Sep 30, 2014

செயலலிதா உடனடியாக விடுதலையாக 3 வழிகள்

தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

1. ஒரு மாநில முதல் அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாக கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆனையிட்டால் உடனடியாக பெங்களூர் சிறையில் இருந்து செயலலிதா விடுதலையாவார். 

2. செயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை  கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் செயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக செயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.   

ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக முதல்வர் செயலலிதா செய்த படிப்படியான தவறுகள்:

1. நீதிபதியிடம் தான் தற்போது தமிழக முதல் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் பதவியை ராசினாமா செய்து விட்டு இந்த நீதிமன்றத்தில் சரணடைகிறேன் என்று கூறியிருக்க வேண்டும். 

2. தீர்ப்பின் நகலை பெற்றுக்கொண்டு உடனடியாக சென்னை திரும்பி கவர்னரிடம் ராசினாமா கடிதம் கொடுத்திருக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேல்முறையீட்டு வழிகளை ஆய்வு செய்திருக்க வேண்டும்.

3. செயலலிதா தமிழக முதல் அமைச்சராகவும், கூடவே இசட் பிரிவு பாதுகாப்பிலும் உள்ளார். எனவே கீழமை நீதிமன்ற நீதிபதி வலுக்கட்டாயமாக செயலலிதாவை கைது செய்திருக்க முடியாது.

 அதிமுக வழக்கறிஞர்கள் பதட்டத்தில் கோட்டை விட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

4. தீர்ப்பை எதிர்ப்பது, 100 கோடி அபராதத்தை எதிப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது தவறு!. நீதிபதி தனது அதிகார வரம்பை மீறி இருக்கிறார் என்ற சட்டப்பிரச்சனையை தான் அதிமுக வழக்கறிஞர்கள் கையில் எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது சாமீனுக்காக அலைவது மிக முட்டாள் தனமான நடவடிக்கை!

5. தமிழக முதல் அமைச்சர் கைது செய்யப்பட்டவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் உடனடியாக ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கலாம். இதனால் கவர்னர், மாநில காவல் ஆணையர், தலைமை செயலாளர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருப்பார்கள். (செயலலிதா கைது செய்யப்பட்ட விடயம் அடுத்த நாள் தான் கவர்னருக்கும் தலைமை செயலருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்)

இங்கு பலருக்கும் ஒரு சந்தேகம் வரலாம். குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் உடனடியாக செயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார். எனவே மேலே சொல்லபடும் காரணங்கள் எல்லாம் குழந்தை தனமானது எனலாம்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் செயலிதா முதல்வர் பதவியை இழக்கிறார் என்பது சரிதான். ஆனால் அதற்கு வழிமுறைகள் இருக்கிறது. முறையாக கவர்னர் தான் இதை அறிவிக்க வேண்டும். அல்லாமல் கீழமை நீதிமன்ற நீதிபதி அல்ல. தன்னிச்சையாக பதவிஇழக்க முதலமைச்சர் பதவி ஒன்றும் கிள்ளுக்கீரை அல்ல. அதற்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. அதை கர்நாடக நீதினமன்றம் காலில்போட்டு மிதித்துள்ளது. இதை தமிழகம் இன்னும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது தான் கேவலமாக உள்ளது.

முதலமைச்சர் பதவியை கீழமை நீதிமன்ற நீதிபதி பறிக்க முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தமிழக அரசுக்கு நிகழ்ந்த இதே நிலையை இந்திய அரசுக்கு நிகழ்வதாக ஒப்பிட்டு பாருங்கள். பிரதமரை பதவிநீக்கம் செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது? சனாதிபதிக்கா? அல்லது கீழமை நீதிமன்ற நீதிபதிக்கா?

 மெத்த படித்த கனவான்களே இன்னும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேவலப்படுத்தாதீர்கள். உலகம் உங்களை பார்த்து உரக்க சிரிக்கிறது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் செயலலிதாவுக்கு எதற்கு சிறையில் சொகுசு அறை? இதிலிருந்தே தெரியவில்லையா சட்டம் சில விதிமுறைகளை வைத்திருக்கிறது என்று!

