முல்லைப்பெரியாற்றில் புதிய ஆணை கட்டினால் அதை பராமரிப்பது யார்? என்ற நீதிபதி ஆனந்தின் கேள்வி கேரளாவை மகிழ்ச்சி உச்சாணியில் நிறுத்தி உள்ளது.
புதிய அணையின் உரிமை முழுக்கமுழுக்க கேரளாவுக்கு தான். ஆனால் பராமரிப்பு பணியை கேரளா-தமிழகம்-மத்தியஅரசு ஆகியவை இணைந்து செயல்படுத்த தயார் என கூறியுள்ளார் கேரள முதலமைச்சர். இதே கருத்தையே உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்ய உள்ளனர்.
புதிய அணை குறித்த தமிழகத்தின் பதிலில் தான் இருக்கிறது கேரள கனவுக்கான பிடிப்பு. புதிய அணை பராமரிப்பு குறித்த நீதிபதி ஆனந்தின் கேள்விக்கு தமிழகம் ஒரு வாரத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்போதைய அணை பலமாக உள்ள நிலையில் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தமிழக வழக்கறிஞர் உடனடியாக தெரிவித்தார். ஆனால் இது குறித்து அரசின் நிலைபாட்டை தெரிந்து அறிவிக்கும்படி கூறியுள்ளது உயர்மட்ட குழு. இது தான் கேரள மகிழ்ச்சியின் காரணம்.
சிறுவாணி அணை போன்ற ஒரு ஒப்பந்தத்தை ஏற்க தாயர் என்றுள்ளது கேரளா. ஆனால் சிறுவாணிக்கும் பெரியாற்றுக்கும் பெயரிலேயே வேறுபாடு உள்ளது என்பதை தமிழக&கேரள அரசுகள் கவனிக்க வேண்டும்.
சிறுவாணி அணை என்பது குடிநீருக்காக மட்டும் கட்டப்பட்ட ஒரு சிற்றணை. இங்கிருந்து கோவை மாநகராட்சி பம்பு &குழாய் வாயிலாக மிகச்சிறிய அளிவில் மட்டுமே தண்ணீரை எடுக்க முடியும்.
இந்த அணை ஒப்பந்தப்படி சிறவாணி அணையின் முழு உரிமை கேரளாவுக்கு உரியது. அணை பராமரிப்பு, பாதுகாப்பு, நீர்மட்டம் நிர்ணயித்தல், சுற்றுலா அனுமதி என அத்தனை உரிமையும் கேரளாவுக்கே உள்ளது. இந்த அணையில் இருந்து தமிழகம் தண்ணீரை குடிநீர் தேவைக்காக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு விலைநிர்ணயமும் இருக்கிறது. மேலும் பராமரிப்பு செலவாக ஆண்டுதோறும் கேரளா கோடிக்கணக்கில் வாங்கிக்கொள்கிறது. சிறுவாணி அணைநீரால் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் ஒரு ஏக்கர் கூட விவசாம் செய்யபடுவதில்லை.
ஆனால் பெரியாறு என்பது நேர் தழைகீழானது. சிறுவாணியை காட்டிலும் பலமடங்கு பெரியது பெரியாறு. குடிநீர், விவசாயம், மின்உற்பத்தி என பல்முறை பயன்பாடுகள் பெரியாறு அணையால் சாத்தியப்படுகிறது. தற்போது இதன் உரிமை, பராமரிப்பு நீர்பயன்பாடு அனைத்தும் தமிழகத்தின் கையில் உள்ளது. தமிழகம் எப்போது வேண்டுமானாலும் நீரை தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது.
ஆனால் கேரளா வலியுறுத்தும் சிறுவாணி மாதிரி ஒப்பந்தத்தில் கட்டப்படும் புதிய பெரியாறு அணையில் தமிழகத்துக்கு எந்தத உரிமையும் இருக்காது. சிறுவாணியில் எப்படி தண்ணீரை பணம் கொடுத்து வாங்கப்படுகிறதோ அதே நிலை பெரியாறு அணையிலும் ஏற்படும். 16 டி.எம்.சி தண்ணீருக்கு வாடிக்கையாளர் உரிமை மட்டும் என்ற பரிதாப நிலைக்கு தமிழகம் தள்ளப்படும்.
சிறுவாணி என்பது ஒரு மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் உள்ள ஒரு சிற்றணை. இந்த அணையின் ஒப்பந்த மாதிரியை 5 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், மின்தேவையை பூர்த்தி செய்யும் பெரியாறு அணையோடு எந்த விதத்திலும் ஒப்பிட முடியாது.
மேலும் ஆயுள் காலம் முழுவதும் உரிமை உள்ள ஒரு அணையை தமிழகம் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்? 999 குத்தகை ஒப்பந்தம் அணைக்கு அல்ல அணையின் நீர்பிடிப்பு இடத்துக்கு தான் என்பதை கேரளா தெளிவு படுத்திக்கொள்ளட்டும்.
எந்த நிலையிலும் தற்போதைய அணையை இழப்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய ஈடு செய்யமுடியாத இழப்பாகவே இருக்கும். பென்னிக்குயிக்கை குல தெய்வமாக வழிபடும் மக்கள் இந்த இழப்புக்கு எந்தவிதத்திலும் தயாராக மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
இறதியாக சிறுவாணி அணைக்கு அருகில் நதிக்கரையில் வசிப்பவர் என்ற பெருமையோடு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்.
சிறுவாணி அணைக்கு உரிமையாளர் கேரளாவாக இருந்தாலும், கட்டுமானத்தின் போது கூலி ஆட்களுக்கு தமிழகம் இலவசமாக தந்த அரிசியை மூட்டைகளாக அடிக்கினால் அது சிறுவாணி அணையை விட உயரமாக வரும். இதற்காக வாழ்நாள் முழுவதும் நாங்கள் தமிழகத்துக்கு கடமை பட்டுள்ளளோம் என்றார் ஒரு மலையாள கூலித்தொழிலாளி. அடித்தட்டு மக்களிடம் உள்ள இந்த உயரிய எண்ணம் அரசியல்வாதிகளிடமும் ஊடகங்களிடமும் இல்லையே ?