Apr 17, 2016

பெரியார் கண்ட திராவிட நாடும் - அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 5

பெரியார் கண்ட திராவிட நாடும்
அண்ணா ‘பிழை’த்த தமிழ்நாடும் - 5

திராவிட நாடு கோரிக்கையை ஆரியர்கள் உடைத்த வரலாற்றை சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

மெட்ராஸ் ஸ்டேட் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டது. ஆனாலும் ஏன் தமிழ்மொழிக்கு என தனிமாநிலம் இல்லை என்ற ஆதங்கம் கோபமாக வெடித்தது.

தெலுங்கர்கள் பிரிந்தாயிற்று, கன்னடியர் பிரிந்தாயிற்று, மிச்சமிருந்த மலையாளியரும் பிரிந்து விட்டார்கள். இனி மெட்ராஸ் ஸ்டேட் எதற்கு? அதை தமிழ்நாடக அறிவியுங்கள் என போராட்டங்கள் வலுத்தன.

போராட்டத்தை ஒடுக்க ஆரியர்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை கொண்டே காய்நகர்த்தினர். திராவிட கழக தொண்டர்கள் அடிபட்டனர், சிறைபட்டனர். இந்த சூழலில் தான் இந்தி திணிப்பும் மீண்டும் புத்துணர்வு பட்டது. 

திராவிடர்கள் பிளவு பட்டு விட்டார்கள், இந்த நேரத்தில் இந்தியையும் திணித்து விடலாம் என மத்திய காங்கிரஸ் அரசார் கங்கணம் கட்டினர். 

பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலர் தீக்குளித்தனர். பலர் பட்டினி போராட்டம் இருந்தனர். தமிழகமே பற்றி எரிந்தது. சங்கரலிங்கனார் என்ற மொழிப்போர் தியாகி பட்டினி போராட்டத்திலேயே மாண்டார். இன்னும் தமிழகத்தில் போராட்டம் உக்கிரம் அடைந்தது.

அப்போது தான் ஆரியர்கள் எதிர்பார்த்த அந்த வார்த்தை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இந்தியும் வேண்டாம், திராவிடமும் வேண்டாம் என்ற வார்த்தை தான் அது.

தெலுங்கு பிரிந்தாயிற்று, கன்னடம் பிரிந்தாயிற்று, மலையாளமும் பிரிந்தாயிற்று இன்னும் எதற்கு உங்களுக்கு திராவிடம் என்று ஆரியர்கள் கேலி செய்தனர். இந்த கேலியே மெட்ராஸ் ஸ்டேட் என தொடர்ந்தது.

இந்த கேலி திராவிட இயக்க இளைஞர்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்தது. ஆரியன் கேலி செய்வது நியாயம் தானே, இன்னும் எதற்கு நமக்கு திராவிடம் - என மாணவர்கள், இளைஞர்கள் பேசத் துவங்கினர். 

ஒருபுறம் ஆரியனின் கேலி, இன்னொருபுறம் ஆட்சியாளர்களிடம் அடி, நொந்து போனார்கள் திராவிட இயக்க இளைஞர்கள். 

இனியும் அடிவாங்கி சாக முடியாது. நாமும் ஆட்சி ஆதிகாரத்தை கைபற்ற வேண்டும். கொள்கைகளை விட ஆட்சி அதிகாரம் தான் முக்கியம். ஆட்சி அதிகாரத்தை கைபற்றி விட்டால் கொள்கைகளை எளிதாக செயல்படுத்தலாம் என அண்ணா முடிவெடுத்தார்.

உடைந்தது திராவிடக் கழகமே!

இப்போது இன்னும் குதூகலித்துக் கொண்டனர் ஆரியர்கள்.

தேர்தலில் போட்டி போட்டு ஆட்சியை கைபற்ற அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் முடிவு செய்தது. முதல் தேர்தலிலேயே கணிசமாக தொகுதிகளை வென்று ஆரியருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அண்ணா. 

இங்கே இன்னும் சாணக்கியனாக செயல்பட்ட துவங்கினர் ஆரியர்.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் திராவிடநாடு கொள்கையை கைவிட வேண்டும் என சட்டம் இயற்றினர்.

முதலில் ஆட்சியை பிடிப்போம், பின்னர் கொள்கைகளை செயல்படுத்தலாம் என்ற அண்ணாவின் கணக்கு இங்கே பிழைத்து போனது.  

ஒன்று திராவிடநாடு கொள்கைக்காக ஆட்சியை புறக்கணிக்க வேண்டும். அல்லது ஆட்சிக்காக திராவிடநாடு கொள்கையை கைவிட வேண்டும். இரண்டும் முக்கியமானவை. ஆனால் இரண்டையும் கொண்டு இனி பயணிக்க முடியாது. 

கொள்கையா? ஆட்சியா?  - அண்ணா என்ன முடிவு எடுப்பார்? - என திராவிட தலைவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்தது. உலக அரங்கில் கூட விவாதிக்கப்பட்டது.

இறுதியில் அண்ணா அந்த அதிரடி முடிவை அறிவித்தார்.

நாங்கள் திராவிடநாடு கொள்கையை கைவிடுகிறோம்!

அத்தனை திராவிட தலைவர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். தந்தை பெரியாரும் துடித்துப்போனார். 

திராவிடம் வீழ்ந்தது என ஆரியர்கள் கேலிக்கூத்தாடினர்.

பொறுமையாக தேர்தலை சந்தித்தார் அண்ணா. தேர்தல் வெற்றிக்கு பின்னர் எல்லோருக்கும் மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

சென்னை மாகாணத்தின் இறுதி தீர்மானமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் தீர்மானமாகவும் அது அமைந்தது.

ஆம். தமிழ்நாடு உதயமானது. 

ஆரியர்கள் அதிர்ந்து உறைந்தனர். மாறாக துவண்டு இருந்த திராவிடத் தலைவர்கள் திரண்டெழுந்து கொண்டாடினர்.  

இது திராவிடத்தின் முதல் வெற்றி என தந்தை பெரியார் வானுயர மகிழ்ந்தார். தமிழ்நாடு இது திராவிட நாட்டிற்கான அடித்தளம் என மார்தட்டி சொன்னார். 

திராவிட நாட்டை எதிர்த்த ஆரியருக்கு தமிழ்நாடு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அன்று வரை ஆரியரின் ஆட்சி அடக்குமுறையும், கேலிகிண்டலும் மட்டுமே அனுபவித்த திராவிட இளைஞர்கள் நாங்கள் தமிழ்நாட்டினர், நாங்கள் தமிழர்கள் என உற்சாக கூக்குரல் இட்டனர்.

‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’, ‘தமிழர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என கொண்டாடினர். 

ஆட்சிக்காக திராவிடநாடு கொள்கையை கைவிட்டு பிழைத்த (தவறு செய்த) அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர்மாற்றத்தின் மூலம் பிழைத்துக் (மீண்டும்  சரிசெய்து) கொண்டார். 

இந்த நிகழ்வுக்காக தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழர்க்கே என முழங்கினார். அதற்காக திராவிட நாடு கொள்கையை எந்த இடத்திலும் தந்தை பெரியார் கைவிடவில்லை. தந்தை பெரியார் மட்டுமல்ல அறிஞர் அண்ணாவும் கைவிடவில்லை. 

இதை திரும்ப திரும்ப இருவருமே பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளனர்.
முற்றும்.

No comments:

Post a Comment

Popular Posts