கர்நாடக வழக்கறிஞருக்கு முறையாக ஆணை கிடைக்கவில்லையாம் அதனால் செயலலிதா சாமீன் வழக்கில் வாதாட முடியாது என்கிறார். அதை அனைவரும் சரி என ஒப்புக்கொள்கிறோம். அதே போல  முறையாக கவர்னருக்கு அறிவித்து விட்டு தானே செயலிதாவை கைது செய்திருக்க வேண்டும். அதை ஏன் கேள்வி கேட்க தயங்குகிறீர்கள்? 

தூக்கு தண்டனை விதித்தவுடன் நீதிபதியே எமனை போல தூக்கு கயிறை வீசி குற்றவாளியை அங்கேயே கொல்வது போல உள்ளது நீதிபதி குன்காவின் செயல். நல்லவேளை நீதிபதி குன்கா செயலிதாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கவில்லை. அப்படி விதித்திருந்தால் உடனே தன் முன் இருக்கும் சுத்தியலை எடுத்து வீசி கொன்றிருப்பாரோ என்னவோ?  

ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக முதலமைச்சர் என்ற மாண்புமிகு பதவியை கேவலப்படுத்தாதீர்கள். 

ஒரு நிறுவனத்தில் எடுபடி வேலை செய்யும் நபரை பணிநீக்கம் செய்யவே விதிமுறைகள் இருக்கிறது. அதைவிட கேவலமானதா முதல் அமைச்சர் பதவி? கொஞ்சமாவது அறிவுபூர்வமாக யோசியுங்கள்!

Sep 29, 2014

தமிழக கவர்னர் கோமாளியா?

இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிகூத்தாக்கி உள்ளார் நீதிபதி குன்கா. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்துள்ளார். சாமான்யனுக்கு கூட தெரியும் சட்டம் குன்காவுக்கும் தெரியவில்லை, கவர்னர் ரோசையாவுக்கும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் எதற்காக இந்த பதவியில் இருக்கிறார்கள்?

கவர்னரால் பதவிப்பிரமானம் செய்து வைக்கப்பட்ட அமைச்சரவையை கலைக்க குன்காவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? முதலமைச்சரை ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதி கைது செய்ய முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தன்னால் பதவி பிரமாணம் செய்துவைத்த முதல் அமைச்சரை கைது செய்த நீதிபதியை கண்டித்து, கைது நடவடிக்கையை ரத்து செய்திருக்க வேண்டும் தமிழக ஆளுனர். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரும் ஒரு பொம்மை போலவே செயல்பட்டு விட்டார். இவர் கவர்னர் பதவிக்கே தகுதி அற்றவர் என்பது எனது கருத்து.   

இது மக்களாட்சி நடைபெரும் நாடு. இங்கு நீதிபதிகள் உச்ச அதிகாரிகள் அல்ல. செயலலிதாவுக்கு தண்டனை விதித்ததை குற்றம் சொல்லவில்லை. கைது செய்த முறையை தான் குற்றம் சொல்கிறோம். 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் செயலலிதா முதல்வர் பதவி வகிக்கும் தகுதியை இழக்கிறார். எனவே அவரது பதவியை பறிக்க வேண்டும் என கவர்னருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். அதுதான் முறை. கவர்னர் தான் செயலலிதாவை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். பின்னர் ஒரு சாதாரண குடிமகனாக செயலலிதாவை சிறையில் அடைத்திருக்க வேண்டும். இது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம். 

ஆனால் நீதிபதி தானே கவர்னரின் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். கீழ்தரமான சர்வாதிகாரி போல குன்கா செயல்பட்டிருக்கிறார். இதனால் தமிழக அரசு உடனடியாக செயல் இழந்தது. இது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை யோசித்து பாருங்கள். இதே நிலை நாளை இந்திய அரசுக்கும் வராது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் ஒரு கீழமை நீதிமன்றம் சிறையில் அடைத்தால் இந்திய அரசு என்னவாவது? உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு என்னவாவது? பிரதமரை பதவி நீக்கம் செய்ய சனாதிபதிக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அதுபோல முதல் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அல்லாமல் கீழமை நீதிபதிக்கு அல்ல.

சட்டம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் அப்போது தான் சட்டத்தை பொதுமக்கள் மதிப்பார்கள். மரியாதை இல்லாத சட்டத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். முதல் அமைச்சரை கீழமை நீதிபதி பதவிநீக்கம் செய்யும் சட்டம் மிக தவறானது. 

