Jul 9, 2012

கூச்சல் கலவரம் அமைதியுடன் உயிர்த்தது உயிர்

முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு சுமூக தீர்வுகளை அலசும் மக்கள் மேடையை அமைத்திருந்தோம். இந்த உயிர் கூட்டமைப்பு கோட்டயம் நூலக அரங்கில் 7தேதி காலை 11 மணிக்கு துவங்கியது. கேரள தமிழகத்தில் இருந்து சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் பலர் வந்திருந்தனர்.

பாதுகாப்பு கருதி கம்பம் அப்பாசு அவர்கள் கேரள செல்ல தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். தடையும் செய்துவிட்டனர். கம்பம் அப்பாசு அவர்களின் வாழ்த்து செய்தியுடன் தமிழ்மலர் குழு துணிவுடன் கேரளா சென்றது. 


கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கம்பம் அப்பாசு தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இது ஒரு நல்ல முயற்சி, இது வெற்றிபெற வேண்டும். அடுத்த கூட்டம் மதுரையில் நடத்தலாம். அதில் நிச்சயம் நான் கலந்துகொள்வேன் என்று கம்பம் அப்பாசு அவர்கள் தெரிவித்தார்.

கூட்டம் துவங்கி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கூட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஆளும் காங்கிரசு கட்சியின் எம்.எல்.ஏ.,பல்ராமின் அறிக்கை வாசிக்கப்பட்டது. புதிய அணை என்பது கேரள மக்களை ஏமாற்றும் வேலை. இது மக்கள் மத்தியில் திணிக்கப்பட்ட ஒன்று. அரசிலுக்கும் வியாபாரத்துக்குமாக முல்லைப்பெரியாறு பிரச்சனையைய அரசியல்வாதிகள் கையாள்கிறார்கள். புதிய அணை ஒருபோதும் தேவை இல்லை. என்பதை பல்ராமன் பதிவு செய்தார்.  கேரளாவின் பல எழுத்தாளர்களும் புதிய அணை ஒரு ஏமாற்று வேலை என்று பேசினர்.

12 மணியளவில் கேரள மீடியாக்கள் முல்லைப்பெரியாறு போரட்டக்குழு என்ற பெயரில் 20 பேருடன் வந்தார்கள்.

மேடைக்கு பின்னும், சுற்றிலும் கேமராக்களை உயர்த்திப்பிடித்து நின்றார்கள். கேமராக்கள் தயாரானதும் வந்த 20 பேரும் கூட்டத்திற்கு எதிராக கோசம் எழுப்பினார்கள். சி.பி.ரோய் ஒழிக, ஆனந்த் வெளியேறுக. கேரள மக்களுக்கு எதிரான இந்த கூட்டத்தை தடை செய்க என்று கூச்சலிட்டார்கள். தமிழ்மலர் குழுவை முற்றுகையிட்டு தாக்க முற்பட்டார்கள். பல மலையாள தோழர்கள் எங்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றார்கள். 

சமயம் பார்த்து காத்திருந்த காவல்துறையினர் கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதியை தடை செய்தார்கள். பிரச்சனை பெரிதாகமல் இருக்க ஆனந்தை வெளியேற்றுவது குறித்து பரிசீலிக்க சொன்னார்கள். ஆனால் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கூட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தோம். 2 மணி நேரம் கூச்சல் நீடித்தது. தங்கள் தேவை முடிந்ததும் மீடியாக்கள் அவரவர் அலுவலகம் நோக்கி புறப்பட்டன. மீடியாக்கள் போன பின்பு அந்த 20 பேரும் நடையை கட்டினர்.

பின்னர் ஒலிப்பெருக்கி இல்லாமலே எங்கள் கூட்டம் தொடர்ந்தது.
சி.பி.ரோய்
சி.பி.ரோய் தன் கருத்தை அழமாக பதிவு செய்தார். உடனடி மற்றும் நிரந்தர தீர்வு புதிய சுரங்கம் மட்டுமே என்று வலியுறுத்தினார். ஆனந்த் பேசும்போது மீண்டும் அரங்குக்குள் நுழைந்த சிலர் தொடர்ந்து கூச்சல் இட்டுக்கொணடே இருந்தார்கள். உரத்த குரலில் பேசிய ஆனந்த் எதிர்ப்பாளர்களை நேரடி விவாதத்தில் எதிர்கொண்டார்.


பின்னர் தமிழ் மலர் ஆசிரியர் உமாமகேசுவரி பேசியது ;
அணை  பலமாக உள்ளது. 142 அடியாக நீரை உயர்த்திக்கொள்ளலாம்  என 2002ல் சி.டபிள்யு.சி 2006ல் உச்சநீதிமன்றம். 2012ல் உயர்மட்ட குழுவும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழகம் தாராளமாக 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்திக்கொள்ள முடியும். தமிழக காவல்துறையை அனுப்பி இதை செயல்படுத்தவும் நீதிமன்றத்தின் அனுமதி உள்ளது. ஆனால் தமிழகம் மிகுந்த மனிதநேயத்துடன் நடந்துகொள்கிறது. கேரள மக்களின் பய உணர்வுக்கு மதிப்பளிக்கிறது. அதனால் தான் மாற்று தீர்வான சுரங்க கால்வாய் திட்டத்தை பரிசீலிக்கிறது. இதை கேரளா பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு ஈகோ பிரச்சனையாக பார்க்காமல் இரு மாநில நல்லுரவை மட்டுமே பார்க்க வேண்டும்.

