ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் இடம்பெற்றால் சென்னையில் போட்டிகள் நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தமிழீழம் வரலாற்றில் மிகமுக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் ஈழப்பேராட்டத்தில் தமிழர்கள் வைக்கும் முதல் பிரமாண்ட செக் என இதை சொல்லலாம்.
த்பூ... கேவலம் ஒரு விளையாட்டுக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? இதை ஈழத்தமிழர் போராட்டத்தோடு ஒப்பிடலாமா? என கருணாநிதி பாணியில் சிலருக்கு சந்தேகம் வரலாம்.
இது ஒரு சிறுபிள்ளைத்தனம் என சர்வதேச சமூகம் சிரிக்கலாம். ஆனால் அழிக்கமுடியாத ஈழப்போராட்டத்தை ஒடுக்கிய முக்கிய காரணிகளில் இந்த வியாபார விளையாட்டு அடங்கிக் கிடக்கிறது.
அவ்வளவு சீக்கிரம் விடுதலைப்புலிகளை அழித்துவிட முடியாது என்பது ராசபட்சே கும்பலுக்கு தெரியாமல் இல்லை.
இந்த நிலையில் தான் சோனியா, ராகுல் என்ற தனிப்பட்ட மனிதர்களின் மனக்காயங்களை ராசபட்சே முதல் ஆயுதமாக எடுத்தான். அடுத்து சர்வதேச வியாபார நிறுவனங்களுக்கு வலை விரித்தான். ஆயுத வியாபாரம் செய்ய அத்தனை நாடுகளும் முன்வந்தன. ஆயுத வியாபாரம் தீர்ந்ததும், பொருளாதார வியாபார சந்தைகளை இலங்கையில் ஏற்படுத்தலாம் என கணித்தன.
ஈழம் ஒடுக்கப்பட்டது. சோனியா ராகுல் மனக்காயங்கள் ஆறியது. ஆனாலும் ராசபட்சேவுக்கு பயம் மட்டும் இன்னும் போகவில்லை. மேதகு பிரபாகரன் மீண்டும் உயிர்த்தால்? ஓராயிரம் பிரபாகரன்கள் வளர்ந்தால்?
பாகிசுதானில் கொடிகட்டிப்பறந்த முசரப் பின்னர் பல நாடுகளில் ஓடி ஒழிந்த வரலாறு ராசபட்சேவுக்கு தெரியாமல் இல்லை. இந்த நிலை தனக்கு வராமல் இருக்க ராசபட்சே இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பது இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களை.
தன்னை எக்காலங்களிலும் காப்பாற்றும் சக்தி இலங்கை இனவெறி சிங்களர்களிடமோ, இந்தியா சீனா பாகிசுதான் போன்ற அரசாங்கங்களிடமோ இல்லை என்பது ராசபட்சேவுக்கு தெரியும். அதனால் தான் சர்வதேச நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டார்.
இன்று இந்தியா சீனா உட்பட நாடுகள் இலங்கையை நட்பு பாராட்டுவதன் பின்னனியில் இலங்கை என்ற வியாபார சந்தை தான் உள்ளது.
நாடு இறையாண்மை, மனிதநேயம் இவைகளை கடந்து வியாபார சந்தை என்ற ஒற்றை ராசதந்திரத்தை மேதகு பிரபாகரன் அவர்கள் கவனிக்கவில்லை. இதை கவனத்தில் கொண்டிருந்தால் ராசபட்சே என்ற பெயரே வரலாற்றில் எங்கும் எழுதப்பட்டிருக்காது.
சரி இனி இன்றைய விடயத்துக்கு வருவோம்.
2 கோடி மக்கள் உள்ள சந்தை பெரிதா? 7 கோடி மக்கள் உள்ள சந்தை பெரிதா? என்ற கேள்விக்கு பதில்தேடவேண்டிய முதல்கட்ட நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை என்பது புதிய சந்தை. எனவே வியாபாரம் சூடுபறக்கிறது. ஆனால் இந்த புதிய சந்தைக்காக தமிழ்நாடு என்ற மிகப்பெரிய நிரந்தர சந்தையை கார்ப்பரேட் நிறுவனங்கள் இழக்க தயாராகுமா? இங்கே தான் தமிழக முதல்வர் மிக சரியாக செயல்பட்டுள்ளார். இலங்கை போரை நடத்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முதல்கட்ட செக்கை வைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு தமிழகத்தில் தடை விதித்ததும். தமிழகத்தின் மீது ஒரு ஏளன சிரிப்போடு உடனடியாக இலங்கைக்கு மாற்றிக்கொண்டார்கள்.
இதை ஒரு தோழ்வியாக கருத தேவையில்லை. காரணம் அது பணம்கொழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபாரம் அல்ல. ஆனால் ஐ.பி.எல் கிரிக்கெட் என்பது பணம்கொழிக்கும் ஆட்டம். இதில் இலங்கை முக்கியமா? சென்னை முக்கியமா? என்ற கேள்விக்கு விடைதேடியே ஆக வேண்டும். அதுவும் குறுகிய நாட்களில்.
என்னுடைய கணிப்பு படி இதில் தமிழ்நாட்டு சந்தை தான் வெல்லும் என்று நினைக்கிறேன்.
அப்படி நடந்தால் தனிஈழம் அமைய இன்னும் நாம் வெகுதுரம் செல்லவேண்டியதில்லை...