48 மணிநேரம் தமிழக அரசு செயல் இழந்ததற்கு கவர்னர் ரோசையாவே முழுபொறுப்பு, கடமை தவறிய ரோசைய்யாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிகார அத்துமீரலில் ஈடுபட்ட நீதிபதி குன்காவை நீதிமன்ற கூண்டில் ஏற்ற வேண்டும். தமிழக முதல் அமைச்சரை உடனடியாக விடுவித்து, முறையாக செயலலிதாவை கைது செய்ய வேண்டும். 

சட்ட வல்லுனர்கள் இந்த விடயத்தை ஏன் கவனிக்க தவறுகின்றனர் என்பது புறியவில்ல. தெரிந்தவர்கள் சொல்லுகள். 

Sep 28, 2014

கர்நாடகாவின் அயோக்கியத்தனம்

தமிழக முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இந்திய சட்டத்தின் அயோக்கியத்தனமா? அல்லது கர்நாடக நீதித்துறையின் அயோக்கியத்தனமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரை எந்தவித முன் அறிவிப்பும், காலஅவகாசமும் இன்றி சிறையில் அடைத்தது மிகப்பெரிய முட்டாள் தனம். தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மானநட்ட வழக்கு தொடர வேண்டும்.  நீதிபதி குல்கார்னியை நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசையும் மக்களையும் அவமதித்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம், தண்டனை அறிவிக்கப்பட்டதும் செயலலிதா தமிழக முதலமைச்சர் பதவியை இழக்கிறார். அவர் சாதாரண மக்களிள் ஒருவர் தான் என நினைக்கலாம். ஆனால் அது தவறு. முதலில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். ஒருவர் மீது குற்றம் சுமத்துவதற்கும், வழக்கு தொடுப்பதற்கும் தான் சட்டம் அனைவருக்கும் சமம். ஆனால் ஒருவரை கைது செய்வதற்கு சட்டம் சில வழிமுறைகளை வகுத்துள்ளது. ஒரு அமைச்சரை கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதியை பெற வேண்டும். 

ஊழல் வழக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள் தான் உடனடியாக இழக்கப்படும். ஆனால் அமைச்சர் பதவி பறிக்கப்படமாட்டாது. செயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டதும் தனது எம்.எல்.ஏ., பதவியை தான் இழக்கிறாரே தவிர, முதல்அமைச்சர் என்ற பதவியை அல்ல. எம்.எல்.ஏ., பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு அமைச்சரை பதவிநீக்கம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. அதே போல ஒரு  முதல் அமைச்சரை கவர்னர் மற்றும் சபாநாயகரின் அனுமதி இன்றி சிறைவைக்க நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. 

செயலலிதா விசயத்தில் மிகப்பெரிய சட்ட மீறுதல் நடந்துள்ளது. இதை சட்ட வல்லுநர்கள் கவனிக்க வேண்டும். செயலலிதாவை சிறையில் அடைத்ததற்கு கர்நாடக நீதித்துறை நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். கர்நாடக நீதிபதி அதிகார அத்துமீரலில் ஈடுபட்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

செயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்தது, தண்டணை அறிவித்தது இவைகளை நான் குறை சொல்லவில்லை. அது சரியா தவறா என உச்சநீதிமன்றம் முடிவு செய்யட்டும். ஆனால் தமிழக முதல்வரின் காரை பறிமுதல் செய்து, அரசு சின்னங்களை பறித்தது, தமிழக முதல்வரை கைது செய்து சிறையில் அடைத்தது, தமிழக அமைச்சரவையை முடக்கியது., ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்த செயலாகும். எம்.எல்.ஏ., எம்.பி., க்களுக்கும் முதல் அமைச்சருக்கும் உள்ள வித்தியாசத்தை நீதிபதி புரிந்துகொள்ள தவறிவிட்டார். 

செயலலிதாவை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் தண்டனைக்கு உட்படுத்த ஆளுநருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டுமே. ஆனால் நீதிபதி தானே தமிழக அரசு சின்னங்களை பறித்தது, சிறையில் அடைத்தது என தன் அதிகார வரம்பை மீறி இருக்கிறார். 

