள் கோரிக்கையை மனிதநேயத்தோடு பார்ப்போம். நிச்சயம் தீர்வு உள்ளது.
குமரிக்காக மேற்கு தொடர்ச்சி மலையின் அத்தணை அணைகளையும் ஆறுகளையும் கேரளாவுக்கு விற்றுவிட்டு இன்று மீண்டும் உரிமைகொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.
வரலாற்றை கொஞ்சம் திருப்பி பாருங்கள்
காமராசரால் அனாதையாக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட கேரள தமிழர்களின் குரலை ஒருநாளாவது தமிழர்கள் கேட்டதுண்டா?
50 ஆண்டுகால வரலாற்றில் ஒரு தலைவராவறு வண்டிபெரியாறு உட்பட பகுதிகளுக்கு சென்று தமிழர்கள் குறைகளை கேட்டிருக்கிறார்களா?
தமிழகம் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமான பாதுகாப்பு தரும் நாடு என்றால் தயவு செய்து தமிழ் என்ற பெயரை தூக்கிவிட்டு சென்னை மாகாணம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். உலக தமிழர்களுக்கு ஒரு நாடாக இருக்குமானல் அதற்கு தமிழ்நாடு என்று பெயர் இருக்கட்டும்.
வண்டிபெரியார், இடுக்கி இந்த பகுதிகளில் இருக்கும் தமிழர்களின் நலனுக்காக தமிழக அரசு ஒரு துரும்பை கிள்ளியிருக்குமா?
தமிழகம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கொடுமை யாருக்காவது தெரியுமா? ஆழியாறு நீர் கிடைக்காமல் பாலக்காடு மாவட்டத்தில் கருகிபோகும் நெற்கதிர்களின் மரணக்குரலை எப்போதாவது தமிழகம் காதுகொடுத்து கேட்டதுண்டா?
கோவை அருகே அட்டப்பாடி என்ற ஒரு பகுதி இருக்கிறது. உலகின் தலைசிறந்த சுற்றுலா தளமாகவும் விவசாய பூமியாகவும் இருந்த மண் இன்று வீணாக போனது.
காரணம் ஒரு மேம்பாட்டு முயற்சிக்கும் தமிழகம் சம்மதிப்பதில்லை.
புவியியல் மற்றும் கலாச்சர அமைப்பில் தமிழகமாக இருந்த பகுதிகளை காமராசர் தன் சுயநலனுக்காக கேரளாவிடம் அடகுவைத்துவிட்ட கொடுமை யாருக்காவது தெரியுமா?
தமிழக அரசின் உதவி கிடைக்கும் என காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துபோன தமிழர்கள் தான் இன்று கேரளாவின் ஆதரவு கரத்தை பிடித்துள்ளனர்.
காமராசரால் அநாதையாக்கப்பட்ட இந்த தமிழர்களை இன்றும் கவுரவமாக வைத்துள்ளது கேரளா. இவர்களுக்கு தமிழ்பள்ளிகள், தமிழில் அரசு ஆவணங்கள், தமிழில் குடும்ப அட்டை, தமிழில் வாக்காளர் அடையாள அட்டை, தமிழில் பெயர்பலகைகள் என தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தள்ளது.
ஆனால் கேரள மக்களின் உயிர் பயத்திற்கு நாம் என்ன மதிப்பளித்துள்ளோம். குறைந்தபட்சம் அவர்களின் கருத்து என்ன என்றாவது காது கொடுத்து கேட்டுள்ளோமா?
மதுரை உட்பட தென்மாவட்ட விவசாயிகளே தயவு செய்து தமிழக அரசியல்வாதிகளை நம்பாதீர்கள். நமது தொப்புள்கொடி உறவுகளின் கையில் உள்ளது முல்லைபெரியாறு தீர்ப்பு.
அவர்களை சென்று சந்தியுங்கள். அவர்கள் நிலையை பாருங்கள். அவர்களது அச்சத்தை போக்குங்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அவர்கள் மனது வைத்தால் முல்லைபெரியாறு என்றும் உங்களுடையது தான்.