May 8, 2011

தனிநாடு ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை


தமிழர்கள் வரலாற்று ரீதியாக தனிப்பட்டவர்கள். மொழி, பண்பாடு,கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், ஆட்சிமுறை, நன்னெறிகள், கடவுள் கொள்கை என அனைத்திலும் பண்பட்டவர்கள். நாகரீகத்தை தன்னகத்தே கொண்டவர்கள்.

இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியது. இதற்கு உலக அரங்கில் நிச்சயமாக ஒரு தனிநாடு அங்கீகாரம் தேவை.

இது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை.

இந்தியா என்ற நாட்டில் மாநில சுயாட்சி இல்லை. இலங்கையில் சுதந்திரமே இல்லை. இத்தகு நிலையில் தமிழர் பெட்டகங்கள் பாதுகாக்கப்படுமா என்பது கேள்விகுறியே.



இந்தியா என்றா நாடு எப்படி உருவாக்கப்பட்டது? இங்கிலாந்தியர் தங்களுக்கு ஒரு வியாபாரசந்தையாக தானே இந்தியாவை உருவாக்கினார்கள். வியாபாரத்துக்காக உருவாக்கப்பட்ட ஒரு சந்தையில் நியாயமான மனித உணர்வுகளுக்கு எப்படி மதிப்பு இருக்கும்?

இந்த சந்தையை மக்களாட்சி என்ற ஒற்றை கயிற்றில் கட்டியது சாதனை தான். ஆனால் மக்களாட்சி என்ற போர்வையில் தனி இனங்களின் நியாயமான உணர்வுகளை மழுங்க செய்வது எவ்வளவு பெரிய அநீதி?

தமிழர்கள் ஒன்றும் சகமனிதர்களிடம் பழகத்தெரியாத காட்டுமிராண்டிகளோ, ஆட்சிமுறை, அரசியல், கல்வி, வாணிபம், நிர்வாக கட்டமைப்பு இல்லாதவர்களோ அல்லவே. அப்புறம் ஏன் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி தர இந்தியா மறுக்கிறது. 

இந்தியா மாநில சுயாட்சியை மறுப்பதன் காரணம் என்ன? மீண்டும் ஒரு ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட தானே.

இந்தியா என்ற மாட்டு சந்தையில் அடிமாட்டு விலையில் இருப்பதை விட தமிழன் இறப்பது மேல்.

நிச்சயமாக இன்றைய தமிழர் தலைமுறையினர் இதை யோசித்தேயாக வேண்டும்

தமிழன் என்ற உணர்வை விட்டுவிட்டு இந்தியன் என்ற உணர்வு ஏற்கவேண்டும் என்பது எவ்வளவு பெரிய அடக்குமுறை.

முதலில் நான் தமிழன் பின்புதான் இந்தியன். முதலில் இந்தியன் பின்பு தான் தமிழன் என்றால் எப்படி ஏற்க முடியும்?

இந்தியன் என்ற உணர்வு தோன்றி 60 வருடங்கள் தான் ஆகிறது. ஆனால் தமிழர் என்ற உணர்வு தமிழ் மொழி தோன்றியது தொட்டு இருக்கிறது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்தியா என்ன மதிப்பு அளித்துள்ளது? இலங்கை என்ற நாட்டின் நட்புக்காக கொடுக்கும் விலையில் ஒரு துளி சொந்த நாட்டு தமிழர்களுக்கு கொடுத்துள்ளதா?

மாநில சுயாட்சி அதிகாரம் தரப்பட வேண்டும். அது இல்லை என்றால் தனிநாடு அமைப்பது ஒவ்வொரு தமிழனின் பிறப்புரிமை. இது இந்திய இறையாண்மைக்கோ, இலங்கை இறையாண்மைக்கோ எதிரானது அல்ல. இது அம்பேத்கார் இயற்றிய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது. 

இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றால் இந்தி மட்டுமல்ல இந்தியாவின் அடக்குமுறைகளும் துரத்தியடிக்கப்படவேண்டியது தான். 

இந்திய ஒரு சுதந்திரமான நாடுதான். போற்றி புகழதக்க இறையாண்மை கொண்டது தான். ஆனால் சமீபகாலத்தில் அதன் செயல்பாடுகள், குறிப்பாக தமிழர்க்கு எதிரான செயல்பாடுகள் ஒரு அடக்குமுறை போன்றே தோன்றுகிறது.

உணர்வு ரீதியாக சுதந்திரம் அற்றவர்களாக இருக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழர் உள்ளங்களில் எழுந்துள்ள இந்த சந்தேகத்தை போக்க இந்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?

நான் ஏதோ இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதுகிறேன், பிரிவினையை தூண்டுகிறேன். தேச துரோகம் செய்கிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.

நானும் இந்திய குடிமகன் தான். நானும் உணர்ச்சி உள்ள மனிதன் தான். எனக்குள்ளும் சில உணர்வுகள் இருக்கிறது. அது ஒன்றும் அநீதி அல்லவே. அந்த உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாவிட்டால் இந்த நாட்டில் என்ன சுதந்திரம் இருக்கிறது?

இதுவரை அம்பேத்கார் படத்தை பார்க்காதவர்கள் ஒருமுறை பாருங்கள். சுதந்திரம் தர ஆங்கிலேயர் சம்மதித்து விட்டார்கள். ஆனால் காந்திக்கும் அம்பேத்காருக்கும் ஒரு மிகப்பெரிய போராட்டம் நடக்கிறது.

காந்தி உண்ணாவிரதம் இருந்து அம்பேத்காருக்கு நெருக்கடி தருகிறார்.

காந்தி என்ற ஒற்றை மனிதரின் உயிருக்காக எங்கள் உணர்வுகளை புதைக்கமுடியாது என்று தைரியமாக நிற்கிறார் அம்பேத்கார்.

அம்பேத்காரின் கோரிக்கை இது தான். ஒடுக்கப்பட்டவர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கா விட்டால் இந்தியாவே தேவை இல்லை என்பது தான்.

அதையே தான் நானும் இன்று வலியுறுத்துகிறேன். இந்தியாவுக்கு இலங்கை தான்முக்கியம் என்றால் தமிழனுக்கு இந்தியா தேவை இல்லை. 

இந்தியை துரத்திய தமிழனுக்கு இந்தியாவை துரத்துவது ஒன்றும் கடினமல்ல.

எங்கள் கோரிக்கை இதுதான். எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இந்திய இறையாண்மைக்கு மட்டும் மதிப்பளியுங்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவை உண்மையான மக்களாட்சி. அது இல்லை அரசியல் கட்சிகளின் ஆட்சிதான் நடக்கும் என்றால் தமிழர்மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய குடிமக்களுமே மீண்டும் ஒரு சுதந்திரபோராட்டம் நடத்த வேண்டும்.

1 comment:

  1. வெயில் அதிகம் ஆகும்போதெல்லாம் இதுப்போன்று பதிவுகள் உங்களிடம் இருந்து வரும் போல?

    ReplyDelete

Popular Posts