தமிழக அமைச்சரவையை முடக்குவது என்பது ஒட்டுமொத்த தமிழக அரசையே முடக்குவதற்கு இணையானது. இதற்கு ஆளுநர், குடியரசு தலைவரிடம் முறையான ஒப்புதலை பெற நீதிபதி தவறி விட்டார். இந்த விடயத்தில் தமிழக ஆளுநர் மற்றும் சபாநாயகர் த¬லையிட்டு கர்நாடக நீதிபதியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 

தமிழக மக்களுக்கு  ஒரு வேண்டுகோள் : செயலிதா அவர்கள் குற்றவாளியாக இருக்கட்டும். தண்டிக்கப்பட வேண்டியவராக இருக்கட்டும். ஆனால் அதற்காக கர்நாடக நீதிபதி தமிழக அரசை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.  இதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இந்த விடயத்தை தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.

Sep 4, 2014

தமிழகத்தை இலங்கையுடன் இணைத்து விடலாம்

தனிஈழம், கச்சத்தீவு, மீனவர் பிரச்சனை, தமிழ்தேசியம் இப்படி தமிழர்களின் தீராத பிரச்சனையை தீர்க்க இதை விட சிறந்த யோசனை இருக்குமா?. 

  தனிஈழம், கச்சத்தீவு குறித்து வீட்டில் குடும்பமாக விவாதித்துக் கொண்டிருந்தோம்.  இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் ஒன்பது வயது மகன் அறிவு பட்டென ஒரு யோசனையை சொன்னான். 
  கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதை விட, தமிழகத்தை இலங்கையுடன் இணைத்துவிடலாமே!. குழந்தையின் இந்த எதார்த்த பேச்சு எங்களை வேடிக்கையாக யோசிக்க வைத்தது.  

  தமிழகத்தை இலங்கையுடன் இணைத்தால் தமிழர்களின் அத்தனை பிரச்சனைகளும் தீரும் என்று நினைக்கிறேன். தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் சிங்களவர்களோ 2 கோடி பேர் மட்டுமே. தமிழகத்தை இலங்கையுடன் இணைப்பதால் தமிழர்கள் பெரும்பான்மையினராகி விடுவோம். சிங்களவர்கள் சிறுபாண்மையினராகி விடுவார்கள். அப்புறம் இலங்கையில் தனிநாடு கேட்டு சிங்களர்கள் தான் போராட வேண்டும். அதை இனத் தீவிரவாதம் என்று ஒடுக்க பெரும்பான்மையினராக இருக்கும் தமிழகர்களுக்கு மிக எளிதானது. 

 தமிழர்கள் தான் இலங்கையின் அத்தனை அதிகாரங்களிலும் இருப்பார்கள். சிங்களவர் எந்த காலத்திலும் இலங்கையின் சனாதிபதியாக முடியாது. தமிழக முதல்வர் சனாதிபதியாகவிடுவார். இந்தியாவில் சிறுபான்மையினராக இருப்பதை விட இலங்கையில் பெரும்பான்மையினராக இருக்கலாமே. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பெரும்பாண்மையினர் கருத்து தானே எடுபடுகிறது. தமிழர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்துப் பாருங்கள்.

 இந்த கருத்துக்காக தடா, பொடா, குண்டர், தேசதுரோகம் எதுவரும் என்று தெரியவில்லை. பயம் இருக்கிறது. ஆனாலும் பயத்தை தான்டி மன உணர்வுகள் வெளிப்பட்டு விடுகிறது. 

 இந்த கருத்துக்கள் யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் மன்னித்துக்கொள்ளுங்கோள். இப்படி யோசிப்பது தேச துரோகம் என்றால் அதற்கும் சேர்த்து ஒரு மன்னிப்பு. 

‘‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகமிக திறமைசாலிகள், ஆனால் வாய் தான் கொஞ்சம் நீளம்!’’ தமிழர்களைப் பார்த்து சும்மாவா சொல்லி வைத்தார்கள்?  இந்தியா வாழ்க. இலங்கை வாழ்க!, இன்னும் ஒரு படி மேலேபோய் இலங்கையின் இறையாண்மையும் வாழ்க!! அப்புறம் என்ன? விடுங்க சாமி என்னை! எதோ கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன். 

பின் குறிப்பு : பெரும்பாண்மையினர் சிறுபாண்மையினரை அடக்கும் ஆட்சி முறைக்கு எதிரான உதாரண கட்டுரை மட்டுமே இது. மாறாக வேறு அர்த்தம் கொண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு.

Popular Posts