இன்று இடுக்கி அணைக்கு 50 வயது. இந்த அணைக்கும் 100 வயது ஆகும். அப்போது அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவீகளா அல்லது தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்துவீர்களா? அதையே தான் முல்லைபபெரியாறு விசயத்திலும் தமிழகம் செய்கிறது.

தமிழ் மலர் ஆசிரியர் உமாமகேசுவரி
புதிய சுரங்க திட்டத்தை வலியுறுத்தும் எங்களை தமிழக மக்கள் தங்களுக்கு எதிரானவர்களாக தான் பார்க்கிறார்கள். காரணம் அவர்களுக்கு 142 அடி நீரை உயர்த்திக்கொள்ள உரிமை இருக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சனையை உணர்ச்சிபூர்வமாக அணுகும் திரு. வைகோ, நெடுமாறன், கம்பம் அப்பாசு போன்றவர்கள் கூட புதிய சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செயலலிதா தலைமையிலான தமிழக அரசும் இதற்கு எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இந்த சந்தர்ப்பத்தை கேரள அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


எங்களை தாக்குவதாலோ, எங்களுக்கு எதிராக கோசம் எழுப்புவதாலோ, சரியான தீர்வை மறைத்துவிட முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் ஈகோ பார்ப்பதை விட்டுவிட்டு. மக்கள் மன்றத்தில் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளலாம். இன்று வரை எந்த நதிநீர் பிரச்சனையும் நீதிமன்றம் வாயிலாக தீர்க்கப்பட்டதில்லை. மக்கள் மேடை பல நதிநீர் பிரச்சனைகளை தீர்த்துள்ளது. அதற்கான ஒரு துவக்கம் தான் இந்த உயிர். இது நிச்சயம் உயிரித்து உயர்ந்து நிற்கும்.

நன்றி.

ஆனந்த் பேசியது அடுத்த பதிவில்.

times of india

deccan chronicle

The hindu

tamil.oneindia

newindianews



Jul 3, 2012

உயிர் தமிழ் மலையாள மக்கள் கூட்டமைப்பு


அரசாங்கங்கள் புறம்திருப்பி நிற்கின்றன!...
அரசியல்கட்சிகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதே இல்லை!...
பொதுமக்கள் நாம் ஓரு மேசையின் முன்பு இருந்து 
பேசித்தீர்த்துக்கொள்வது அல்லாமல் வேறு என்ன வழி?...
பொதுமக்கள் தமக்குள் பேச துவங்கும்போது
இயல்பாகவே பிறக்கிறது மக்கள் தீர்வு!

அறிவுக்களஞ்சியமான கோட்டயம் பொது நூலகத்தில்
‘‘உயிர்’’ என்ற அறிமுகத்தில்
தமிழ், மலையாள எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும்
ஒரு பகல் ஒன்று கூடுகிறார்கள்.

இது ஒரு போர் அல்ல!..
அதனால் இங்கு எதிராளிகள் இல்லை!..
கிழக்குக்கு மேற்கு எதிராளி என்று யார் சொன்னது?..
ஆனாலும் நாம் பிரிந்து நின்று சவால் விட்டோம்!..
பரசுபரம் மோதிக்கொள்ள கொம்பு சீவிக்கொண்டோம்!
இரத்ததின் நிறத்தை கூட காண முற்பட்டோம்!
அப்போதும் கூட ஒரு மேசையும்,
அதனை சுற்றிலும் பல நாற்காலிகளும் ஆளில்லாமல் கிடந்தது...

ஒரு வம்சத்தின் வேர்களாய் இருந்தோம் நாம்!...
மொழியிலும், பண்பாட்டிலும், வாழ்க்கையிலும்
பொதுநிலையை பங்கிட்டுக்கொண்டவர்கள்.,
இங்கே வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்போம்.

ஒரு மேசையின் சுற்றும் இருந்து
தமிழ் மலையாள எழுத்தாளர்களும்
சிந்தனையாளர்களும், விவசாயிகளும் பேச துவங்குகிறார்கள்!
எவ்வளவு முயன்றும் தீராத முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு
சுமூகமான தீர்வுகளை அலசுகிறார்கள்!

கேரள மக்களுக்கு உயிர் பயம்!
தமிழக மக்களுக்கு உயிர் ஆதாரம்!
இவ்விரண்டையும் கருத்தில் கொண்டு
சுமூக தீர்கவுகளை அலசிப்பார்ப்போம்...

நமது பசுமை கனவுகளுக்கு நிகழ்காலம் கொடுப்போம்!
கேரள மக்கள் பயப்பீதியில் இருந்து மீள நம்பிக்கை தருவோம்!

இந்த சந்திப்பு ஒரு துவக்கம் மட்டுமே...

கருகிக்கொண்டிருக்கும் உறவுகளுக்கு உயிர்கொடுப்பதால்,
இந்த சந்திப்பு ‘உயிர்’ என்று அறியப்படுகிறது!!

எவ்வளவு வாழ்த்தினாலும் தீராத இந்த சந்திப்பு,
வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும்!.

முதல் சந்திப்பு

கோட்டயம் பொது நூலகத்தின்
கே.வி.எசு. மேனன் அரங்கம்
2012 சூலை 07 சனிக்கிழமை
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
நாம் ஒரு மக்கள் மேடையை கட்டமைப்போம்...

தொடர்புக்கு :
சிவிக்சந்திரன் : 09633751353
சி.பி. ரோய் : 09447200707
சி.ஆனந்த் : 09787678939

Popular Posts